games

img

பனிமலைப் பகுதியில் தங்கம் வென்று அந்தியூர் மண்ணிற்கு பெருமை சேர்த்த கார்க்கி...

தேசிய அளவில் சிலம்பம், யோகா போன்ற பல்வேறு  பாரம்பரிய விளையாட்டுகளுக்கான தேசிய சாம்பியன் ஷிப் போட்டிகளை ஆகஸ்ட் 6, 7, 8 ஆகிய மூன்று நாட்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் யூத் ஏசியன் கேம்ஸ் பெடரேசன் (இந்தியா) அமைப்பு நடத்தியது. அதில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முருகேசன் - மகேஸ்வரி தம்பதியரின் மகனும், கல்லூரி மாணவருமான மு.கார்க்கி, 17 வயது முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான யோகா பிரிவில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றார். அந்த யோகா போட்டியில் மு.கார்க்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். தங்களது மகன் தேசிய அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று அந்தியூருக்கும், ஈரோடு மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தது, தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது என்று அவரது பெற்றோர் பூரிப்படைந்தனர். தங்கள் மகன் தேசியப் போட்டியில் வெற்றிபெற உறுதுணையாக இருந்த யோகா பயிற்சியாளர் தீபிகா மற்றும் பல்வேறு வகையிலும் உதவிகள் செய்து ஊக்குவித்த அனைவருக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

கார்க்கியைப் போலவே இன்னும் ஏராளமான சாதனைகள் படைக்கும் பல்வேறு திறமைகள் கொண்ட சாதாரண கிராமப்புற மாணவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிந்து தகுந்த முறையில் ஊக்குவித்தால் இன்னும் பல சாதனையாளர்களை நாம் உருவாக்க முடியும் என்று கூறும் கார்க்கியின் தந்தை முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர் ஆவார். தாயார் மகேஸ்வரி நூறு நாள் வேலை செய்து வருகிறார். தம்பி மு.லெனின் ஜீவா அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். மு.கார்க்கி, ஈரோடு சிக்கைய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலை வேதியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.தேசிய அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற மாணவர் மு.கார்க்கியை பள்ளிக் கல்லூரி ஆசிரியர்களும், நண்பர்களும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

- சகாதேவன்

;