facebook-round

img

நவீன தாராளமயத்தை முறியடித்த விவசாயிகள்!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில்தான் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசாங்கம் மிக மோசமான மின்சார திருத்த மசோதா (2020) ஐ அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் பொதுப் பட்டியலில் உள்ள மின்சாரத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் சரத்துக்களை உள்ளடக்கியது. அதன்மூலம் அதிகாரம் முழுவதையும் மத்திய அரசின் கைகளில் கொண்டு சேர்ப்பது, இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைப்பது, மாநில அரசுக்கும் சமமான பொறுப்புள்ள மின் உற்பத்தி, மின்கடத்தல், மின் விநியோகம், மின் விநியோக கட்டுப்பாடு, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்வதற்கு இச்சட்டம் வழி செய்கிறது.

இதன்படி மின்கொள்முதல், மின்சார விற்பனை மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மின்சாரம் அனுப்புவது என அனைத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொள்ளும். இவை அனைத்தும் மாநில அரசுகள் கட்டுப்பாட்டில் உள்ள மின்சார வாரியங்களை கடுமையாக பாதிக்கும். 

மின் விநியோகம் மொத்தமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்படும். தற்போது தரப்படும் குறுக்கு மானியங்கள் (Cross Subsidisation) அனைத்தும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படும். அதாவது, சமூகத்தில் வாய்ப்பற்ற பகுதியினருக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்கி வசதியான பிரிவினருக்கு கூடுதல் கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் முறை ஒட்டுமொத்தமாக கைவிடப்படும். 

இதன் மூலம் அந்நிய நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விதிக்கப்படும் மின்சார கட்டணமே இரண்டு பேர், மூன்று பேரை வைத்து செயல்படும் சிறு-குறு நிறுவனங்களுக்கும் விதிக்கப்படும். தற்போது, குடிசை வீடுகளுக்கும், விவசாயத்திற்கும் கொடுக்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் முற்றிலுமாக துடைத்தெறியப்படும். 

பல மாநிலங்களில் கல்விக்கும், மருத்துவமனைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் மாநில அரசுகள் மின்சாரம் கொடுத்து வருகின்றன. இவையெல்லாம் ரத்து செய்யப்படும். இதைவிட கொடுமை என்னவென்றால், தொலை தூரத்தில் உள்ள ஒரு சிறு விவசாயியோ, சிறு தொழிற்சாலையோ தங்களுக்கு மின் இணைப்பு வேண்டுமென்றால் அவர்கள் இருக்கும் தூரத்திற்கான மின் இணைப்பு பெறுவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
உலகம் முழுவதும், கொரோனா காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கும், அவசியமும் கூடுதலாக உணரப்பட்ட காலத்தில்தான் பாஜக அரசு இந்த மிக பாதகமான மக்கள் விரோத மசோதாவை முன்மொழிந்திருக்கிறது. பொது மக்கள் நன்மையை விடவும், தேசத்தின் நன்மையை விடவும், பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் உள்நாட்டு பெருமுதலாளிகளின் நலனை மட்டுமே நோக்கமாக கொண்ட மின்சார திருத்த மசோதா (2020)ஐ மத்திய அரசு முன்வைத்தது. 

இச்சட்டத்தின் படி இந்தியாவில் மின்உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் பணம் அதிகமாக கிடைக்குமென்றால் வேறொரு நாட்டுக்கு அதை விற்றுவிடலாம். அதேபோன்று, வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனமும்  இந்தியாவிற்கு விற்கலாம். ஆனால், இதில் கொடுமை என்னவென்றால், இதுவரையிலும் இந்திய மக்களின் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்டுள்ள மின் கடத்துவதற்கான வழித்தடம் முழுவதையும் அந்த பெரு நிறுவனங்கள் கட்டணம் ஏதுமில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோன்று, இப்போது வீடுகளுக்கு மின்சாரம் கொடுப்பதை முழுக்க, முழுக்க அரசு நிறுவனங்களே செய்து வருகின்றன. அவையனைத்தையும் தனியாருக்கு கொடுப்பதற்கு இந்த மசோதா வகை செய்கிறது.

தற்போது, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு இவற்றிற்கு விலை நிர்ணயிப்பது போல, தினசரி மின்சாரத்திற்கும் விலை நிர்ணயம் செய்து கொள்ளும் ‘டயனமிக் பிரைசிங் சிஸ்டம்’ முறையை புகுத்தவும் இந்த மசோதா வழிவகை வகுக்கிறது. இப்போதுள்ள மாநில மின்சார கட்டுப்பாட்டு ஆணையம் என்பது, முழுக்க, முழுக்க மத்திய மின்சார கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படும். பெயரளவிற்கே மாநில ஆணையமாக அது இருக்கும். ஆனால், கட்டுப்பாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் மட்டும்தான் இருக்கும்.

இப்பின்னணியில்தான் ஒரு மாதத்தை கடந்து நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக இந்த மசோதாவை கைவிடுவது என கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த மசோதாவால் ஏற்படக் கூடிய ஆபத்தோடு ஒப்பீட்டால் இதை கைவிடுவது என்ற முடிவு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதை தடுத்திருப்பது என்பது ஒரு சிறு அம்சம் மட்டுமே. அதன் மூலம் இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்படவிருந்த இழப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அதை விட முக்கியமாக அந்த பொதுத்துறையை ஒட்டுமொத்தமாக சீரழிக்க முயன்ற பாஜகவின் முயற்சிக்கு தற்காலிகமாகவேனும் ஒரு தடை போடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றியாக இது கொண்டாடப்பட வேண்டும். 

இந்தியா முழுவதும் மின்சார தொழிலாளர்கள் இதற்கு எதிராக போராடிய போதும், பொதுமக்களோ, பெரும்பாலான இடங்களில் விவசாயிகளோ அதற்கு ஆதரவு அளிக்கவில்லை. ஏனென்றால் பலருக்கும் அதில் ஏதோ மின்சார வாரிய தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற என்ற புரிதலே இருந்தது. 

ஆனால், இந்த மசோதா கைவிடப்படுவது பொதுத்துறை பாதுகாப்பு, இந்தியாவின் சுய சார்பு, உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று கொண்டாடப்பட வேண்டும். மத்திய அரசும் அதன் எஜமானர்களாக உள்ள பன்னாட்டு, இந்நாட்டு பெருமுதலாளிகள் தொடர்ச்சியாக முயற்சித்துக் கொண்டிருக்கும் நவீன தாராளமய தாக்குதலில் ஒரு பகுதியை விவசாயிகள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் என்று கொண்டாடப்பட வேண்டும்.

இதேபோன்றுதான், தமிழக மின்வாரியத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் சமீபத்தில் நடத்திய போராட்டமும் அவர்கள் பெற்றுள்ள வெற்றியுமாகும். 

நவீன தாராளமயத்தை தமிழக மின்வாரியத்தில் திணிக்கும் விதமாக மின்வாரிய அலுவலகங்களில் 20 பேருக்கு கீழ் பணிபுரியும் இடங்கள் அனைத்திலும் அந்த பணிகளை அவுட்சோர்சிங் முறைகளில் தனியாருக்கு கொடுத்துவிடுவது என்றும், தமிழகத்தில் உள்ள துணை மின்நிலையங்களை படிப்படியாக தனியாருக்கு கொடுப்பதற்கும் மின்வாரியம் ஆணைகளை வெளியிட்டிருந்தது. ஐந்து துணை மின்நிலையங்களை தமிழக மின்வாரியம் தனியார் பராமரிப்பில் விட்டுவிடுவதாக ஆணைகளையும் வெளியிட்டிருந்தது. இந்த இரண்டு வாரிய ஆணைகளுக்கு எதிராகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் அத்தனை தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் முன்பாக மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக இந்த இரண்டு ஆணைகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட ஆணைகள் கையில் கிடைக்கும் வரை பணிக்குச் செல்வதில்லை என தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் சமீப கால போராட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தப் போராட்டமும் வெறும் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. மத்திய அரசின் நவீன தாராளமய திணிப்பில் ஒரு முனைக்கு எதிராக நடத்திய போராட்டம், அதில் கிடைத்த வெற்றி என்றே பார்க்கப்பட வேண்டும்.

இப்படி பல முனைகளில் நடந்தேறுகிற போராட்டங்கள் ஓர் பெரும் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். 

அதற்கு இவ்விரு உதாரணங்களும் நம்பிக்கை அளிப்பவை.

நவீன தாராளமயத்திற்கு கேட்டும் உண்டு; பூட்டும் உண்டு என்பதை நிரூபித்துள்ள நிகழ்வுகள் இவை.

- கே. கனகராஜ், சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்பினர் 

(செவ்வானம் குழுவில் விவாதிக்கப்பட்ட கேள்வி பதிலில் இருந்து)

;