facebook-round

img

அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை!

இவர் விஜூ கிருஷ்ணன். ஒரு முறை சென்னைக்கு வந்திருந்தார். நானும் Arun Kannan தோழரும்தான் அழைக்கச் சென்றிருந்தோம்.

விமான நிலையத்தில் அவரை வரவேற்று ஒரு கால் டாக்ஸி பிடித்தோம். விஜு கிருஷ்ணனும் அருண் தோழரும் பின் இருக்கையில். நான் ட்ரைவரின் அருகே முன்னால் அமர்ந்து கொண்டேன். பின்னால் இருவரும் பேசிக் கொண்டு வந்தார்கள். முன்னால் என்னிடம் டிரைவர் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தார்.

டிரைவர் ஒரு கிறிஸ்துவர் போல. அச்சமயம் ஆட்சியில் இருந்தது எடப்பாடி. வழக்கம்போல் நான் அவருடைய வாழ்க்கைப்பாட்டை கேட்டேன்.

"எங்கே சார்.. முதல்ல ஓலா கேப் ஓட்டிக்கிட்டு இருந்தேன். ரொம்ப நஷ்டம் சார். கைக்கு வர்ற காசு ரொம்ப கம்மியா இருக்கும். அதனால ஓலா விட்டுட்டு, சொந்தமா ஒரு காரை கடன்ல வாங்கி ஓட்டிக்கிட்டு இருக்கேன். ஏர்போர்ட்டுக்கு வந்த காரை நிறுத்திடுவேன்.. இன்னைக்கு உங்கள கூப்பிட்ட மாதிரி நானே வந்து சவாரி கேட்பேன். உள்ளயும் கொஞ்சம் கடைக்காரங்க, செக்யூரிட்டிலாம் பழக்கம். அவங்களும் சொல்லி அனுப்புவாங்க. கம்மியான காசுன்னாலும் மொத்தமும் நமக்கு. எவனக்கும் கமிஷன் கொடுக்க வேண்டியதில்ல."

எனப் பேசிக் கொண்டிருந்தார். பிறகு விலைவாசி, எடப்பாடி, பெட்ரோல் விலை என நகர்ந்து மோடிக்கு வந்து நின்றார்.

"என்ன சார் மனுஷன்.. இப்படி மக்களை வதைக்கறத எந்த கூச்ச நாச்சமுமே எப்படி பண்றாங்க.. சின்னதா யாருக்கும் அடி பட்டா கூட நமக்கு அப்படி பதறுது.. ஆனா எந்த பதட்டமோ குற்றவுணர்ச்சியோ இல்லாம இப்படி அநியாயம் மட்டும் பண்ணிக்கிட்டே இருக்காரு.. நம்ம ஜனமும் தப்பு பண்றாங்க சார்.. ஒருத்தருக்கு ஆதரவா ஒருத்தருன்னு நின்னா, யாரா இருந்தாலும் எதிர்த்து கேட்கலாம். ஆனா சாதி, மதம்னுதான் பிரிஞ்சி நிற்குது. எல்லாம் ஒரு நாள் மாறும்.. மாறணும் சார். இப்போ பாருங்க விவசாயிங்க போராட்டம் பண்றாங்க.. எத்தன மாசம்.. ஒரு வார்த்தை கூப்பிட்டு பேசணும்னு தோணுதா.. ஆனாலும் விடாம எதிர்க்கிறாங்க பாருங்க. ஜெயிச்சிடுவாங்க சார்.."

என்றபோது நான்,

"நாங்க கூப்பிட்டு வர்றோமே, பின்னாடி உட்கார்ந்திருக்காரே, அவர் யாரு தெரியுமா? அந்த விவசாயிகள் போராட்டத்த நடத்திக்கிட்டு இருக்கற தலைவர்ல ஒருத்தர்"

கண்கள் விரிந்தது. வண்டியை விடாமல் திரும்பி ஒரு முறை அவரை பார்த்தார். பிறகு என்னை பார்த்து மலர்ச்சியுடன்

"அப்படியா சார்.. நல்லது நடக்கணும் சார். நமக்கு சோறு போடறவன பட்டினி கிடக்க விடக் கூடாது சார்" என்றார்.

புன்னகைத்தேன்.

பின் வண்டி ஓட்டியபடி தனக்குதானே,

"நல்லது நடக்கணும்.. கர்த்தருக்கு நன்றி.. நல்லது நடக்கணும் கர்த்தரே" என தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்.

அகில இந்திய விவசாயச் சங்கத்தின் இணைச் செயலாளராக இருக்கிறார் விஜு கிருஷ்ணன். அகில இந்திய விவசாய சங்கம் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம் ஆகும்.

விவசாயப் போராட்டங்களை சீக்கியர்களின் போராட்டமாக சுருக்கிப் பார்க்கும் தன்மை ஒன்று இருக்கிறது. மோடியிடம் அது இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மற்றவர்களிடம் இருப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

நிலவுரிமைக்கான பூமி அதிகார் அந்தோலன் இயக்கத்தை ஒருங்கிணைத்தவர். மோடி 'அந்தோலன் ஜீவி' என நக்கலடித்தது காரணமின்றி இல்லை. கேரளாவில் பிறந்தவர் விஜு. அவர் பிறந்த கரிவெல்லூரே பெரும் விவசாயப் போராட்ட வரலாற்றுக்கு பெயர் பெற்றது.

பாபர் மசூதி தகர்ப்புக்கு பிறகு ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்த விஜு SFI என்னும் இந்திய மாணவர் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். ஆய்வுப் படிப்பு படித்தவர். பேராசிரியர். குஜராத்தில் நடந்தது கலவரம் இல்லை என்றும் அரசால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இஸ்லாமியர் படுகொலை (pogrom) அது என்றும் உண்மை அறியும் குழு அறிக்கையை வெளியிட்டவர். 2009ம் ஆண்டிலிருந்து விவசாயப் போராட்டக் களங்களில் இயங்கியவர். விவசாயிகள் தற்கொலைக்கு எதிராக மகாராஷ்டிர விவசாயிகளை ஒருங்கிமைத்து பேரணி நடத்தியவர். தில்லிக்கு செல்வோம் என பேரணி ஒருங்கிணைத்தவர். வட நாட்டின் மத்திய மாநிலங்களில் விவசாய நெருக்கடி கொண்ட நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் விவசாயிகளை அரசியல் படுத்தியவர். தெலெங்கானாவில் பகுஜன் இடது முன்னணி அமைய காரணமாக இருந்தவர்.

தற்போதைய விவசாயச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்பு உருவாக்க காரணமானது அகில இந்திய விவசாயிகள் சங்கம். அதன் தலைவர் அசோக் தவாலே, செயலாளர் ஹன்னன் மொல்லா, விஜு கிருஷ்ணன் போன்ற இடதுசாரிகளே.

அரசியல் இல்லாமல் எல்லாம் ஒரு போராட்டம் தன்னிச்சையாக கிளைத்தெழ முடியாது.

விவசாயப் போராட்ட வெற்றிக்கு பல சங்கங்கள் காரணமாக இருக்கலாம். ஆனால் பிரதான காரணம் இடதுசாரிகள், இடதுசாரி சங்கங்கள், செங்கொடிகள்!

-Rajasangeethan

;