election2021

img

உங்கள் ஆட்டம் இன்னும் 4 நாட்கள்தான்... மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை...

பழனி/கோயம்புத்தூர்:
முதலமைச்சர் பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

பழனி, மடத்துக்குளம், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “முதலமைச்சர் பழனிசாமிக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். இப்போது தொலைக்காட்சிகளில், ஊடகங்களில், நம்மை எதிர்க்கும் ஊடகங்களில் கூட தி.மு.க.தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்றுகருத்துக் கணிப்புகள் வந்து கொண்டிருக் கின்றன” எனக் குறிப்பிட்டார். இந்தக் கருத்துக்கணிப்புகளை வெளியிடாத வண்ணம் ஊடகங் கள் மிரட்டப்படுவதையும் அவர் விமர்சித்தார். 

இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:

முதன் முதலில் “புதிய தலைமுறை” கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அவர்கள் மிரட்டப்பட்டார்கள், அச்சுறுத்தப்பட்டார்கள். அடுத்து மாலை முரசில் வந்தது. அவர்களுக்கு எச்சரிக்கைவிட்டார்கள். அதேபோல தந்தி டிவியில் வந்தது.செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாள் கருத்துக்கணிப்பு வந்தது. அந்த டி.வி.யை மிரட்டி, அவர்களை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள். இன்றைக்கு ஜூனியர் விகடனில் வந்திருக்கிறது.

எவ்வளவு நாள் இந்த ஆட்டம்? இன்னும் நான்கு நாட்கள்தான் இந்த ஆட்டம் ஆடப்போகிறீர்கள். அதற்குப் பிறகு நீங்கள் எந்த இடத்திற்குப்போகப்போகிறீர்கள் என்பதைப் பாருங்கள்.அந்தக் கருத்துக் கணிப்புகளை நம்பி நாம் ஏமாந்து விடக்கூடாது. கருத்துக் கணிப்பு என்பது, நாம் செய்யும் பணிகளுக்கு ஊக்கத்தை யும் உற்சாகத்தையும் தரக்கூடியது. அதனால் இன்னும் நாம் பணியாற்ற வேண்டும்.நான் இன்னும் உறுதியோடு சொல்கிறேன். 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெற வேண்டும்.அதற்குரிய பணிகளை நீங்கள் செய்ய வேண்டும்.அதற்கு உங்களை நீங்கள் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பா.ஜ.க. எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டிற்குள் வரவே முடியாது. அதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே நிரூபித்துக்காட்டி விட்டோம். ஆனால் தப்பித்தவறிக் கூடஅ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வந்து விடக்கூடாது. இது ஆசை அல்ல. அது ஆபத்து என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றால்கூட அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக அல்லாமல் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாகத் தான் செயல்படுவார். அதற்கு உதாரணம், ஓ.பி.எஸ். மகன்.
எனவே, எவ்வாறு பா.ஜ.க.வை விரட்டினீர்களோ… அதேபோல அ.தி.மு.க.வையும் விரட்டியடிக்க வேண்டும். நாம் அவர்கள் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும், பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

;