facebook-round

img

அமெரிக்காவை ஆளுவோருக்கு அமெரிக்காவிலேய சிம்ம சொப்பனமாக இருக்கும் நோம் சோம்ஸ்கியின் விளக்கம்

(அமெரிக்காவை ஆளுவோருக்கு அமெரிக்காவிலேய சிம்ம சொப்பனமாக இருக்கும் நோம் சோம்ஸ்கி அளித்த ஒரு நேர்காணலின் சிறிய தொகுப்பு இது. தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்)

இந்த தேர்தல் முழுவதுமே அமெரிக்க ஜனநாயகம் எவ்வளவு எளிதில் உடையக் கூடியது என்பதையே காட்டுகிறது. ஒரு நோய்த் தொற்றினைக் கட்டுப்பாடின்றி பரவச் செய்து பத்தாயிரக் கணக்கிலான மக்களின் மரணத்திற்குக் காரணமான மோசமான முடிவை எடுத்த ஒரு மனிதன் நாட்டின் பெரும்பான்மை மக்களைத் தன் வசப் படுத்திச் செல்ல முடியும் என்பதும், அவரது காலணிக்கு பாலிஷ் போடும் கட்சி தேர்தலில் வெள்ளை மாளிகை தவிர பல மட்டங்களில் வெற்றி பெற முடியும் என்பதும் வியக்க வைக்கிறது… தேர்தல் முடிவுகளை டிரம்ப் நிராகரிப்பது எதேச்சாதிகாரமாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அவர் நடத்திய பிரச்சாரத்தின் உச்ச கட்டம்தான்.

இந்த நோய் இன்னும் ஆழமாகப் பரவியிருப்பது. ‘நாட்டைத் தன் சொந்த சொத்தாக வைத்திருப்பவர்கள்தான் அதை ஆள வேண்டும்’, ‘சிறுபான்மையாக இருக்கும் பணக்கார்களை பெரும்பான்மையான வசதி குறைந்தோரிடமிருந்து பாதுகாப்பதுதான் ஒரு அரசாங்கத்தின் பிரதான கடமை’ என்கிற கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த அமெரிக்க அரசியலமைப்புச் சட்த்திலிருந்துதான் பிரச்சினை தொடங்குகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக நடத்திய புரட்சியைப் புரட்டிப் போட பல கடுமையான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்ற காலங்களும் உண்டு. பின்னடைவு ஏற்பட்ட காலங்களும் உண்டு. கடந்த 40 ஆண்டுகளாக நவதாராள மயக் கொள்கை ஜனநாயகத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்க நினைக்கும் சக்திகளுக்கு எதிராகவும் பின்னடைவுதான். இதன் பொருளாதார விளைவு என்ன? 47 லட்சம் கோடி டாலர்கள் மதிப்புடைய சொத்து தொழிலாளி வர்க்கத்திடமிருந்தும், மத்திய தர வர்க்கத்திடமிருந்தும் (மக்கள் தொகையில் 90 சத வீதம்) மீதமிருக்கும் 10 சத வீத சூப்பர் பணக்காரர்களுக்கு மாற்றப் பட்டிருக்கிறது. ரீகன் காலத்திற்குப் பின் வந்த இந்த 40 ஆண்டுகளில், அமெரிக்க மக்கள் தொகையில் 0.1 சத வீதமே இருப்பவர்கள் நாட்டின் சொத்தில் 20 சதவீத்திற்கு சொந்தக்கார்களாக ஆகியிருக்கிறார்கள்.

ராண்ட் கார்ப்பரேஷன் கொடுக்கும் இந்தப் புள்ளி விவரங்கள் குறை மதிப்பீடு என நினைக்கிறேன். நவ தாராளமயம் என்கிற பெயரில் பொதுமக்களிடமிருந்து திருடுவதற்காக ரீகன் திறந்து வைத்த வரி ஏய்ப்புச் சொர்க்கங்கள், போலிக் கம்பெனிகள் வாயிலாக மேலும் பல பத்தாயிரம் கோடி டாலர்கள் பணக்காரர்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. பொருளாதாரக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்கிற பேயாட்டத்தை கிளிண்டன் மேலும் வேகப் படுத்திய போது போலி நிறுவங்கள் மேலும் பெருகின. இவற்றுக்கெல்லாம் எதிராக தொழிலாளர்கள் போராடிய போது ரீகனும் அவருடைய நவ தாராளமயக் கூட்டாளியான மார்கரெட் தாட்சரும் சம்பளங்களை, பென்ஷன் போன்ற பிற சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வெட்டி அவர்களை அடக்கினர். செயல்படும் ஒரு ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்பது சொத்துக் குவிப்பின், பெரும்பாலான பொது மக்களின் தேக்கம் மற்றும் வறுமையின் தொடர்ச்சிதான்.

-Vijayasankar Ramachandran

.

;