games

img

வறுமையிலும் மாறாத போராட்டக் குணம்... (சிறப்புக் கட்டுரை)

“சாதனை  ஒரு மனிதனை மிகப்பெரிய அளவில் பேசவைக்கிறது. உலகம் முழுக்க அறிமுகமும் செய்கிறது. மிகப்பெரிய அளவில் சாதனைபடைத்த பலரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இவை விளையாட்டுத் துறைக்கும் பொருந்தும்”.

இந்தியாவில் பலராலும் விரும்பி ரசிக்கப்படும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையில் இருந்து மிகப்பெரிய சாதனையாளர்களாக மாறியுள்ளனர். அப்படி வெற்றிவாகை சூடியவர்களில் முதலில் நிற்பது வினோத் காம்பிளி. பிறந்து வளர்ந்தது அனைத்தும் மும்பை இந்திரா நகர் குடிசைப் பகுதி. தந்தை ஒரு மெக்கானிக் தொழிலாளி. அவரது வருமானம் சாப்பாட்டுக்கே போதவில்லை. அத்தகைய சூழ்நிலையில் கடின உழைப்பு, விடாமுயற்சியால் இந்திய அணியில் இடம்பிடித்து சாதித்துக் காட்டிய ஒரே தலித் வீரர். அதனாலேயே அவர் அணியிலிருந்தும் ஓரங்கட்டப்படடார்.

வறுமையில் வாடிய குடும்பம் முனாப் பட்டேல் குடும்பம். விவசாயக் கூலியான தந்தைக்கு உதவியாக சென்றவர், பின்னர் கிரிக்கெட் வீரரானார். அவர் முதன் முதலாக வீழ்த்திய விக்கெட்டை அவரது குடும்பம் பார்ப்பதற்குக்கூட முடியவில்லை. காரணம் அவரது வீட்டில் அன்றைக்கு டிவி கூட கிடையாது. அதன் பிறகு, தனியார் நிறுவனம் ஒன்று வழங்கிய டிவி-யும் கரண்ட் வசதியில்லாததால் அந்த குடிசையில் காட்சிப் பொருளானது!

அணியில் முக்கிய வீரர்களாக வலம் வந்த பதான் சகோதரர்களின் தந்தை வதோதராவின் சிறிய மசூதியில் ஓதுபவராகவும் சுத்தம் செய்பவராகவும் பணியாற்றி வந்தார். வசிப்பதற்கு வீடு கிடையாது. மாதச் சம்பளம் வெறும் 250 ரூபாய்தான். மசூதியிலே தங்கிக் கொண்டனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தந்தைக்கு உதவி செய்து வந்த இர்பான்-யூசப் பதானின் லட்சியமும் கனவும்தான்  நட்சத்திரங்களாக மாற்றியது.

வறுமையின் பிடியில் வளர்ந்தவர்கள் ஹர்திக்-கருணால் பாண்டியா சகோதரர்கள். நிதி நிறுவனம் நடத்தி வந்த தந்தைக்கு ஏற்பட்ட இழப்பு குடும்பத்தை பாதித்தது. பத்தாம் வகுப்பைகூட தாண்ட முடியவில்லை என்றாலும் விளையாட்டில் சாதித்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது தனித்துவமான ஆட்டத்தால் இருமுறை ‘முச் சதமும்’ ஒரு போட்டியில் ‘இரட்டை சதமும்’ விளாசியவர் வீரேந்திர சேவாக். ஒரே வீட்டில் 50 நபர்கள் கூட்டுக்குடும்பமாக வசிக்க, பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தவர். கிரிக்கெட் பயிற்சிக்காக தினமும் 85 கிலோ மீட்டர் ரயிலில் பயணித்தவர்.

கிரிக்கெட் ஆர்வத்தால் சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி மும்பை சென்றவர் ஜாகீர்கான். அங்கு படுக்கக்கூட இடம் கிடையாது. அவரது அத்தை வேலை பார்த்த தனியார் மருத்துவமனை ஓரம் ஒதுங்கியவர். பல நேரங்களில் காலை உணவுக்கும் வழி கிடையாது. கூலி வேலைக்கு சென்றபோது வாழ்க்கையில் ஏற்பட்ட ‘நட்பே’ நட்சத்திரப் பந்துவீச்சாளராக மாற்றியது.

ஆரம்ப காலங்களில் நவாப் பட்டோடி, சவுரவ் கங்குலி, அஜய் ஜடேஜா போன்ற ராஜாக்கள் குடும்பங்களில் இருந்தும் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் அதிகம் இடம்பிடித்தனர். இப்போது அதில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
நாக்பூரில் மிகமிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் உமேஷ் யாதவ். அப்பாவுக்கு சுரங்கம் ஒன்றில் கூலி வேலை. வறுமையின் கோரத்தால் அரசுப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை தாண்ட முடியாமல் வேலையை தேடி ஓடச் செய்தது. விதர்ப்பா அணியின் கேப்டன் ‘பிரிதம் காந்தே’ செய்த உதவியால் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்.

தனியார் கம்பெனி காவலாளி மகன் ரவீந்திர ஜடேஜா. வெளிநாட்டு வீரர்கள் பாராட்டும் சிறந்த ‘ஆல் ரவுண்டர்’. இவரது ஆரம்ப கால வாழ்க்கையும் மிகவும் சோகம் நிறைந்தது. அப்பாவுடன் வேலை பார்த்தபோது கிடைத்த சிறிது நேரத்தின் கடின உழைப்பும் பயிற்சியும் இப்போது குடும்ப வறுமையை காணாமல் போகச் செய்தது.

கிரிக்கெட் பயிற்சிக்கு செல்ல ஒரு ஜோடி ஷூ வாங்கக் கூட கையில் பணம் கிடையாது. அந்த அளவுக்கு குடும்பத்தின் வறுமை வாட்டியது. அன்றைக்கு தங்கை சேமித்து கொடுத்த சிறு சேமிப்புதான் புவனேஷ்குமாரின் வாட்டத்தைப் போக்கியது. 
மேற்குவங்கத்தில் பிறந்த மனோஜ் திவாரியின் தந்தை ரயில்வே ஸ்டேஷனில் கூலி வேலை செய்தும் குடும்பத்தின் வறுமை ஒழிந்தபாடில்லை. தந்தையுடன் சிறு வயதிலேயே வேலையில் சேர்ந்து குடும்பச் சுமையை மனோஜ் சுமந்தார். அவரை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றியது அவரது சகோதரர்கள்தான்.

மரம் வெட்டும் கூலி தொழிலாளியின் மகன் கம்ரான்கான். சொந்தமாக ஒரு செண்ட் நிலம்கூட கிடையாது. குடும்பம் முழுவதும் ஒவ்வொரு நாள் இரவையும் கழிப்பது ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம்தான். உத்தரப்பிரதேசத்தில் தெருவோர இளைஞர்களுக்கு பந்து வீசத் துவங்கியவரை, ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்தனர். 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அமர்க்களப்படுத்தினார். ஆனாலும் தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.

முகமது சிராஜூன் பின்னணியும் வறுமைதான். தந்தை முகமது கவுசிக் ஐதராபாத் நகரில் கூலிக்கு ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தை ஓட்டிவந்தார். சொல்ல முடியாத வறுமையைச் சிறுவயதில் எதிர்கொண்டனர். கிளப் வீரர்களுக்கு பந்து வீசி மிரட்டியவர். தற்போது, அவர் அள்ளிய விக்கெட்டுகளால் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு கிடைத்தது.

இந்திய அணியில் தற்போது இடம்பிடித்திருக்கும் இளம் வீரர்கள் பலரும் கிராமப்புறங்களையும் வறுமையையும் பின்னணியாகக் கொண்டவர்கள். குறிப்பாக ரஹானே, சேலம் டி.நடராஜன், ஹரியானா சைனி, ஷரத்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பாண்ட் போன்றோரும் வசிக்கக் குடிசை கூட இல்லாமல் வறுமையை எதிர்கொண்டவர்கள். வறுமையான சூழ்நிலையில் வளர்ந்து போராடி முன்னுக்கு வந்தவர்கள்.

கட்டுரையாளர் : சி.ஸ்ரீராமுலு

;