games

img

டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டி: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

டி20 உலக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போது சூப்பர் 12 சுற்றில் இடம்பெறும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24 ஆம் தேதி சந்திக்கிறது.

லீக் ஆட்டங்களுக்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.  இந்நிலையில் இன்று நடைபெறும் முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து-இந்திய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

பெரும்பாலான இந்திய வீரர்கள் ஐபிஎல்லில் துபாய் ஆடுகளத்தில் விளையாடியுள்ளதால் அமீரகத்தின் தட்பவெப்ப நிலை பிரச்னையாக இருக்கிறது.

லீக் சுற்றுப் போட்டிகள் அடுத்த வாரம் தொடங்க இருக்கும் நிலையில் எந்தெந்த வீரர்களை ஆடும் லெவனில் களமிறக்கலாம் என்பதை கணிக்க இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்தப் போட்டியில் அனைத்து முக்கிய வீரர்களும் களமிறக்கப்பட்டு சோதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை பொறுத்தவரை பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அதேநேரத்தில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்த இயான் மார்கன்தான், இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருக்கிறார். ஆனால் பேட்டிங்கில் பெரிதளவில் அவர் சோபிக்கவில்லை. இந்நிலையில் இன்றைய பயிற்சிப் போட்டி இங்கிலாந்துக்கு முக்கியமாக இருக்கும்.

இரு அணிகள் விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாஹர், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்ட்யா.

இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், சாம் பில்லிங்ஸ், லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, டாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், டைமல் மில்ஸ், அடில் ரஷித், மார்க் வுட்.

 

;