facebook-round

img

முழு அடைப்பில் பெரும் உடைப்பா? - க.கனகராஜ்

ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகளின் ஊழியர்கள் தங்களுடைய பாதுகாப்புக்காகவும் உயிருக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு கொரோனா தொற்றின் தீவிரத்தை தடுப்பதற்கும் குறைப்பதற்கும் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. இதில் சிலருக்கு விதிவிலக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சாதாரண மக்கள் தெருவில் வைத்து அன்றாடம் விற்றுப் பிழைப்பவர்கள் அதன் மூலமாக மட்டுமே வாழ்கிறவர்கள் கூட வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். ஆனால் கொழுத்த லாபம் பார்க்கிற கம்பெனிகள் இந்தக் காலத்திலும் கூட தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

நிறுவனங்களுக்கு லாபம் வருவதும், தொழிற்சாலைகளை இயக்கி நாட்டுக்கு அந்நியச் செலாவணி ஈட்டிக் கொடுப்பதும் அவசியம். அது பொருளாதாரத்தின் முக்கியமான அம்சம். அதேசமயத்தில் நிறுவனங்கள் செயல்படுவதன் மூலமாக தொழிலாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவர்கள் வீடுகளுக்கு செல்கிறார்கள் மற்ற இடங்களுக்கு போகிறார்கள், பயணம் செய்கிறார்கள் என்கிறபோது அது மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

குறைந்தபட்சம் 30 தொழிலாளர்கள் இதுவரை கொரோனா தொற்றால் இறந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் நிறுவனங்கள் எந்த தங்கு தடையும் இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. சாதாரண மனிதர்களுக்கு சட்டத்தில் இருக்கக்கூடிய ஓட்டைகளை பற்றி தெரிகிறதோ இல்லையோ, அவர்களைப் பொறுத்தளவில் அரசு சொன்னால் அதை வேதமாக கடைப்பிடித்துக் கொண்டு ஈரத் துணியைக் கட்டிக் கொண்டு கூட வீட்டில் இருப்பார்கள். ஆனால் கார்ப்பொரேட்டுகளைப் பொறுத்த மட்டில்சட்டத்தில் ஓட்டை இல்லை என்றாலும்கூட ஓட்டை இருப்பதாகக் கூறி அதைச் சொல்லி தப்பிப்பார்கள்.

அத்தியாவசிய பொருட்கள் என்றால் இந்த காலத்தில் இரண்டுதான் இருக்க முடியும். ஒன்று உணவு மற்றொன்று மருந்து அல்லது மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு உபகரணங்கள் .இதர தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக இயங்குவதற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது. இதை உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முழு முடக்க காலத்தில் நிறுவனத்தின் இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அந்த ஆலையில் பணிபுரிகிற தொழிலாளர்களுக்கான முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.

MEPS மாதிரியான இடங்களில் எல்லாம் ஏதோ ஒரு மருத்துவப் பொருளின் ஒரு சின்ன பகுதியை தயாரிப்பதாக சொல்லிக் கொண்டு முழு நிறுவனத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரியான இடங்களில் சில தொழிற்சாலைகள் தங்களுக்கு வேண்டிய அதாவது தங்கள் உறவினர்களுக்கு, அதிகாரிகளுக்கு வேண்டிய ரெம்டெஸ்விரை வாங்குவதற்காக அவர்கள் தொழிலாளர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்தப் பேரிடர் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு மிகப்பெரிய அளவிற்கு அடிமைத்தனம் கோலோச்சுவதை அனுமதிக்க முடியாது. அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும். அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியைத் தவிர இதர நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். இதர நிறுவன தொழிலாளிகளுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு தரப்படவேண்டும். 50 சதவீத தொழிலாளிகளுடன் இயங்கலாம் என்றால், 50% தொழிலாளிகள் மட்டும்தான் செல்கிறார்களா என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

விதியை மீறி இயங்கிய நிறுவனங்களில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கான நிவாரணத்தை அந்த நிறுவனங்களே கொடுப்பதற்கும், அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் அரசு முன்வர வேண்டும். இதை அரசும் அதிகாரிகளும் முறையாக அமல்படுத்த ஏற்பாட்டை செய்ய வேண்டும்.

-Kanagaraj Karuppaiah

;