games

img

தேசிய தடகள வீராங்கனை ஷீனாவுக்கு வீடுகட்ட ரூ. 18 லட்சம் நிதியுதவி.... கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு வழங்கியது...

திருவனந்தபுரம்:
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஷீனா வீடு கட்டிக்கொள்வதற்கான கேரள அரசின் நிதியுதவி ரூ. 18 லட்சத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன் வழங்கினார்.

திருச்சூர்  சேலக்கரயைச் சேர்ந்தவரான ஷீனா, டிரிபிள் ஜம்பில் தங்கம் வென்ற வீராங்கனை ஆவார். புவனேஸ்வரில் நடந்த ஆசிய விளையாட்டு மற்றும் ஈரானில் நடந்த ஆசிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.
தேசிய விளையாட்டில் வென்ற பிறகு ஷீனாவின் நிலை வெளி உலகுக்கு தெரியவந்தது. இந்த சூழ்நிலையில், ஷீனாவுக்கு யு.ஆர். பிரதீப் எம்எல்ஏ வீட்டுக்கான பணம் ஒதுக்கீடு செய்ய முயன்றார். வீட்டைக் கட்டுவதற்கு நிதியும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் செயல்முறை தாமதமானது. இதையறிந்த தொழில் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன் பணத்தைப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து செயல்முறை விரைவுபடுத்தப்பட்டு பணம் வழங்கப்பட்டுள்ளது.

ஷீனா தற்போது வேளாண் துறையில் பணியாற்றி வரும் நிலையில், அரசின் உதவி குறித்து பேசிய அவர், வீட்டிற்கு பணம் ஒதுக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்து வீட்டின் கட்டுமானத்தைத் தொடங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

;