election2021

img

தப்புக் கணக்குப் போடும் அதிமுக....

கந்தர்வகோட்டை திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு தொகுதி முழுவதும் பிரச்சாரம் களை கட்டுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறப்பனர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் பிரச்சாரம் தொகுதி முழுவதும் களைகட்டுகிறது. ஒரே நாளில் இரண்டு மூன்று தலைவர்களின் வருகை தொகுதி முழுவதுமான கவனத்தைப் பெற்றுவிடுகிறது.

திரைக்கலைஞர் ரோகிணி, இயக்கு னர் லெனின்பாரதி, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோரின் பிரச்சாரம்,புதுகை பூபாளம், ஆலங்குடி விடியல் குழுவினரின் கலைநிகழ்ச்சி என ஒவ்வொரு நாளும் தொகுதி முழுவதும் பட்டையைக் கிளப்புகின்றன. வேட்பாளரின் எளிமையும், அவரது சேவையும் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.அதே நேரத்தில் எதிர்த்தரப்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தொகுதிக்குள்தான் இருக்கிறாரா என்கிற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது. கிணற்றுக்குள் போட்ட கல்லாகஎந்தச் சலனமும் இல்லை. இதுகுறித்து, அதிமுக தரப்பை சேர்ந்த ஒருவரிடம் விசாரித்த போது, ‘‘நாங்க என்னத்த சொல்லி ஓட்டுக் கேக்குறது. 10 வருசமா அதிமுக வசம்தான் தொகுதி இருந்தது. ஒரு திட்டமும் உருப்படியாக நிறைவேற்றவில்லை. மாவட்ட அமைச்சர்கூடஇந்த தொகுதிக்கு ஒருநாள் பிரச்சாரத்துக்குக்கூட இங்கே வரமுடிய வில்லை. அந்த அளவுக்கு அவரது தொகுதியிலேயே ‘தண்ணி’ குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் தரப்பிலிருந்து வைட்டமின் ‘பி’- இப்பதான் வந்திருக்காம். இனி எங்களின் ஒரே தேர்தல் வேலை அதை கொடுப்பது தான்; கொடுத்தாலும் ஓட்டுக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் இல்லை’’ எனப் புலம்பினார். 10 ஆண்டுகள் கொள்ளையடித்த பணத்தை வாரி இறைப்பதன் மூலம் ஓட்டை வாங்கிவிடலாம் என்ற தப்புக் கணக்கு இந்தத் தேர்தலில் பலிக்காது என்பதே களத்தின் நிலையாகஉள்ளது.

ஆரூரான்

;