election2021

img

மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை..... தேர்தல் ஆணையம் அறிக்கை....

புதுதில்லி:
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை, அன்று நடந்தது விபத்து தான் என விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் ஏப்ரல்  27  முதல் 29 ஆம் தேதி வரையில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். கடந்த புதன்கிழமை இத்தொகுதியில் மம்தா  வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினம் இத்தொகுதியில் உள்ள பிருலியா  பஜாரில் நடந்த பிரச்சாரத்தில் மம்தா கலந்து கொண்ட போது, 5 பேர் கொண்ட கும்பல்  தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டினார்.

இதில், கால் உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த அவர், கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில்  தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மனு கொடுத்துள்ளனர். அதேபோல், ‘மம்தாவின் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு  நாடகம். அது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும்,’ பாஜகவும் மனு  கொடுத்துள்ளது. இதையடுத்து, மேற்கு வங்க தலைமை செயலாளரிடம் இருந்து,  இத்தாக்குதல் தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையம் கேட்டது. இந்த அறிக்கை வெள்ளியன்று கொடுக்கப்பட்டது.

ஆனால், இந்த அறிக்கை மேலோட்டமாக இருப்பதாக தேர்தல் ஆணையம் சனிக்கிழமையன்று தெரிவித்தது. மேலும், தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி? தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக கருதப்படும்  நபர்கள் யார்? என்ற விவரங்களுடன், விரிவான அறிக்கையை அளிக்கும்படி மேற்கு  வங்க மாநில தலைமைச் செயலாளர் ஆலபன் பாந்தோபத்யாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது .

அதில். கடந்த வாரம் நந்திகிராமில் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தலைமைச் செயலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தாக்குதல் காரணமாக அவ்வாறு காயம் ஏற்பட வாய்ப்பு இல்லை என தேர்தல் பார்வையாளர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. தலைமைச்செயலர் அலபன் பந்தோபாத்யாய் அறிக்கையில், சம்பவ இடத்தில் நிகழ்ந்தது குறித்து தெளிவான வீடியோ காட்சிகள் கிடைக்கவில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;