election2021

img

இடது, ஜனநாயக சக்திகளின் பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற ஜனநாயக மாதர் சங்கம் வாழ்த்து....

புதுதில்லி:
கேரளம், மேற்குவங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் இடது, ஜனநாயகசக்திகளின் கூட்டணியில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:கேரளம், மேற்குவங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம்ஆகிய மாநிலங்களில் மிகவும் முக்கியமானசட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இவை வரும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை நடைபெறுகின்றன.நம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு நாள்தோறும் வாழ்க்கை நடத்துவது என்பதே பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. நாட்டின் மக்கள்தொகையில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தங்கள் வாழ்விடங்களிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஆளும் பாஜக ஆட்சி எவ்விதமான உதவிகளையும் செய்திடவில்லை. இதனால் அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துகொண்டே செல்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. வேலைகள் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறியிருக்கிறது. கல்வி,சுகாதாரம் உட்பட அனைத்து அத்தியாவசியப் பணிகளும் தனியார்மயத்தை நோக்கித் தள்ளப்பட்டிருப்பதால் குடும்பங்களை நடத்துவது என்பது பெண்களுக்கு மாபெரும் சுமையாக மாறிப் போயிருக்கிறது.பொது விநியோக முறையைக் கைகழுவ பாஜக அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இதனால் நாடு முழுதும் பசி-பஞ்சம், ஊட்டச்சத்தின்மை, பட்டினிச் சாவுகள் அதிகரிக்கவும் இட்டுச் செல்லும்.மத்திய பாஜக அரசாங்கம் புதிதாகக் கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டங்களும், மூன்று வேளாண் சட்டங்களும் இதுநாள்வரை கடினமாகப் போராடிப்பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளையும், விவசாயிகளின் உரிமைகளையும் பறித்து, அவர்கள் மீது முழுமையான அளவில் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இவற்றுக்கு எதிராக நாட்டில் விவசாயிகள் உட்பட அனைத்துப் பகுதி மக்களும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். பெண்கள் மற்றும்சிறுமிகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களும், தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகளும் கொடூரமான முறையில் அதிகரித்திருக்கின்றன.

இவ்வாறு தேர்தல்கள் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் பெண்களின் குரலை உயர்த்திப்பிடிக்கக்கூடிய விதத்திலும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கக் கூடியவிதத்திலும், மத்திய ஆர்எஸ்எஸ் - பாஜக அரசாங்கத்தின் பல்வேறு எதேச்சதிகாரி, பாசிச, மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிரான மக்களின் அரசமைப்புச்சட்ட உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய விதத்திலும் நம் தேர்தல் போராட்டம் இருந்திட வேண்டும்.இந்தத் தேர்தல்களத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும்இதர இடதுசாரி வெகுஜன அமைப்புகளைச்சேர்ந்த  பெண் உறுப்பினர்கள், பல இடங்களில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறார்கள்.  அவர்கள் ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும், மக்களின் உரிமைகளையும்  காப்பதற்கான போராட்டத்தில் போலீசாரின் அடக்குமுறையைத் துணிவுடன் எதிர்கொண்டு, முன்னின்றவர்கள்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்து வாக்காளர்களிடமும், குறிப்பாக பெண் வாக்காளர்களிடமும், இடது ஜனநாயக சக்திகளின் சார்பில் போட்டியிடம் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்திட வேண்டும் என்றும், அதன்மூலம் கார்ப்பரேட் ஆதரவு, மதவெறி பாஜக-விற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐஜகூட்டணிக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும் படுதோல்வியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தேர்தலில் போட்டியிடும் பெண்வேட்பாளர்கள் வெற்றி பெற தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இவர்களின் வெற்றி மக்களுக்கு புதியதொரு வாழ்க்கையை, குறிப்பாக பெண்களுக்கு, அமைத்துத்தரும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.இவ்வாறு மாலினி பட்டாச்சார்யா, மரியம் தாவ்லே ஆகியோர் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளார்கள். (ந.நி.)

;