games

img

ஒலிம்பிக் : 3 தங்கப்பதக்கங்களுடன் சீனா முதலிடம்

ஒலிம்பிக் போட்டியில் சீனா தற்போதைய நிலவரப்படி 3 தங்கபதக்கம் வென்று உள்ளது.  இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, இகுவடார், ஹங்கேரி, , ஈரான், கொசோவோ, தாய்லாந்து ஆகிய நாடுகள் தலா ஒரு தங்கபதக்கம் வென்று உள்ளன.

பளு தூக்குதல், பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார்.  26 வயதான மீராபாய் சானு 49 கி.கி., எடைப்பிரிவில் 'ஸ்னாட்ச்' பிரிவில் 87 கிலோ, 'கிளீன் அன்ட் ஜெர்க்' பிரிவில் 115 கிலோ என, மொத்தம் 202 கிலோ பளுதுாக்கி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம். தவிர, ஒலிம்பிக் பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கமாகும். இந்த போட்டியில் 210 கிலோ எடையுடன் சீனாவின் ஹூ ஜிஹுய் தங்கத்தையும் , இந்தோனேசியாவின் ஐசா விண்டி கான்டிகா 194 கிலோ எடையுடன் வெண்கலத்தை வென்றனர். 

சீனா, டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இன்று முதல் தங்கத்தை வென்றது. பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் சீனாவின் யாங் கியான் தங்கம் வென்றதுடன் புதிய சாதனையும் படைத்துள்ளார். சீனாவின் கியான் பெற்ற மொத்த புள்ளிகள் 251.8 ஆகும். இதுதான் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் அதிகபட்ச புள்ளிகளாகும். இப்போட்டியில், ரஷியாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும், சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 

தகுதி சுற்றுகளில் முதலிடம் பிடித்த சவுரப் சவுத்ரி 10 மீ ஏர் பிஸ்டல் பைனலில் ஏழாவது இடத்தைப் பிடித்தார். வில்வித்தை கலப்பு அணி நிகழ்வில், தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. ஆனால் தென் கொரியா அணியிடம் தோல்வியடைந்தது. 

டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி சுவீடனின் லின்டா பெர்ஜிஸ்டிரோமுவை 4-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நெதர்லாந்துக்கு இடையேயான பெண்கள் ஹாக்கி போட்டியின் முதல் சுற்றில், இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிரிஷன். 

ஒலிம்பிக் போட்டியில் சீனா தற்போதைய நிலவரப்படி  3 தங்கபதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, இகுவடார், ஹங்கேரி, ஈரான், கொசோவோ, தாய்லாந்து ஆகிய நாடுகள் தலா ஒரு தங்கப்பதக்கங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. 

;