games

img

விளையாட்டு - கோபா அமெரிக்கா - 2024

16ஆவது முறையாக கோப்பையை வென்ற அர்ஜெண்டினா

அமெரிக்காவில் நடைபெற்று வந்த 48ஆவது சீசன் கோபா அமெரிக்கா தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா - கொலம்பியா அணிகள் மோதின. திங்களன்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  கோலடிப்பதை விட இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் பாதுகாப்பு அரண் அமைத்து விளையாடியது. ஆட்டத்தின் 90ஆவது நிமிடம் வரை இரு அணிகளும் கோலடிக்காத நிலையில், கூடுதல் நிமிடம் கடைபிடிக்கப்பட்டது. கூடுதல் நிமிடத்தின் 110ஆவது நிமிடம் வரை இரு அணிகளும் கோல்  கணக்கை துவங்காமல் இருந்தது. இதனால் இந்த ஆட்டம் பெனால்டி சூட் அவுட் வரை நீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், அடுத்த 2 நிமிடத்தில் அதாவது 112ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா  வீரர் எல்.மார்ட்டினெஸ் கோலடித்தார். பதிலுக்கு கோலடிக்க கொலம்பியா வீரர்கள் கடுமையாக போராடினர். எனினும் போதுமான நேரம் இல்லாத நிலையில், அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று 16ஆவது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்று அசத்தியது. மேலும் கோபா அமெரிக்கா வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை அர்ஜெண்டினா பெற்றுள்ளது. 

காயம் : கதறி அழுத மெஸ்ஸி

முதல் பாதியில் கொலம்பியா தடுப்பாட்ட வீரரால் மெஸ்ஸிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அடுத்த சில நிமிடங்களில் மெஸ்ஸி மீண்டும் களமிறங்கிய நிலையில், 53ஆவது நிமிடத்தில் அவராகவே தடுக்கி கீழே விழுந்தார். கணுக்காலில் மேலும் காயம் ஏற்பட வலி தாங்க முடியாமல் துடித்தார். காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதாகவும், மெஸ்ஸியால் மேற்கொண்டு விளையாட முடியாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் மெஸ்ஸி பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். தான் இல்லாமல் தங்கள் அணி கோப்பையை வெல்லுமா? என்ற கவலையில் பெவிலியனில் மெஸ்ஸி கதறி அழுத நிலையில், மெஸ்ஸியின் அழுகையை கண்டு அர்ஜெண்டினா ரசிகர்களும் கதறி அழுதனர்.

ஐரோப்பிய கால்பந்து கோப்பை - 2024 ஸ்பெயின் சாம்பியன்

ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வந்த 17ஆவது சீசன் ஐரோப்பிய கால்பந்து கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதின. திங்களன்று அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலையில் ஆட்டத்தின் 47ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நிக்கோலாஸ் கோலடித்தார். ஆட்டத்தின் 70ஆவது நிமிடம் வரை இங்கிலாந்து அணி பதிலுக்கு கோலடிக்காமல் இருந்தது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த 3 நிமிட இடைவெளியில் இங்கிலாந்து வீரர் கோலே பால்மர் (73ஆவது நிமிடத்தில்) கோலடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் பரபரப்பாக நகர ஆரம்பித்தது. ரசிகர்கள் இருக்கையில் அமராமல் நின்று கொண்டே போட்டியை உற்றுநோக்கினர்.  அடுத்த 13 நிமிட இடைவெளியில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் தந்திரமாக கோலடிக்க, இதுவே வெற்றி கோலாக  அமைந்தது. கூடுதல் நிமிட ஆட்டநேர முடிவில் ஸ்பெயின்  அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்குமுன் 1964, 2008, 2012 ஆகிய சீசன்களில் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி, அதிகமுறை (4) ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தை ருசித்த அணி என்ற பெருமையை பெற்றது. கடந்த சீசனை போலவே இம்முறையும் கோப்பையை நழுவ விட்ட இங்கிலாந்து அணி 58 ஆண்டுகால ஐரோப்பிய கால்பந்து கோப்பை வெல்லும் கனவு மீண்டும் தகர்ந்தது.