games

img

வில்வித்தையின் ‘பீனிக்ஸ்’ பாவை...

“மூலை முடுக்குகளான குக்கிராமங்கள், சின்ன சின்ன நகரங்களிலிருந்து உருவாகும் வீரர்கள் தங்களது திறமை, அர்ப்பணிப்பு, உறுதியால் மிகப்பெரிய சாம்பியன்களாக ஜொலித்து வருகின்றனர். அத்தகையோரில் சென்னையை சேர்ந்தவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வாள்சண்டை வீராங்கனையுமான பவானி தேவி, மகாராஷ்டிராவில் கூலித் தொழில் செய்து வரும் குடும்பத்தின் பிரவீன் ஜாதவ், ஹாக்கி வீராங்கனை நேஹா கோயல், உத்தரப் பிரதேசம் பிரியங்கா, பனாரஸ் ஷிவ்பால் சிங் ஆகியோரது வாழ்க்கை நமக்கு ஊக்கமும், உத்வேகமும் அளிக்கிறது. அந்த வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஒரு ஆட்டோத் தொழிலாளியின் மகள் தீபிகாகுமாரியின் வாழ்க்கைப் பயணமும் மேடு, பள்ளம் என கரடுமுரடான அவரது சாதனை பயணத்தை பார்ப்போம்.

வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலமான ஜார்கண்ட், கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் சொந்த மாநிலம் என்றாலும் தோனியை போலவோ, சானியா மிர்சா, பி.வி.சிந்து போலவோ கோடிகளை குவிக்கவில்லை என்றாலும், அவர்களுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல  என்பதை நிரூபித்திருக்கும் தீபிகா குமாரி, விளையாட்டு உலகமே வியக்கும் வகையில் உலக கோப்பையில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று மீண்டும் உலகின் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்திருக்கிறார்.ராஞ்சியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராத்து சட்டி கிராமம்தான் தீபிகா குமாரியின் சொந்த கிராமம். பிறந்து வளர்ந்தது அனைத்தும் அங்குதான். குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக தந்தை ஷிவ்நாராயணன் மஹாதோ ஆட்டோ ஓட்டி வருகிறார். ராஞ்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய் கீதாவுக்கு செவிலியர் பணி கிடைத்தும் குடும்பத்தின் வறுமையை போக்க முடியவில்லை.

ஒரு பொருளை குறிபார்த்து அடிப்பதில் கெட்டிக்காரியாக வலம் வந்து கொண்டிருந்த  தீபிகாகுமாரியிடம் வில், அம்பு எதுவும் கிடையாது. ஆனாலும், தனது இலக்கை எட்ட அந்த சிறுவயதில், வில் மற்றும் அம்புக்கு மாற்றாக கற்களை பயன்படுத்தி அடிப்பது அவரது இயல்பு. தீபிகா குமாரியின் அசாத்திய திறமையை பார்த்த பலரும் வியந்தனர். அதில், அவரது உறவுக்கார பெண் ஒருவர், மூங்கிலைக் கொண்டு வில், அம்புகளை வடிவமைத்து கொடுத்து பயிற்சிக்கும் உதவியிருக்கிறார்.
மகள் ஒரு மருத்துவராக வேண்டும் என்பது தாய் கீதாவின் கனவாக இருந்தது. இருப்பினும், மகளது ஆசையை நிறைவேற்ற பல நேரங்களில் குடும்பத் தேவைகளை தியாகம் செய்தார். தினமும் மூன்று வேலையும் உணவு கிடைக்கும் என்பதால், ராஞ்சியில் இருந்த பழங்குடியின விளையாட்டுப் பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.ஆனாலும், எட்ட முடியாத உயரத்தை எப்படியும் எட்ட வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவரது மனதுக்குள் ‘கனன்று’ கொண்டிருந்தது. இந்த தருணத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது கனவை நனவாக்கிக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 12.

எழுச்சி...
பயிற்சி மையத்தில் சேர்ந்த சில மாதங்களில் வில்வித்தையில் சாதித்து காட்டுவதாக சபதம் செய்தார். ஆனால் அவரிடம் வில் அம்புகள் எதுவும் கிடையாது. மூங்கிலால் செய்யப்பட்ட வில், அம்புகளை கையில் கொடுத்தனர். அவை ஒவ்வொருன்றும் குறிகள் தப்பாமல் பதம் பார்த்து, “வச்ச குறி தப்பாது இந்த புலி தோற்காது” என்பதை நிரூபித்துக்காட்டிய அந்த நிகழ்வில் பங்கேற்ற அன்றைய முதலமைச்சர் அர்ஜூன் முண்டாவின் துணைவியார் மீராவும் அசந்து போனார். அடுத்த வினாடியே, தனக்கு சொந்தமான அர்ஜூன் வில் வித்தை பயிற்சி மையத்தில் தீபிகா குமாரியை சேர்த்துக் கொண்டார் மீரா முண்டா.

மீண்டும் ஒரு சவாலை எதிர்கொண்டார். அதிலும் சொன்னதை சொன்னபடி செய்துகாட்டியதால் வரவேற்ற ‘டாடா’ நிறுவனம், ஜாம்செட்பூரில் நடத்தி வந்த வில் வித்தை பயிற்சி மையத்தில் இணைத்துக் கொண்டது‌. முதன் முதலாக இங்குதான் உரிய சீருடை, கருவிகளுடன் தனது வில் வித்தை பயிற்சியை மேற்கொண்டார். அதோடு, மாதம் 500 ரூபாய் ஊக்கத் தொகையும் கிடைத்தது. மூன்றாண்டுகள் கடின பயிற்சி மேற்கொண்டதால் வீட்டுப் பக்கமே திரும்ப முடியவில்லை. உலக ஜூனியர் வில்வித்தை சாம்பியன் பட்டம் வென்றதும் சொந்த கிராமத்திற்கு சென்ற தீபிகா குமாரியை, ஊரே ஒன்று கூடி வரவேற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட தந்தையும் தாயும் உற்சாகத்தில் திளைத்துப் போனார்கள்.

சூப்பர் ஸ்டார்!
உலக வில் வித்தை விளையாட்டரங்கில் சக போட்டியாளர்களை கலங்கடித்து 2009 ஆம் ஆண்டில் தொடங்கிய தீபிகா குமாரியின் பதக்க வேட்டை இன்றும் தொடர்கிறது. மிக இளம் வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது மட்டுமல்ல 18 வயதில் உலகின் ‘நம்பர் ஒன்’ வில் வித்தை வீராங்கனையாக இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்தினார். அதுமுதல் ஏறுமுகம்தான்.2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரைக்கும் காமன்வெல்த், ஆசிய வில் வித்தை சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்று பல்வேறு தொடர்களில் தங்கப்பதக்கங்களை வசமாக்கியதுடன் உலகக் கோப்பையில் 12 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை அள்ளி வந்த தீபிகாகுமாரியின் வெற்றிப் பயணம் மெக்சிகோ, கொலம்பியா, கனடா, இத்தாலி, துருக்கி, துபாய், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து, தென்கொரியா, தைவான் என்று கடல் கடந்தும் தொடர்ந்தது.

தணியாத தாகம்...
விளையாட்டு உலகில் வீரர்களின் உச்சபட்ச கனவு ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் பங்கேற்பு, பதக்கம் வெல்வது. அந்த கனவுடன் 2012 ஆண்டு முதன் முதலாக லண்டனுக்கு சென்ற தீபிகா, இந்திய அணியின் தங்க வேட்கையை தணிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் காய்ச்சல், கடும் குளிர் அவரை பாடாய்ப் படுத்த முதல் சுற்றோடு திரும்பியது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இரண்டாவது முறையாக 2016ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ நகருக்கு சென்றபோதும் பதக்கம் ஏதும் வெல்லாமல்போனதும் பரிதாபமே!

பழங்குடி இனத்தில் பிறந்த பெண் ஒருவர் வில் வித்தை சண்டையை மற்றொரு நிலைக்குக் கொண்டு சென்றவர் என்கிற பெருமையைப் பெற்றாலும், ஒலிம்பிக்கிஸில் பதக்கம் வெல்லாமல் வருவது பெரும் விமர்சனத்திற்கும் உள்ளானது. அத்துடன் அவரது வில் வித்தை முடிவுக்கு வந்துவிட்டது. மீண்டும் அவரால் எழ முடியவே முடியாது என்றும் ஆருடம் செய்தனர். ஆனாலும், ஒருபோதும் மனம் தளரவில்லை. மன உறுதியுடன் பயிற்சி களத்தில் முழுவேகத்தை காட்டினார். சிறப்பு பயிற்சிகளையும் எடுத்தார். வில் வித்தை வீரரும் கணவருமான அதானு தாசும் தீபிகாவுக்கு துணை நின்றார்.

பினிக்ஸ் பறவை!
கடந்து ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற 21 வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்ற இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்று தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.ஒலிம்பிக் பதக்க கனவை தொடர்ந்து கடின பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கும் தீபிகா குமாரியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாரிஸில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் ஒரே நாளில் தனிநபர் பெண்கள் அணி மற்றும் கலப்பு அணி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். அத்துடன் உலக அரங்கில் மீண்டும் “நம்பர் ஒன்” அந்தஸ்தை எட்டினார்.

பழங்குடி இனத்தைச் சார்ந்த ஒரு ஆட்டோ தொழிலாளியின் மகள் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று மீண்டும் சர்வதேச அளவில் முதலிடத்தை பிடித்திருக்கும்  27வயதாகும் தீபிகா குமாரி, இம்மாதம் 23ஆம் டோக்கியோவில்  துவங்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கத்தை இந்த முறை வென்று விடுவார் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. நூறு கோடி இந்தியர்கள் அனைவரும் அந்த நாளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். தீபிகா குமாரியின் வெற்றிப்பயணம் ஒலிம்பிக்ஸில் தொடர நாம் அனைவரும் வாழ்த்துவோம்!

கட்டுரையாளர் : சி. ஸ்ரீராமுலு

;