games

img

T20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு : நடராஜன் இடம்பெறாதது குறித்து தேர்வுக்குழு விளக்கம்  

T20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 4 ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளன. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அறிவித்துவிட்டன. மேலும், சில நாடுகள் அடுத்த வாரத்திற்குள் தங்கள் அணியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்ததும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதற்கான, வேலைகளையும் பிசிசிஐ தீவிரமாகச் செய்து வந்த நிலையில், தற்போது அணியை அறிவித்துள்ளது.

அதன்படி, விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியில் ஸ்பின்னர் யுஜ்வேந்திர சஹால் சேர்க்கப்படவில்லை. அதேபோல், ஷ்ரேயஸ் ஐயர் ரிசர்வ் வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். 

முன்னதாக, டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராகச் செயல்பட எம்.எஸ். டோனி சம்மதித்துள்ளார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், பிசிசிஐ யின் கோரிக்கையை ஏற்று இந்திய அணியின் ஆலோசகராகச் செயல்பட எம்.எஸ். டோனி சம்மதித்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் டோனி இந்திய அணியுடன் இணைந்து செயல்படுவார். இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரவி சாஸ்திரி மற்றும் பிற பயிற்சி ஊழியர்களுடன் இணைந்து எம்.எஸ்.டோனி செயல்படுவார் என்றார்.

மேலும், இந்திய அணியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா விளக்கம் தெரிவித்துள்ளார். அதில், இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளகளுடன் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஹார்திக் பாண்டியா இருக்க வேண்டும் எனத் தேர்வுக்குழுவினர் கருதினோம். நடராஜன் பற்றி நிச்சயமாக விவாதித்தோம். ஆனால் நீண்ட நாளாக எந்தவொரு கிரிக்கெட் ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. காயமடைந்த வீரர்களின் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார். அதனால்தான் நாங்கள் மூத்த பந்துவீச்சாளகளையே தேர்வு செய்தோம் என்றார். 

;