games

img

டோக்கியோ ஒலிம்பிக் இன்று துவக்கம்....  

கடந்த ஆண்டு நடைபெறவிருந்த 32-வது ஒலிம்பிக் தொடர் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, வெள்ளியன்று (ஜூலை 23) மாலை 4:30மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. 

தொடர் நடைபெறும் காலம்: 16 நாட்கள் (ஜூலை 23 - ஆகஸ்ட் 8) 

தொடங்கும் நேரம்: இந்திய நேரப்படி மாலை 4:30 மணி 

மொத்த விளையாட்டுகள் : 33 (50 துறைகள்) 

துவக்கி வைப்பவர் : ஜப்பான் பேரரசர் நருகிட்டோ

விளையாட்டுப் பிரிவுகள் : 339 

கலந்து கொள்ளும் நாடுகள் : 206 

பங்கேற்கும் வீரர்கள் : 11,238 (தோராயமாக)

                           **************

இந்திய கொடி

டோக்கியோ ஒலிம்பிக் துவக்க விழாவில், நமது தேசிய கொடியை மகளிர் குத்துச்சண்டை வீராங்கனையும், உலக சாம்பியனுமான மேரி கோம் மற்றும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் மன்ப்ரீத் சிங் ஆகியோர் கையில் ஏந்துகின்றனர். இறுதி நிகழ்வில் இந்திய அணியின் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசிய கொடியை கையில் ஏந்தும் பெருமையை பெறுகிறார்.  

                           **************

இந்தியா 127 

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 127 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி அதிகபட்ச வீரர் - வீராங்கனைகளின் எண்ணிக்கையுடன் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.  

                           **************

18 

இந்திய அணி வீரர் மற்றும் வீராங்கனைகள் மொத்தம் 18 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.  

                           **************

இந்திய அணியின்  பதக்க வாய்ப்பு 

இந்திய அணி துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை, வில்வித்தை  ஆகிய பிரிவுகளில் பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது. டென்னிஸ் பிரிவில் சானியா மிர்சா மட்டுமே அனுபவத்துடன் களமிறங்கு வதால், டென்னிஸ் பிரிவில் இந்தியாவிற்கு பதக்க வாய்ப்பு மிகவும் குறைவு தான். 

                           **************

வெறும் 6 அதிகாரிகள் 

கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் நாடுகளில் இருந்து அதிகபட்சமாக 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கின்றனர். இந்திய அணி சார்பில் 6 அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

                           **************

ஒலிம்பிக் இன்று தான் தொடங்குகிறதா?

32-வது ஒலிம்பிக் தொடரின் துவக்க விழா வெள்ளியன்று மாலை தான் துவங்குகிறது. ஆனால் செவ்வாயன்றே ஒலிம்பிக் தொடர் தொடங்கிவிட்டது. கால்பந்து மற்றும் மென்பந்து (சாப்ட் பால்) ஆகிய விளையாட்டுகளின் தொடக்க சுற்று ஆட்டங்கள் தொடங்கி விட்டன. 

                           **************

எந்த நாடுகள் டாப் 3 பெரும் 

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா, சீனா, போட்டியை நடத்தும் ஜப்பான், ரஷ்யா, பிரிட்டன்,ஜெர்மனி ஆகிய நாடுகள்  ஆதிக்கம் செலுத்தும். முதல் மூன்று இடங்களில்  அமெரிக்கா, சீனா,  ஜப்பான் அல்லதுரஷ்யா ஆகிய நாடுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

                           **************

இந்தியாவில் எந்த சேனலில் பார்க்கலாம்....

சோனி ஸ்போர்ட்ஸ் நெட்ஒர்க்கான சோனி டென் 1 மற்றும் 2, சோனி டென் எச்.டி சேனல்களில் கண்டு ரசிக்கலாம். அரசு கேபிள், சன் டைரக்ட் என அனைத்து செட் ஆப் பாக்ஸ்களிலும் இந்த சேனல் உள்ளது. 

                           **************

பாரா ஒலிம்பிக் எப்போது? 

மாற்றுத் திறனாளி களுக்கான போட்டி தொடர் பாரா ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. தமிழகத்தின் ஒலிம்பிக் நாயகனும், ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான  மாரியப்பன் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.  

                           **************

ஒலிம்பிக் வேண்டாம்...  ஜப்பானில் தொடரும் போராட்டம்....  

கொரோனா கொடிய காலத்தில் மக்களின் உயிரை விட விளையாட்டு முக்கியமா? என்ற கேள்வி பதாகையுடன் ஒலிம்பிக் தொடர் நடைபெறும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது. சில இடங்களில் சிறுவர்கள் முன்னிலையில் ஒலிம்பிக் வேண்டாம் என்ற கோஷத்துடன் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

                           **************

87 பேருக்கு கொரோனா 

ஒலிம்பிக் கிராமத்தில் 3 வீரர்கள், 17 போட்டி அமைப்பாளர்கள் என  இதுவரை மொத்தம் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. 

                           **************

ஸ்பான்சர்ஸ் 83  

சர்வதேச அளவில் புகழ்பெற்ற அலிபாபா (சீனா), பிரிட்ஜ்ஸ்டோன் (ஜப்பான்), கோகோ கோலா (அமெரிக்கா), இன்டெல் (அமெரிக்கா), பனாசோனிக் (ஜப்பான்),சாம்சங் (தென் கொரியா), டொயோட்டா (ஜப்பான்) ஆகிய முன்னணி நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்துள்ளன. 

தொகுப்பு : எம்.சதீஸ்குமார்

;