election2021

img

மும்முனைப் போட்டியில் வங்கம் நல்ல மாற்றத்தையே விரும்புகிறது...

மேற்குவங்க அரசியலில் இதுவரை கண்டிராத பெரும் மாற்றத்தை இப்போது நடைபெறுகிற சட்டப்பேரவைத் தேர்தலில் காணுகிறோம். சாதி, மத, மதவாதச் சிந்தனைகளுக்கு அப்பால் மாண்புமிக்க அரசியலில் புகழ் பெற்றிருந்த வங்கம் அதிலிருந்து திசைமாறி மதவாதப் பிளவும், கட்சித் தாவலுமான காட்சிகளே இப்போது காணப்படுகின்றன. நீண்ட34 ஆண்டுகள் நல்லாட்சி நடத்திய இடதுமுன்னணி அரசு முடிவுற்று திரிணாமுலின் மம்தா அரசு அதிகாரத்திற்கு வந்ததைத் தொடர்ந்து வங்கத்திற்கு பரிச்சயமில்லாத இத்தகைய மாறுபட்ட அரசியலுக்கும் கோஷ்டிப் பிளவுகளுக்கும் சாட்சியாக வேண்டிய நிலை வங்கத்திற்கு ஏற்பட்டுவிட்டது.

மேற்கு வங்கத்தில் எல்லா சாதி,மதத் தீவிரவாதிகளையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு திரிணாமுல் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், மாநிலஅதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக-வும் பலவிதத்தந்திரங்களைக் கையாளும்போது, மாநிலத்தின் ஜனநாயக-மதச்சார்பற்ற மாண்பின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கவும், பேணிப் பாதுகாக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுமுன்னணியும் அது முக்கிய பங்குவகிக்கிற ஐக்கிய முன்னணியும் தேர்தல் களத்தில் போராடுகின்றன. திரிணாமுலுக்கும் பாஜக-வுக்குமிடையேதான் முக்கியப் போட்டி என்று பிரபலதேசிய, மாநிலப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிடும்போது, வலுவாக எழுச்சியுற்று வருவதற்கான செயல்பாடுகளை இடதுமுன்னணியும் மற்ற மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளும் நடத்துகின்றன. மக்கள் விரோத, மதவாத பாஜக-வைத்தனிமைப்படுத்தி, ஜனநாயக விரோத வன்முறை அரசியல் நடத்தும் திரிணாமுலுக்கு முடிவுகட்டி வங்கத்தைப் பாதுகாப்பது என்கிற வேண்டுகோளை இடதுமுன்னணி முன்வைத்துள்ளது.
இடதுமுன்னணியும் காங்கிரஸும் இந்திய மதச்சார்பற்ற முன்னணியும் உள்ளிட்ட ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகளின் ஐக்கிய முன்னணி இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றன. மக்களின் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவும், மதச்சார்பற்ற ஜனநாயக உரிமைகளுக் காகவும் இக்கட்சிகள் தேர்தல் களம் கண்டுள்ளன.

158 பேரும்...
திரிணாமுலும் பாஜக-வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். இந்த இரண்டு கட்சிகளுக்குமிடையே கொள்கையில் ஒரு வேறுபாடும் இல்லை. திரிணாமுலுக்கு வாக்களிப்பது பாஜக-வுக்கு வாக்களிப்பதற்குச் சமம். அதுபோல் பாஜக-வுக்கு வாக்களிப்பது திரிணாமுலுக்கு வாக்களிப்பதற்குச் சமம். பாஜக சார்பில் போட்டியிடுகிற பலரும்திரிணாமுலிலிருந்து பாஜக-வுக்குத் தாவிய வர்கள்தான். பாஜகவின் 293 வேட்பாளர்களில் 158 பேரும் முன்னாள் திரிணாமுல்காரர்கள்தான்! அதேபோல், பாஜகவிலிருந்து நிறைய பேர் கட்சி மாறி திரிணாமுலுக்குச் சென்று அக்கட்சியின் வேட்பாளர் வாய்ப்பு பெற்றவர்களும் உண்டு. தேர்தலுக்கும் பிறகும் இந்த இரண்டு சாராரும் சுயநலம் கருதி தக்க சமயத்தில் இதுபோல் கட்சிமாறுவதும் தொடரும். யார் எங்கே இருப்பார்கள் என்பதை இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. இடதுமுன்னணியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் தாக்குவதற்கு இந்த இரண்டுகட்சிகளும் ஒன்றுசேர்ந்தாலும் ஆச்சரியப்படுவ தற்கில்லை. முந்தைய கால அனுபவம் இதையே தெளிவுப்படுத்துகிறது. 

பாஜகவில் உள்கட்சி மோதல்
ஒருபக்கம் அதிகாரத்தை நிலைநிறுத்தவும், மறுபக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றவுமாக வரிந்துகட்டிக் கொண்டு கோதாவில் இறங்கியுள்ள திரிணாமுலுக்குள்ளும் பாஜக-வுக்குள்ளும் வேட்பாளர் பெயரால் உள்கட்சி மோதலும் கால்வாரலும், ஒவ்வொரு நாளும் கட்சி மாறலும் நடப்பதால்என்ன செய்வதென்ற தடுமாற்றத்தில் அக்கட்சிகள் உள்ளன. நான்கு அமைச்சர்கள் உள்பட 52 எம்.எல்.ஏ.க்களுக்கு திரிணாமுல் இந்தமுறைதேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரவில்லை. இதைக் கண்டித்து நிறையபேர் பாஜக-வுக்குத்தாவினர். சிலர் அதிருப்தி வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளனர். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரபலமான நான்கு திரிணாமுல் அமைச்சர்களும், 18 எம்.எல்.ஏ.க்களும் பல தலைவர் களும் பாஜக முகாமுக்குச் சென்றுவிட்டனர். பாஜகமுகாமிலும் கடுமையான உள்சண்டை அரங்கேறுகிறது. அக்கட்சியின் தற்போதைய எம்.பி.க்களை யும், கட்சிமாறி வந்த திரிணாமுல்காரர்களையும், அக்கட்சியின் சினிமா நடிகர்களையும் நிரப்பி பாஜகவின் பழைய தலைவர்களை ஒதுக்கிவிட்டு பாஜக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மேலும், திரிணாமுலிலிருந்து கட்சிமாறி வந்த தலைவர்களுக்குப் பெரும் முக்கியத்துவம் தந்தது பாஜக-வுக்குள் அதிருப்தி கோபமும் மூண்டது. அதிருப்தியடைந்தவர்கள் பாஜக அலுவலகங்களை அடித்து நொறுக்கினர்; கதவை அடைத்துப் பூட்டினர்; சாலை மறியல் செய்தனர்; தலைவர்களைத் தடுத்து நிறுத்தினர். 

அமித்ஷா , நட்டா முயற்சி தோல்வி
அமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் உள்ளிட்ட மத்திய உயர்மட்டத் தலைவர்கள் தலையிட்டும் பாஜக அதிருப்தியாளர்களின் சண்டையை அடக்கமுடியவில்லை. பல தொகுதிகளில் அதிருப்தியாளர் படையே களத்தில் இறங்கியது. திரிணாமுலிலிருந்து கட்சிமாறி வந்த எம்.எல்.ஏ.க்களும் தலைவர்களும் உள்ளிட்ட பலருக்கும்  பாஜக சீட் வழங்கியது. வேட்பாளர் ஆக்குவதற்கு கட்சியில் சொந்த ஆட்கள் கிடைக்காததனால்தான் கட்சிமாறி வந்தவர்களையும், திரைப்படத்துறையினரையும் வணிகர்களையும் மற்றவர்களையும் பெருமளவில் சார்ந்திருக்க வேண்டிவந்தது. பெருமளவில் பணம் வாங்கித்தான் வேட்பாளர்கள் நிச்சயிக்கப்பட்டனர் என்றும், கட்சிக்காக நீண்டகாலமாக உழைத்த தகுதியுள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காமல் ஒதுக்கப்பட்டனர் என்றும் முக்கிய தலைவர்களே மனம் நொந்து கூறினர். 

172 தொகுதிகளில் அதிருப்தியாளர்கள் போட்டி
பணம் தராத பலருக்கும் பாஜகவில் வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தகுதியுள்ளவர்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை 172 தொகுதிகளில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக அதிருப்தியாளர்கள் போட்டியிட்டனர். பல இடங்களிலும் இவர்களை வாபஸ்பெறச் செய்ய எடுத்த முயற்சி தோற்றுவிட்டது. அதிருப்தி வேட்பாளர்களாகக் களம் இறங்கிய பலரும் பாரதீய ஜனசங்கம் என்ற பெயரில் போட்டியிட்டுள்ளனர்.இத்தகைய தலைவர்கள் தங்கள் சுயநலனுக்காக இடமும் புகழும் தேடி ஓடும்போது சாதாரண ஆட்கள் பலரும் திரிணாமுல், பாஜக கட்சிகளின் தொடர்பை விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், இடதுமுன்னணியின் செயல்பாடுகளில் வந்து பங்கேற்கிறார்கள், தவறான புரிதலுக்கு உள்ளாக்கப்பட்டு இடதுமுன்னணியை விட்டுச்சென்ற ஏராளமானோர் இப்போது இடதுமுன்ன ணிக்குத் திரும்பி வருகிறார்கள். இடதுமுன்னணி மட்டுமே தங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பாடுபடுகிறது என்கிற மறுசிந்தனைதான் அவர்களை மீண்டும் இடதுஅணிக்கு வரச்செய்துள்ளது. தேர்தல் பணிகளில் இது தெளி வாகப் பிரதிபலிக்கிறது.

மும்முனைப் போட்டி
சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வலுவான மும்முனைப் போட்டியை இந்தமுறை மேற்கு வங்கம் காண்கிறது. வன்முறை அரசியலை அடிப்படையாகக் கொண்ட திரிணாமுல், மதவாத பாசிஸ்ட் சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற பாஜக, ஜனநாயக உரிமைகளுக்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் போராடுகிற இடது முன்னணி முக்கியப் பங்கு வகிக்கிற ஐக்கிய முன்னணிஎன எல்லோரும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்கள். திரிணாமுலுக்கும் பாஜகவுக்குமிடையே தான் முக்கியப் போட்டி என்று பிரபல தேசிய, மாநிலஊடகங்கள் பிரச்சாரம் செய்யும்போது வலுவான நிலையில் திரும்பி வருவதற்கான நடவடிக்கைகளையே இடதுமுன்னணியும் மற்றஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் செயல்படுத்துகின்றன. மக்கள் நலனைப் பாதுகாக்கிற மதச்சார்பற்ற ஜனநாயக அரசை அமைப்பது என்கிற இலட்சியம்தான் இடதுமுன்னணியின், ஐக்கிய முன்னணியின் செயல்களத்தில் முன்னால் நிற்கிறது. சம ஆபத்தானவையாக திரிணாமுலும் பாஜக-வும் ஒரே மாதிரி மக்களின் விரோதிகளாக உள்ளன. இந்தக் கருத்துடன் ஒன்றுபடுவதற்குத் தயாரான காங்கிரஸ், சிறுபான்மை மற்றும் பிற்பட்டோர் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து இடதுமுன்னணி ஐக்கிய முன்னணியை உருவாக்கி தொகுதிகள் பங்கீடு செய்தது.

மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண...
இடதுமுன்னணியின் ஐக்கிய முன்னணியால் மட்டுமே வங்க மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியும். அதற்குத் தேவை ஓர் அரசு. பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகள் பற்றியோ, மிகக்கடுமையான விலை உயர்வு, விவசாயிகளுக்கு எதிரான சட்டம், குடியுரிமைச் சட்டம் ஆகியவை பற்றியோ திரிணாமுல் ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. இடதுமுன்னணியும், ஐக்கிய முன்னணியும் மட்டுமே இவற்றை முக்கிய தேர்தல் விஷயமாக்கியுள்ளன. மாநிலத்தில் எல்லா துறைகளிலும் வளர்ச்சி பின்னோக்கிச் செல்கிறது. அதிலிருந்து மாநிலத்தைப் பாதுகாத்து மாநிலத்தை முழுமையான வளர்ச்சிக்காக திரிணாமுலையும் பாஜகவையும் தோல்வியுறச் செய்து இடதுமுன்னணி, ஐக்கிய முன்னணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டிய தேவையைமக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நாள்தோறும்இந்த முன்னணிகளின் பிரச்சார கூட்டங்களுக்கு மிகத் திரளான மக்களின் வருகையே இதை எடுத்துக்காட்டுகிறது.

தில்லி போராட்டத் தலைவர்கள் பங்கேற்பு
இன்குலாப் முழக்கத்தின்,  புகழ்பெற்ற வீரமிக்க விவசாயிகளது தேபகா போராட்டத்தின் மண்ணாகியவங்கத்தில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் துரோகமிழைக்கிற பாஜகவைத் தோல்வியுறச் செய்வதற்காக தில்லியில் விவசாயிகளின் எழுச்சிமிக்க போராட்டத்தை நடத்துகிற  சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைவர்களும் வங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். ஒற்றை ஓட்டுகூட பாஜகவுக்குப் போடக்கூடாது என்று  வங்க மக்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளுடன் மாநிலத்தில் பல இடங்களுக்கும் பயணித்து விவசாயப் பஞ்சாயத்துகள் நடத்தினர். தில்லி கிசான் மோர்ச்சா தலைவர்களாகிய ஹன்னன் முல்லா, பல்பிர்சிங் ரஜ்வால், யோகேந்திர யாதவ், சமூகச் செயல்பாட்டாளராகிய மேதா பட்கர் முதலான பல தலைவர்களும் அவற்றில் பங்கேற்று உரையாற்றினர்.எட்டு கட்டங்களாக நடைபெறுகிற வங்கத் தேர்தலில் நான்கு கட்டங்கள் நடைபெற்று முடிந்தன. பரந்த அளவில் வன்முறைகள் நிகழ்ந்திருந்தும் அதை எதிர்கொண்டு மக்கள் பெருமளவில் வாக்களித்தனர்.

தொகுப்பு : கோபி, கொல்கத்தா

நன்றி: சிந்தா (மலையாள வாரஇதழ்)

தமிழில்: தி.வரதராசன்

;