facebook-round

img

கொரோனா தடுப்பூசி ஆபத்தா? - த.வி.வெங்கடேஸ்வரன், முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரச்சார்

தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் குறித்து ஏன் ஆராய்வதில்லை? ஏன் மூடி மறைக்கிறார்கள்? தடுப்பூசிகள் ஆபத்து தானே? இப்படி பலரும் கேள்விகளை தொடுக்கிறார்கள். பலர் உள்ளபடியே புதிய தடுப்பூசிகளை கண்டு மிரண்டு கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆனால் சிலர் இயற்கை மருத்துவம் - மாற்று மருத்துவம் என்ற பெயரில் தடுப்பூசியே தவறு என்று தவறான பிரச்சாரம் செய்கிறார்கள்.

அச்சம் நியாயம் தான்

பிரபல பகுத்தறிவு நடிகர் விவேக் அவர்கள் தடுப்பூசி அதரவு பிரசாரம் செய்ய முன்வந்து அடுத்த சில நாட்களில் அகலமரணம் அடைந்ததும் தமிழகத்தில் பலருக்கும் தடுப்பூசி குறித்த கிலி ஏற்பட்டது நியாயம் தான். தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் சில நாட்களிலேயே மரணம் என்றால் அச்சம் வரத்தான் செய்யும். புரிந்து கொள்ளக் கூடியது தான்.

ஆனால் அறிவியல் பார்வையில் இந்த நிகழ்வை காணும்போது நிதானம் வேண்டும். கோழி கூவி சூரியன் உதிப்பதில்லை; இரண்டு நிகழ்வுகள் அடுத்தது நிகழ்ந்தால் ஒன்று காரணம் மற்றது விளைவு என்று ஆகிவிடாது.

எனவே தான் ஆய்வக பரிசோதனை, விலங்குகள் மீது பரிசோதனை, ஒன்றல்ல மூன்று கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை கடந்து வந்தாலும் பரவலான பயனுக்கு அனுமதி அளித்த பிறகும் தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் குறித்து தொடர் ஆய்வுகள் செய்து கொண்டே தான் இருப்பார்கள்.

பல லட்சம் பேருக்குத் தடுப்பூசி அளிக்கும்போது ஏற்படும் அரிதான விளைவுகளை இனம் காண்பது நான்காம் கட்டம்; பல ஆண்டுகள் தொடர்ந்து அளித்து வரும் போது காலப்போக்கில் ஏற்படும் விளைவுகள் ஐந்தாம் கட்டம். இதுதான் நவீன அறிவியலின் அறம்.

லாப நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் இந்த ஆய்வுகளை புறம்தள்ளி தமது லாபம் ஒன்றே குறிக்கோள் எனச் செயல்பட துடிக்கலாம். ஆனால் தொடர்ந்து அறிவியல் அமைப்பு, பக்கவிளைவுகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்களின் நலன் கருதி, நிர்பந்தித்துக் கொண்டே தான் இருக்கும்.

பாரம்பரிய மருந்துகளில் பக்க விளைவு இல்லையா?

இங்கே ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ மருந்துகளில் பக்கவிளைவுகளே இல்லை என கூறுவோர் உளர். எத்தன அடிப்படையில் அப்படி கூறுகிறார்கள்? அதற்க்கு என்ன ஆதாரம்? சித்த ஆயுர்வேத மருந்து எடுத்துக் கொண்டவர்கள் மீது தொடர் ஆய்வுகள் ஏதும் உள்ளதா? எங்கே அந்த ஆய்வுக்கட்டுரை. ஒரு விடயத்தை நாம் உற்று நோக்க வில்லை என்றால் நம் பார்வையில் படாமல் போகலாம். எனவே பாரம்பரிய மருந்துகளுக்குப் பின்விளைவுகள் ஏதுமில்லை என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த, ஓரளவு அனுபவம் சார்ந்த, கருத்தாக இருகிறதே தவிர ஆய்வுகளின் அடிப்படையில் நாம் ஏற்கக்கூடிய கருத்து அல்ல. சூரியன் கிழக்கே உதிக்கிறது எனும் நமது அனுபவம் மெய் அல்ல என நாம் அறிவோம். எனவே அனுபவங்கள் மட்டுமே மெய்யை இனம் காண போதாது.

நவீன அறிவியலில் வெறும் நம்பிக்கை மட்டும் போதாது; ஸ்துலமான சான்றுகள் வேண்டும். எனவே தான் முதலில் தடுப்பூசியை வைத்து ஆய்வகத்தில் பரிசோதனை செய்வார்கள். குறிப்பிட்ட வகை செல்களில் கிருமியை வளர்த்து அதன் மீது தடுப்பூசி செலுத்தி அதன் விளைவைக் காண்பார்கள். இந்த சோதனையில் வெற்றி கண்டால் சுண்டெலி, எலி, முயல் போன்ற விலங்குகளில் முதலில் பரிசோதனை மேற்கொள்வார்கள். ஆய்வக சோதனை எலிகளை இரண்டு குழுவாக பிரித்து ஒரு குழுவுக்கு மட்டும் தடுப்பூசி அளிப்பார்கள். பின்னர் இரண்டு குழுவில் உள்ள விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்துவார்கள். தடுப்பூசி தரப்பட்ட விலங்கு அளிக்கப்படாத விலங்கு இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை உற்று நோக்குவார்கள். இரண்டு குழுவிலும் மரணம் ஏற்படுகிறதா, எவ்வளவு கடும் நோய் ஏற்படுகிறது, அந்த விலங்களுகளின் உடலில் உருவாகும் ஆன்டிபாடி வீரியம் என்ன என்பது போன்ற பல தரவுகளை திரட்டி பகுத்து ஆராய்வார்கள். ஆய்வு காலத்துக்குப் பிறகு விலங்குகளின் உடல்கூராய்வு செய்து, தடுப்பூசி போடப்பட்ட மற்றும் போடப் படாத விலங்குகளின் நுரையீரல் பாதிப்பு என்ன என ஒப்பிட்டு ஆய்வு செய்வார்கள். எலி, முயல் போன்ற சிறு விலங்குகள் இடையே ஆய்வு முடிந்ததும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு நெருக்கமாக இருக்கும் குரங்கு போன்ற விலங்குகளில் இதே போல ஆய்வு மேற்கொள்வார்கள்.

சமவாய்ப்புள்ள இரட்டை மறைவு கட்டுப் படுத்தப்பட்ட சோதனை

இதற்க்கு அடுத்த கட்டம் மனிதர்களிடம் பரிசோதனை. முதல் கட்ட மருத்துவ பரிசோதனை பின்னர் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்னர் தான் குறிப்பிட்ட தடுப்பூசியை பரவலான பயனுக்கு அனுமதி தருவார்கள். மருந்து ஆராய்ச்சி உட்பட பல்வேறு அறிவியல் ஆய்வுகளில் பரிசோதனைக் குழுவுடன் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்டக் குழு (control group) என்ற ஒன்றை உருவாக்கி ஒப்பிட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இந்த சமவாய்ப்புள்ள இரட்டை மறைவு கட்டுப் படுத்தப்பட்ட சோதனை (randomised double-blind control trial) அடிப்படையில் தான் முதல், இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

இந்த முறையில் பரிசோதனையில் பங்குபெறும் தன்னார்வலர்களில் பாதி பேருக்கு உணமையான தடுப்பூசியும் மற்றவர்களுக்குப் பிளாசிபோ எனும் பாசாங்கு மருந்தும் கொடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். ஆனால் யாருக்கு தடுப்பூசி தரப்பட்டது, யாருக்கு பிளசிபோ தரப்பட்டது என்பது ஆய்வின் இறுதியில் தான் வெளிபடுத்தப்படும். ஆய்வுக் காலம் முடிந்த பின்னர் தரவுகள் தொகுக்கப்பட்டு ஒப்பிடப்படும். எடுத்துக்காட்டாக இரண்டு குழுவிலும் சற்றேறக்குறைய சமமான சதவிகித நபர்களுக்குத் தலைவலி ஏற்பட்டால், அது தடுப்பூசியால் ஏற்பட்டதல்ல எனக் கருதலாம். ஆனால் தடுப்பூசி தரப்பட்டவர்களுகக் கூடுதலாகக் காய்ச்சல் ஏற்பட்டால், தடுப்பூசியின் பக்கவிளைவு என்ற முடிவுக்கு வரலாம். அதே போலத் தடுப்பூசி போட்டவர்கள் போடாதவர்கள் என இரண்டு குழுக்களிலும் எத்துனை பேருக்குக் கொரோனா தொற்று ஏற்படுகிறது; அவ்வாறு ஏற்படுபவர்களில் எவ்வளவு பேருக்கு நோய் கடுமை அடைகிறது எனவும் ஆய்வு செய்வார்கள். நுரையீரல் சிடிஸ்கேன், ரத்த பரிசோதனை போன்றவையும் மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வுகளில் ஆபத்தான பக்க விளைவுகள் இல்லை என்பதோடு உள்ளபடியே தடுப்பூசி பயன் தருகிறது என்றால் மட்டுமே பரவலான பயனுக்கு அனுமதி அளிப்பார்கள்.

அரிதாக நிகழும் பக்க விளைவுகள்

பல லட்சம் பேரில் சிலருக்கு ஏற்படும் மிகமிக அரிதான பக்கவிளைவுகளை முதல் மூன்று கட்டடங்களில் அறிய முடியாது. எனவே தான் பரவலான பயனுக்கு அனுமதி அளித்த பின்னரும் மருந்து தடுபூசிகளின் விளைவுகள் குறித்த ஆய்வு நடந்துகொண்டே இருக்கும்.

2.5 கோடி பேருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் பிரிட்டனில் 1.8 கோடி பேர் சேர்த்து மொத்தம் 4.3 கோடி பேருக்கு ஆஸ்டர் செனிகா கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்ட பின் ஐரோப்பிய யூனியனில் 86 ரத்த உறைதல் நிகழ்வுகள் மற்றும் பிரிட்டனில் 30 ரத்த உறைதல் நிகழ்வுகள் என மொத்தம் 116 நிகழ்வுகள் கண்டறியப்பட்டன. பின் விளைவுகள் குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யும் போதுதான் இவை வெளிப்பட்டன என்பதை கவனியுங்கள்.

இந்தியாவிலும் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் சில கோடி பேருக்கு அளித்த பின்னர் அவற்றால் ஏற்படும் அரிதான பக்கவிலைகள் குறித்து தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர். 3.4.2021 வரை 7,54,35,381 தடுப்பூசி (6,86,50,815கோவிஷீல்டு; 67,84,562 கோவேக்சின்) தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் ரத்தப்போக்கு மற்றும் ரத்த கட்டிகள் உருவாகுதல் தன்மை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து மொத்தம் 23,000 பக்கவிளைவுகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் வெறும் ஜுரம் தலைவலி போன்ற எந்தவித ஆபத்தும் அற்ற பக்க விளைவுகளை நீக்கி பார்க்கும் போது 700 பக்கவிளைவுகள் மட்டுமே தீவிர தன்மை மிக்கவையாக இருந்துள்ளன. அதாவது பத்து லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால் 9.3 என்ற அளவில் தீவிர பக்கவிளைவு என்று ஆகிறது.

இவற்றுள் 498 தீவிர பக்கவிளைவுகளை நுணுக்கமாக ஆய்வு செய்ய எடுத்துக்கொண்டனர். இவற்றுள் கோவிஷீல்டு போடப்பட்டவர்களுள் 26 ரத்த கட்டிகள் உருவாகும் நிகழ்வுகள் கண்டறியப்பட்டன. இது பத்துலட்சம் பேரில் 0.61 என்ற அளவில் நிகழ்ந்துள்ளது. கோவேக்சின் போடப்பட்டவர்களில் ரத்த கட்டிகள் ஏற்படும் நிகழ்வுகள் தோன்றவில்லை.

இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகள் மூலம் ரத்த கட்டிகள் உருவாவதற்கான இடர் வாய்ப்பு 0.61 / ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்களுக்கு என்ற நிலையில் பிரிட்டனில் 4/ ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்களுக்கு எனவும் ஜெர்மனியில் 10/ ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்களுக்கு என்றும் தெரியவருகிறது. ஆகவே இந்தியாவில் ஒப்பீடளவில் மிகவும் குறைந்த அளவே கவலை தரும் பக்க விளைவுகள் ஏற்படுகிறது என அறிய முடிகிறது.

அரிதாக நிகழும் பக்கவிளைவுகளின் அறிகுறிகள் என்ன?

மூச்சு விடுவதில் சிரமம்; நெஞ்சுப்பகுதியில் வலி அல்லது கை கால்களில் வலி குறிப்பாக கணுக்கால் பகுதி மற்றும் கை புஜத்தில் வலிதொடர்; வாந்தியுடன் அல்லது இல்லாமல் வயிற்று வலி; ஊசி போட்ட இடத்தில் சின்ன சின்ன சிவப்பு நிற திட்டுக்கள்; பார்வை கோளாறு ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ உதவி பெற்றால் நலம் பெறலாம்.

ஆபத்தான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாமா?

காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தது போலத் தடுப்பூசி போட்டபின்னர் அடுத்த சில நாட்களில் விரும்பத்தகாத உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக சில செய்திகள் தவிர தடுப்பூசியால் அச்சம் பீதி கொள்ளும் அளவுக்கு பின்விளைவுகள் எதுவும் இதுவரை இந்தியாவில் இனம் காணப்படவில்லை.

கொரோனா தொற்று அதே பத்து லட்சம் பேருக்குப் பரவினால் 168000 பேருக்கு ரத்த உறைதல் தன்மையை உருவாக்கிவிடும். அதே சமயம் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் பத்து லட்சம் பேருக்கு 0.61 என்ற விகிதத்தில் தான் ஆபத்து உள்ளது. எனவே நமது முன் உள்ளது இரண்டு பாதைகள் தான். தடுப்பூசி எடுத்துப் பத்து லட்சத்துக்கு 0.61 என்ற ஆபத்தை நேரிடுவது. அல்லது சும்மா இருந்து கரோனா வந்தால் பார்த்துக்கொள்ளலாமென இருப்பது. அப்படி இருந்தால் ஆபத்து பத்து லட்சம் பேருக்கு 16800 ரத்தம் உரைத்தல் ஆபத்து. இதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். வேறு போக்கிடம் நம்மிடம் இன்று இல்லை.

இதில் எந்த ஆபத்து பெரிது? அதாவது தடுப்பூசி தொடர்பான இந்த அரிதினும் அரிதான மரணங்களுக்கு அஞ்சி நாம் தடுப்பூசி பெறாமல் விட்டால் கொரோனா பெருந்தொற்று அடைந்து அதன் மூலம் மரமணடையும் வாய்ப்பு பல ஆயிரம் மடங்கு அதிகம்.

ஆச்சம் தவிர்ப்போம்

தடுப்பூசிபின் விளைவுகளாக நிகழ்ந்த மரணம் எனக் கூறப்படுபவை எண்ணிக்கை மிக மிகக் குறைவு. தடுப்பூசி போட்டுத் தான் இப்படி நேர்ந்தது என்பதற்கான நேரடி ஆதாரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. இப்படி சரியான ஆதாரமில்லாத, ஒரு இடரை நினைத்து பீதி கொண்டு தடுபூசியிலிருந்து கிடைக்கக்கூடிய பெரும் பலன்களை விட்டுவிடக் கூடாது. கொரோனா தடுப்பூசிகள் பல கோடிப் பேரைக் காப்பாற்றக்கூடியவை; பெரும் தொற்றை முடிவுக்குக் கொண்டுவர இது மிக அவசியமும் கூட.

;