election2021

img

வங்கத்தில் இடது முன்னணி வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம்....

கொல்கத்தா:
மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் கடந்த ஏப்ரல்1 அன்று தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு அத்தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவருமான மீனாட்சி முகர்ஜி, பிற தொகுதிகளில் பிரச்சாரப் பணிகளுக்கு சென்றுவிட்டார். 

வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்டங்கள் முடிந்துள்ள நிலையில் பிற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடது முன்னணி தலைமையிலான ஐக்கிய முன்னணி வேட்பாளர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.அப்படி வாக்காளர்களை சந்தித்துவரும் இடது சாரி தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இரண்டு பேர். ஒருவர் முகமது சலீம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர். வங்கத்தின் சாந்திதலா தொகுதியில் போட்டியிடுகிறார். மற்றொருவர் சுஜன் சக்கரவர்த்தி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர். நடப்பு சட்டமன்றத்தின் இடது முன்னணியின் தலைவர். இவர் ஜாதவப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 

முகமது சலீம் தனது தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இடது முன்னணி தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் புடைசூழ வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகிறார். செல்லுமிடமெல்லாம் மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்கிறார்கள். தங்களது குழந்தைகளை அவரது கைகளில் கொடுத்து ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறார்கள். மலர்கள் தூவியும் மாலைகள் அணிவித்தும் சலீம்மை அவர்கள் வரவேற்று மகிழ்கிறார்கள். 
டாக்டர் சுஜன் சக்கரவர்த்தியை ஜாதவ்பூர் தொகுதி மக்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள். கடந்த முறை அவரை தேர்ந்தெடுத்த ஜாதவ்பூர் வாக்காளர்கள் ஐந்தாண்டு காலம் சுஜன் சக்கரவர்த்தி தங்களில் ஒருவராக, திரிணாமுல் கட்சியின் அட்டூழியங்களை எதிர்ப்பவராக, கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வை காப்பதில் முன்னின்றவராக, தங்களது குடும்பத்தில் ஒருவராக அவரை பார்க்கிறார்கள். வீதி வீதியாக செல்லும் சுஜன் சக்கரவர்த்தியை மக்கள் ஓடி வந்து ஆரத் தழுவி அன்பை பொழிகிறார்கள். 

இந்த தொகுதியில்தான், நந்திகிராம் பிரச்சார பணிகளை முடித்துக் கொண்டு மீனாட்சி முகர்ஜி தனது பிரச்சாரத்தை துவக்கினார். நீங்கள் அங்கு வேட்பாளராக இருக்கிறீர்கள்; உங்கள் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்தவிட்டதே, ஓய்வு எடுக்கலாமே என்று செய்தியாளர்கள் கேட்கிறார்கள். அனைத்து தொகுதிகளும் எங்கள் தொகுதி தானே, வேட்பாளர் என்ற போதிலும் மார்க்சிஸ்ட் கட்சியில் ஒரு ஊழியர் என்ற முறையில் அடுத்தக்கட்ட பணிகளை செய்வதற்காக வந்திருக்கிறேன்; கட்சி என்ன பணிக்கிறதோ அந்த பணியை செய்வதே கட்சி ஊழியரின் கடமை என்கிறார் அவர். 

ஜாதவ்பூர் தொகுதியில் மீனாட்சி முகர்ஜி, ஏராளமான இளைஞர்கள் புடைசூழ டாக்டர் சுஜன் சக்கரவர்த்திக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இதேபோல மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா சூறாவளி பிரச்சார பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இடது முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட அடுத்து ஆறு கட்ட தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய முன்னணியின் அனைத்து ஊழியர்களும் ஒன்றுபட்டு களப்பணி ஆற்றி வருகிறார்கள்.

;