election2021

img

யாருங்க இந்த மோடி? (மதுரை விஜயம்)

மதுரையில் தேர்தல் பரப்புரை என்ற பெயரில் பாஜக-வின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் தேர்தல் பரப்புரை (?) நிகழ்த்திய மோடி, அதிமுக-வின் ஆறு சிலிண்டர்கள் இலவசம், வாஷிங்மெஷின் இலவசம் உள்ளிட்ட எந்தத் திட்டங்களையும் தாம் ஆதரிப்பதாகவோ, இந்த இலவசத் திட்டங்களுக்காக வாக்களியுங்கள் என்றோ கூறவில்லை. 

எய்ம்ஸ் குறித்து சிந்தித்ததே சாதனையாம்!

மதுரை எய்ம்ஸ் பணிகள் குறித்து முதல்வர் வாய்திறக்கவில்லை. துணை முதல்வர் பேசுகையில், “மோடியின் முயற்சி மதுரைக்கு எய்ம்ஸ் வருவதற்கு தூண்டுகோலாக இருந்தது” என்று சம்பந்த சம்பந்தமில்லாமல் பேசினார். மோடி பேசுகையில், இரண்டு ஆண்டுகளாக எய்ம்ஸ் பணிகள் ஏன் நடைபெறவில்லை எனக் கூறுவதற்கு பதிலாக, “திமுக-காங்கிரஸ் இரண்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவது குறித்து சிந்திக்கவில்லை; சிந்தித்தது பாஜக-தான்” என்றார். பணிகள் எப்போது நிறைவடையும் எனக் கூறாமல், “தொற்றுநோய் சிகிச்சைக்கு தனிப்பிரிவு தொடங்கப்படும். சர்வதேச தரத்திலான சிகிச்சை அளிக்கப்படும்” எனக் கூறி நழுவிக்கொண்டார்.

                               **************

ஸ்மார்ட் சிட்டி சாதனையா? வேதனையா?

ஸ்மார்ட் சிட்டி பணிகள் மதுரையில் மத்திய அரசின் நிதி உதவியோடுநடைபெற்றுவருகிறது. அதன் சாதனைகளையோ,  வேதனைகளையோ மூன்று பேரும் கூறவில்லை. மோடி தவறியும்கூட எடப்பாடிஅரசின் ஐந்தாண்டு கால சாதனைகளில் ஒன்றைக்கூட கூறவில்லை.

                               **************

பொது குடிநீர் குழாய் பறிப்பு சாதனையாம்!

பொது குடிநீர் குழாய்களை பறித்து, வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 16 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மோடி கூறினார். இந்தக் கருத்தை அதிமுக வேட்பாளர்கள் யாரும் ரசிக்கவில்லை.

                               **************

நீட் தேர்வு குறித்து எடப்பாடி-மோடி மௌனம்

நீட் தேர்வு குறித்து மோடி முன்னிலையில் எடப்பாடி ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த அதிமுக வேட்பாளர்களுக்குஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் பொறியியல், மருத்துவப் படிப்புகள் தமிழில் கற்க ஏற்பாடு செய்யப்படும் என்றார் மோடி. தமிழகத்திற்கு என்று ஏதாவது சொல்லவேண்டுமென்பதற்காக, “தமிழகத்தில் அடுத்த மூன்றாண்டில் ஏழு ஐவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்” என்றார்.அன்னை மீனாட்சி குடிகொண்டுள்ள மண், சுந்தரேஸ்வரர் குடி கொண்டுள்ள மண், கூடலழகர் பெருமாள் உள்ள மண், திருப்பரங்குன்றம் முருகனின் மண் என்றெல்லாம் மதுரையை வர்ணித்த மோடி, “மதுரை மக்கள் வீரத்தையும், வலிமையான இதயத்தையும் கொண்டுள்ளவர்கள்” எனக் கூறி ‘ஐஸ்’ வைத்தார்.

                               **************

வேலைவாய்ப்பிற்கு பதிலில்லை

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தனது ஆட்சியில் சாத்தியமில்லை என்பதை நேரடியாகக் கூற முடியாத மோடி, “ இளைஞர்கள் வேலைகளை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும்” என உபதேசம் செய்தார். வர்த்தகத்தை சுலபமாக்க பல்வேறு வழிமுறைகளை உருவாக்கி யிருப்பதாகவும், வரி என்ற பெயரில் நடக்கும் “கொடுமையை” மாற்றி வரி செலுத்துவதை எளிதாக்கியுள்ளதாகவும் கூறினார். நிறைவாக, தூங்கா நகரம், தூங்குவது இல்லை; எப்போதும் விழித்தேயிருக்கிறது; அரசியலில் யதார்த்தம், முன்னேற்றம், வளர்ச்சிக்கும் மதுரை விழித்திருக்கும் என்றார்.

                               **************

அட்டடென்ஸ் போட்ட கூட்டணி தலைவர்கள்

அதிமுக-கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டிருந்ததோ தெரியவில்லை. அவர்கள் மின்னல் வேக பிரச்சாரம் போல், மின்னல் வேக உரை நிகழ்த்தினர். தமாகா தலைவர் ஏஜிஎஸ் ராம்பாபு மட்டும் சௌராஷ்டிரா மொழியில் பேசி வாக்குச் சேகரிக்க வேண்டுமெனக் கூறி கூடுதலாக இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.

                               **************

வேட்பாளர் யார்? எந்த ஊர்?

மோடி, எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் உள்ளிட்ட யாரும் மேடையில் அமர்ந்திருந்த வேட்பாளர்கள்போட்டியிடும் தொகுதி, பெயர், சின்னம் எதையும் கூறவில்லை. ஏதோ தேர்தல் தேதி இனிமேல் தான் அறிவிக்கப்போகிறார்கள், வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கவில்லை என்ற நினைப்பில் இரட்டை இலை, தாமரை, மாம்பழத்தில் வாக்களியுங்கள் என்றனர்.குறைந்தபட்சம் மேடையில் மைக் முன் தோன்றிச் சென்ற ஆர்.பி.உதயகுமார், இராஜன்செல்லப்பா, செல்லூர் ராஜூ, மருத்துவர் சரவணன், திலகபாமா (ஆத்தூர்) ஆகியோருக்குக் கூட வாக்குச் சேகரிக்க தலைவர்கள் முன்வரவில்லை.வெற்றிவேல், வீரவேல் முழக்கங்கள் மட்டுமே எழுப்பப்பட்டன, மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் உச்சரிக்கப்படவே இல்லை.

                               **************

முதல்வர் பழனிச்சாமி என்னதான் பேசினார்?

எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சால் அதிமுகவினர் சோர்வடைந்தனர். “ கழகமும், கூட்டணிக் கட்சிகளும் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெறும். கொரோனா தடுப்பூசி வழங்கிய பெருமை பிரதமர் மோடியையே சாரும். பிரதமர் மோடியின் துணையோடு நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்து வருகிறது. தமிழகம் வளர்ச்சி பெறவேண்டும், இந்தியா ஏற்றம் பெற வேண்டும். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன. மக்கள் மீது அக்கறையும், திறமையும்  கொண்டவர் மோடி. மத்திய அரசிடமிருந்து கேட்கும் நிதியும், திட்டங்களுக்கு அனுமதியும் கிடைக்கிறது. 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் மூன்று லட்சத்து 500 கோடிக்குதொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் தொழில் வளம் மிக்க மாநிலமாகவும், மிகை மின் மாநிலமாகவும் திகழ்கிறது. தமிழகத்திற்கு புதிய-புதிய தொழில்கள் வருகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. திமுக குடும்பக் கட்சி, அது கார்ப்பரேட் கம்பெனி, யார் வேண்டுமானாலும் பங்குதாரராகச் சேரலாம்” என்று புதிய புதிய சரடுகளை அவிழ்த்துவிட்டார்.ஊர் ஊராக இலவச அறிவிப்புகளைக் கூறி வாக்குக்கேட்ட எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் முன்னிலையில் ஏன் தமது கட்சியின் வாக்குறுதிகளைக் கூறி வாக்கு கேட்கவில்லை என்ற காரணத்தை முதல்வர்தான் விளக்க வேண்டும். 

                               **************

ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன?

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “எய்ம்ஸ் வர துணை நின்றவர் பிரதமர். இது சாதாரண தேர்தல் அல்ல. தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல். திமுக தேர்தல் அறிக்கை ஒரு ஏமாற்று அறிக்கை. தமிழகத்தில் அம்மாவின் அரசு அமைய வேண்டும்” என்றார். இவரு எங்குமே கூட்டணி அரசு அமையும் என்று கூறவில்லை.

                               **************

ஹெலிகாப்டரும் விவேக் காமெடியும்

மோடியின் பிரச்சாரம் முடிந்த பின்பும் நான்குவழிச்சாலையில் எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. காமெடி நடிகர் விவேக் பட காமெடி போல், “மோடி செல்லும் ஹெலிகாப்டர் வானில் பறக்க உள்ளது. அதனால் யாருக்கும் அனுமதியில்லை” என்றனர். மோடி பறந்து சென்ற ஹெலிகாப்டர் உட்பட மூன்று ஹெலிகாப்டர்கள் விண்ணைத் தொட்ட பின்னரே வாகனப் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.

                               **************

யாருங்க இந்த மோடி?

ஹெலிகாப்டர் மேல பறப்பதற்கு முன் கூட்டத்திற்கு வந்திருந்த பலர் நான்குவழிச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி குறுக்குப்பாதையில் மஸ்தான்பட்டிக்கு செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தனர். ஹெலிகாப்டர் சென்றால் தான் பாதை திறக்கப்படும் என்றனர். அதற்கு அதிமுக கரைவேட்டி அணிந்திருந்தவர்கள், “யாருங்க இந்த மோடி? இங்க எல்லாமே எங்க அம்மா தான், இரட்டை இலை தான்” என டென்ஷனாகக் கூறினர். 

                               **************

பச்சைத் தண்ணீருக்கு தவித்த தமிழர்கள்

கூட்டத்தில் மோடி பேசுவதால், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிரதமருக்கு பாதுகாப்பு மிக மிக அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குறைந்தபட்சம் அவரது நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்றவர்களும், ஊடகவியலாளர்களும் கூட தண்ணீரின்றி தவித்தனர். காலை ஒன்பது மணி முதல் பந்தலில் அமர வைக்கப்பட்டிருந்த அப்பாவி மக்களின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருந்தது.

                               **************

பேனர் பிடித்த ரஜினி ரசிகர்கள்

ரஜினி மக்கள் இயக்கம் பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துஅவரது படத்தோடு மதுரையில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரையில் கரைந்தது. தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்திற்கு  வழங்குவதாக வியாழனன்று மத்திய அரசு அறிவித்தது. இதற்குப் பின்னாலும் பாஜகவின் காவிக் கூட்டம் உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெள்ளியன்று மோடி கலந்துகொண்ட பிரச்சாரக்கூட்டத்தில் ரஜினி ரசிகர்கள்  பேனர்களை பிடித்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ச.நல்லேந்திரன்/படங்கள் : ஜெ.பொன்மாறன்

;