கறை படிந்த வெற்றி ஜெமிமாவின் வரலாற்று இன்னிங்ஸ்
“இந்துத்துவா அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று ஒட்டுமொத்த நாடும் கொண்டாடும் சிங்கப்பெண்ணாக ஜொலிக்கிறார் ஜெமிமா ரோட்ரிக்ஸ்”. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஒரு சிறிய பயிற்சி மையத்தில் 8 வயது சிறுமி ஒருத்தி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய 2 அண்ணன் களும் கிரிக்கெட் ஆடக்கூடியவர்கள் என்பதால், எனர்ஜியாக சுற்றித்திரியும் அந்த குட்டிப் பெண்ணையும் கிரிக்கெட் விளையாட அனுப்பி வைக்கலாம் என அவளுடைய பெற்றோர் முடிவு செய்தார்கள். சிறுவர்கள் நிறைந்த அந்த பயிற்சி மையத்தில் ஒரே ஒரு சிறுமியாக அவள் மட்டுமே இருந்தாள். ஆனாலும் எந்தத் தயக்கமுமின்றி ஜாலியாக பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். ஒரு நாள் திடீரென்று மற்றொரு பையன் அடித்த பந்து அந்த சிறுமியின் தலையில் பலமாக மோதியது. வலி தாங்க முடியாமல் அவள் அழுதாள். மறுநாள், அந்த பயிற்சி மையத்தின் பயிற்சியாளரை அழைத்த அவளுடைய தந்தை, “இனி என் மகளை பயிற்சிக்கு அழைத்து வர வேண்டாம். அவள் மிகவும் குட்டியாக இருக்கிறாள். அவளுக்கு கிரிக்கெட் செட் ஆகாது. பெண் குழந்தைதானே, வேறு எதாவது விளையாட வையுங்கள்” என்று அறிவுரை கூறி அனுப்பினார். 8 வயதில் அந்த பயிற்சி மையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அந்தக் குட்டிச் சிறுமிதான் இன்று உலகக் கோப்பையின் அரையிறுதியில் வலிமை மிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற முக்கிய காரண மாக அமைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்.
அழுத்தத்தின் மத்தியில் மலர்ந்த வெற்றி
2022ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தன்னு டைய பெயர் நிச்சயம் இடம்பெறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டி ருந்தார். ஆனால் அந்த அணியில் ஜெமிமாவுக்கு இடம் கிடைக்கவில்லை. அப்போது அவர் முற்றிலும் உடைந்து போனார். “எல்லாம் முடிந்து விட்டது போல தோன்றியது. என்னுடைய உலகமே உடைந்து நொறுங்கி விட்டதைப் போல உணர்ந்தேன்” என அந்தக் கடினமான காலக் கட்டத்தை நினைவு கூறி இருக்கும் ஜெமிமா, அணியிலிருந்து விலக்கப்படுவதன் வலி எத்தகையது என்பதை நன்கு உணர்ந்தவர். 2025இல் உலகக்கோப்பையின் போட்டிக்குள் ஜெமிமா நுழைந்தபோது அவர் பெரும் மன அழுத்தத்தின் நடுவே இருந்தார். தன்னுடைய நிலையை நினைத்து ஒவ்வொரு இரவிலும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்ததாக ஜெமிமா பின்னர் வெளிப்படுத்தியிருந்தார். மன இறுக்கமான சூழ்நிலை யில்தான் அவர் இருந்தார். இந்நிலையில்தான் திடீரென ஒரு முக்கியமான வாய்ப்பு அவர் கதவை தட்டியது. அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அசைக்க முடியாத கோபுரமாக நின்றார். பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை மிகுந்த பக்குவத்துடன் கையாண்டார். போட்டி வெற்றிகரமாக முடிந்த பிறகு ஊடகவியலாளர்கள் ஜெமிமாவிடம் கேள்வி எழுப்பினார்கள், “நீங்கள் உங்களின் சதத்தை கூட இன்றைக்கு கொண்டாடவில்லையே?” அதற்கு ஜெமிமா மிகவும் தெளிவாக பதிலளித்தார், “என்னுடைய அணியின் வெற்றிதான் எனக்கு மிக முக்கியமாகப்பட்டது. அதுவே என் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது.”
பன்முகத்தன்மையின் அழகிய வெற்றி
இந்தியாவின் இந்த வெற்றி நமது நாட்டின் பன்முகத்தன்மையின் அழகிய வெளிப்பாடாக அமைந்தது. ஒரு கிறிஸ்துவப் பெண், ஒரு சீக்கியப்பெண் கேப்டனின் தலைமையில், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கொண்ட இந்திய அணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. வலதுசாரி அமைப்பு களால் மத மாற்றம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு துன்புறுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்து அணியை வழி நடத்தினார். இந்த முக்கியமான போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 127 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணியாக திகழ்ந்தார். இந்தியா வெற்றி பெற்ற பின்னர் மகிழ்ச்சியின் உச்சத்தில் கண்ணீர் வடித்தார். அதனைத் தொடர்ந்து தனது தந்தை இவான் ரோட்ரிக்ஸை உணர்ச்சிவசப்பட்டு கட்டி அணைத்தார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், அதன்பின் னணியில் இருக்கும் நிகழ்வுகள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் கிறிஸ்தவரான ஜெமிமா ரோட்ரிக்ஸின் தந்தை இவான் ரோட்ரிக்ஸ் குழந்தைகளிடையே கட்டாய மதப் பிரச்சாரம் செய்வ தாக இந்துத்துவ அமைப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குற்றச் சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையிலும், ஜெமிமாவின் உறுப்பினர் அந்தஸ்தை ஜிம்கானா கிளப் ரத்து செய்தது. இந்திய அணியில் ஜெமிமா தேர்வு செய்யப்பட்டதற்காகக் கூட வலதுசாரி அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது அணியை தன் முதுகில் சுமந்து கொண்டு ஜெமிமா இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளார். நவி மும்பையின் வியாழன் இரவு போட்டியை எளிதில் மறக்க முடி யாது. நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது குதிரைக் கொம்பு போன்ற அரிய விஷயம். ஏழு முறை உலகக் கோப்பையை வென்ற பெரு மையோடு, நடப்பு சாம்பியனாகவும் இருக்கும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பதினைந்து வெற்றிகளைப் பெற்ற பிறகு உலகக் கோப்பையில் முதல் தோல்வி யை சந்தித்தது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை வெற்றிகரமான சேஸ் செய்து வென்ற அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்தது. 339 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை துரத்தும்போது, ஜெமிமா கடைசி வரை அசைக்க முடியாமல் நின்றார். போட்டியை முடித்துவிட்டு களத்தை விட்டு வெளியேறும்போது ஜெமிமா வின் சட்டையில் படிந்திருந்த கறை, 2011 உலகக் கோப்பை வெற்றியின்போது யுவராஜின் சட்டையிலும் கவுதம் கம்பீரின் சட்டையிலும் படிந்திருந்த கறைகளை நினைவுபடுத்தியது. இந்த மூன்று கறைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மூன்றுமே தன்னை முன்னிலைப்படுத்தாமல், தன்னுடைய சாதனைகளை பெரிது படுத்தாமல், அணிக்காக உயிரைக் கொடுத்து விளையாடியதன் அடையா ளங்களாக படிந்த கறைகள். கோடிக்கணக்கான இதயங்கள் இப்போது அவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றன. வாழ்த்துகள் சிங்கப் பெண்களே, வாழ்த்துகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ்! -சி.ஸ்ரீ ராமுலு
