ஐரோப்பிய கால்பந்து - 2024
36 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிக்கு முன்னேறுமா நெதர்லாந்து?
அரையிறுதியில் இன்று இங்கிலாந்து அணியுடன் மோதல்
ஜெர்மனியில் நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐரோப்பிய கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதனன்று நள்ளிரவு நடைபெறும் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
கால்பந்து உலகில் அதிரடிக்கு பெயர் பெற்ற அணியான நெதர்லாந்து அணியுடன் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. பார்ம் இருந்தாலும் சரி, பார்ம் இல்லையென்றாலும் சரி திடீரென அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் பக்கம் வெற்றியை வசப்படுத்தும் தலைசிறந்த அணியாக உள்ளது நெதர்லாந்து. அதே போல எந்த தொடராக இருந்தாலும் சூப்பர் பார்மில் கோப்பை வெல்லும் அளவிற்கு சிறப்பாக விளையாடும் திறனை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இரு அணிகளின் ஆட்டத்திறன் நல்ல நிலையில் இருந்தாலும், ஐரோப்பிய கோப்பையை வென்ற வரலாற்றில் நெதர்லாந்து - இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் கொஞ்சம் சோகம் நிறைந்த வரலாறுகள் உள்ளன.
அதுயாதெனில் நெதர்லாந்து அணி 1988இல் கோப்பையை வென்று அசத்தியது. ஆனால் இங்கிலாந்து அணியோ ஐரோப்பிய கோப்பை வெல்லாமல் வெறுங்கை யோடு உள்ளது. கடந்த சீசனில் இறுதிவரை போராடி இத்தாலியிடம் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து அணி.
இந்நிலையில், இரண்டாவது முறையாக இறுதிக்கு முன்னேறி முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. அதே போல இரண்டாவது முறையாக இறுதிக்கு முன்னேறி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் நெதர்லாந்து அணி களம் காண உள்ளது. இருஅணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெதர்லாந்து - இங்கிலாந்து
நேரம் : புதனன்று நள்ளிரவு 12:30 மணி
(ஜூலை 11 அதிகாலை)
இடம் : டார்ட்மண்ட், ஜெர்மனி
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ் டென், சோனி லைவ் (ஒடிடி)
கோபா அமெரிக்கா - 2024
இன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடக்கம்
அமெரிக்காவில் நடைபெற்று வரும் 48ஆவது கோபா அமெரிக்கா தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், புதனன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.
அர்ஜெண்டினா - கனடா
நேரம் : புதனன்று அதிகாலை 5:30 மணி
இடம் : நியூ ஜெர்சி, அமெரிக்கா
உருகுவே - கொலம்பியா
நேரம்: வியாழனன்று அதிகாலை 5:30 மணி
இடம் : நார்த் கரோலினா, அமெரிக்கா
சேனல் : பிபா ஆன்லைன்