election2021

img

மேற்குவங்க இளைஞர்களை முற்றாக கைவிட்ட மம்தா அரசை வீழ்த்துவீர்.... பிரச்சாரக் கூட்டங்களில் அதிர் ரஞ்சன் சவுத்ரி, டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா, அப்பாஸ் சித்திக் வேண்டுகோள்....

கொல்கத்தா:
மேற்குவங்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மம்தா பானர்ஜிஅரசு முற்றாக தோல்வி அடைந்துவிட்டது என்றுமேற்குவங்க காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அதிர்ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார்.

மேற்குவங்க தேர்தல் களத்தில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. மொத்தம் எட்டு கட்டங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6 செவ்வாயன்று 31 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து  ஐந்து கட்டவாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.இடதுமுன்னணி தலைமையிலான ஐக்கியமுன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடதுசாரித் தலைவர்களும் காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணியின் தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிலிகுரி,கூச்பிகார், ஜல்பைகுரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் ஐக்கிய முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து சிலிகுரியில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் டாக்டர் சூர்யகாந்த மிஸ்ராவும் உரையாற்றினர்.அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் திரிணாமுல் அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது.இதன்விளைவாகத்தான் வேலைதேடி வேறு மாநிலங்களுக்கு வங்கத்து இளைஞர்கள் இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டு காலத்தில் அப்படி வேலை தேடி வெளிமாநிலங்களுக்குச் செல்லும் வங்க இளைஞர்களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளது” என்று கூறினார். “திரிணாமுல் கட்சியைப் போலவே பாரதியஜனதா கட்சியும் மத்தியில் ஆட்சிக்கு வரும் போதுநீள நீளமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டது. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக ஏழை, எளிய மக்கள் மீதும் தாழ்த்தப்பட்டமற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதும் சொல்ல முடியாத அளவிற்கு தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது” என்று சாடிய அதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்தத் தேர்தலில் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, மின்சாரம் பிரச்சனைகள், விவசாயிகளின் அடிப்படையான பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு முதன்மை முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.

டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா பேசுகையில், மம்தாவின் ஆட்சியில் டார்ஜிலிங் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வடக்கு வங்கமும் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது; டார்ஜிலிங் மலை மாவட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்க இடது முன்னணி அரசு அமலாக்கிய திட்டங்களையெல்லாம் படிப்படியாக தகர்த்து டார்ஜிலிங் மக்களை நிர்கதியாகவிட்டது திரிணாமுல் அரசு என்று சாடினார். 

அப்பாஸ் சித்திக் பிரச்சாரம்
ஐக்கிய முன்னணியில் இடம்பெற்றுள்ள இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எப்) மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 26 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த அமைப்பின் தலைவரான அப்பாஸ் சித்திக், தங்களது வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

உலுபெரியா தொகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் இடதுமுன்னணி தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிமன்பாசுவுடன் இணைந்து அப்பாஸ் சித்திக் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நீங்கள் இந்த மாநிலத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் என மக்களை மதரீதியாகவும் இனரீதியாகவும் பிரித்து அவர்களது வாக்குகளைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை அள்ளிவீசிய ஓர்அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறீர்களா? அல்லது, அனைத்து சமூக மக்களையும் சமமாகவும் கவுரவத்துடனும் நடத்துகிற, அவர்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் செய்துதரக் கூடிய ஓர் அரசாங்கத்தை தேர்வுசெய்ய விரும்புகிறீர்களா?” என்று வாக்காளர் களிடையே கேள்வி எழுப்பி பேசி வருகிறார்.

வங்கத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களில் 28 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை முஸ்லிம் மக்களே. இந்த வாக்கு வங்கியை தனதாக்கிக் கொண்டதன் மூலமாகவே மம்தா பானர்ஜி 2008ல் இடதுசாரிகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினார். ஆனால் இப்போது அதில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி முஸ்லிம் மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே கடந்த பத்தாண்டு காலமாகவே பயன்படுத்தி வருகிறார் என்று உணர்ந்த பல்வேறு முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு உருவான அமைப்புதான் இந்திய மதச்சார்பற்ற முன்னணி. இந்த தேர்தலில் இந்த அமைப்பின் செல்வாக்கு தளம் அதிகரித்துள்ளது. அது பிரச்சாரத்தில் பிரதிபலித்து வருகிறது.வெறும் மதரீதியான பிரச்சனைகளை மட்டுமல்ல, மேற்குவங்க இஸ்லாமிய இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்பட ஒட்டுமொத்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்தும் அப்பாஸ் சித்திக் பேசி வருகிறார். இந்தப் பிரச்சாரம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

;