facebook-round

img

அதிகாரம் என்பது மக்களுக்கு பணியாற்ற வழங்கப்படும் அனுமதிச் சீட்டா? மக்களை கொன்று குவிக்க வழங்கப்பட்டிருக்கும் கொடுவாளா ?

சம்பவம் 1

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தந்தையான விவசாயி எஸ்.பி.ஐ வங்கியில் பெற்ற கடனை கட்டி முடிப்பதற்கு முன்னதாக உயிரிழந்து விடுகிறார். அதனை ஜாமீன் கையெழுத்து போட்ட அவரது மகன் கனகராஜ் தான் கட்டி முடிப்பதாக உறுதி அளிக்கிறார். அதன்படி கட்டியும் வந்துள்ளார். அதே வங்கியில் அவரது மற்றொரு சேமிப்புக் கணக்கும் இருந்திருக்கிறது. தற்போதைய ஊரடங்கு மாதத்தில் கடன் தவணையை கட்ட முடியாமல் போனதால் அவரது சேமிப்புக் கணக்கை வங்கி முடக்கி உள்ளது. மருத்துவத் தேவைக்காக உள்ள பணம் அதனை முடக்க வேண்டாம் என பல முறை கோரிக்கை வைத்த பின்னரும் வங்கி நிர்வாகம் மனமிறங்கவில்லை. கனகராஜ் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் இருந்த போதும் வங்கி மேலாளர் தனது மனிதாபிமானத்தை வேறு ஏதோ நல்ல வங்கியில் அடகு வைத்திருந்தார் போல. சிகிச்சைக்கு உரிய பணம் கிடைக்காமல் விவசாயி உயிரிழந்துவிட்டார். விதிகளுக்கு உட்பட்டே பணத்தை முடக்கியதாக கூறியிருக்கிறார் வங்கி மேலாளர்.

இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

சம்பவம் 2

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்ற பின்பு முதன்முறையாக தான் பிறந்த சொந்த கிராமத்திற்கு செல்கிறார். போகும் போது ரயில் மூலம் சென்றவர் திரும்பி விமானத்தில் வந்தார். கான்பூரில் உள்ள கிராமத்திற்கு காரில் செல்கையில் சாலையில் பல மணி நேரத்திற்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மருத்துவமனைக்கு செல்ல நின்றிருந்த வாகனத்தில் வந்தனா மிஸ்ரா என்ற பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் காவல்துறையிடம் கெஞ்சிக் கேட்டும் வாகனம் விடப்படவில்லை. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டு தனது அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர்.

இந்த செய்தியின் மூலமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

அதிகாரம் என்பது மக்களுக்கு பணியாற்ற வழங்கப்படும் அனுமதிச் சீட்டா ? அல்லது அவர்களை கொன்று குவிக்க வழங்கப்பட்டிருக்கும் கொடுவாளா ?

-Bala Chakravarthi

;