election2021

img

கட்டுப்பாட்டு யூனிட் யார் கட்டுப்பாட்டில்? தலைமைத் தேர்தல் ஆணையருக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்...

புதுதில்லி:
வாக்காளர் தான் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைமுறைக்கும் வாக்கைச் சரிபார்க்கும் ஒப்புகைச்சீட்டு (VVPAT), மின்னணு வாக்குஎந்திரத்திற்கும் நூற்றுக்கு நூறு ஒத்துப்போக வேண்டும்

என்றும், தேர்தல் பத்திரங்கள் மூலமாக கார்ப்பரேட்டுகள் ஆட்சியாளர்களுக்கு நிதிகொடுப்பது குறித்தும், பணபலத்தைக் கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து எழுந்துள்ள சில ஆழமான பிரச்சனைகள் சம்பந்தமாக, குறிப்பாக பல அரசியல் கட்சிகளும், வாக்காளர்களில் பெரும்பான்மையோரும் 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின் எழுப்பியிருந்த பிரச்சனைகள் சம்பந்தமாக, தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.இந்தக் கடிதம் இரு முக்கியமான பிரச்சனைகள் குறித்ததாகும். முதலாவதாக, வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைக்கும், மின்னணு வாக்கு எந்திரத்திற்கும் நூற்றுக்கு நூறு ஒத்துப்போவது தொடர்பானதாகும்.  இரண்டாவதாக தேர்தல் பத்திரங்களும் பண பலமும்நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது குறித்ததாகும்.இவ்விரு பிரச்சனைகள் தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தின் முன் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், அவை உச்சநீதிமன்றத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகின்றன. அதே சமயத்தில்,  இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரங்கள் செயல்படும் விதம் குறித்தும், வாக்கைச் சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு முறை குறித்தும் பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகளும், தேர்தல்கள் தொடர்பான குடிமக்கள் ஆணையமும், சைபர் குற்றப்பிரிவும் சட்டப்பூர்வமாகவே பல்வேறு பிரச்சனைகளை எழுப்பியிருக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி
தேர்தல் ஜனநாயகத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதன் மீதான நம்பகத்தன்மை அநேகமாக அதனை நடத்திடும்அமைப்பின் நடவடிக்கைகளைச் சார்ந்தே, அதாவது நமது நாட்டில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையினைச் சார்ந்தே இருக்கிறது.இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 324ஆவது பிரிவு,அளப்பரிய அதிகாரங்களை தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அளித்திருக்கிறது. தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மை அது எந்த அளவிற்கு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். தலைமைத் தேர்தல் ஆணையம் அளித்திடும் விளக்கங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவைகளாகும். எனினும் இவ்விரண்டு அம்சங்களிலும் 2019 மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையம் நடந்துகொண்டுள்ள விதம், போதுமான அளவைவிட மிகவும் குறைவாகும். இவை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்நாங்கள் கொண்டுவந்த பல பிரச்சனைகள் மீது தலைமைத் தேர்தல் ஆணையம் அநேகமாக எவ்விதமான நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

மின்னணு வாக்கு எந்திரங்களுக்கும், வாக்கைச் சரிபார்க்கும் ஒப்புகைச்சீட்டு தணிக்கைக்கும் இடையே ஏற்பட்ட வித்தியாசங்கள் குறித்து எழுப்பப்பட்ட பிரச்சனைகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் எவ்விதநடவடிக்கையும் எடுக்காதது, இவற்றின் மீதான நம்பகத்தன்மை குறித்து மோசமான எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, இதனை சரிசெய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என நாங்கள் கருதுகிறோம். இது அவசரமான ஒன்றாகும். 

வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திற்கும் கட்டுப்பாட்டு இயந்திரத்திற்கும் இடையில் என்ன நடக்கிறது?வாக்காளர்கள் அளிக்கும் வாக்குகள் மின்னணு வாக்கு எந்திரத்தில் சரியாகப் பதிவாகிறதா என வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காகவே, 2013இல் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முறை (VVPAT) அறிமுகப்படுத்தப்பட்டது.இது இப்போது மீண்டும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குச்சீட்டு யூனிட் (Ballot unit)  மற்றும் கட்டுப்பாட்டு யூனிட் (control unit) என இரண்டுஉள்ளது. வாக்காளர்கள் அளித்திடும் வாக்கு முதலில் நேரடியாக வாக்காளர்க்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரத்திற்கு (VVPATஇயந்திரம்) செல்கிறது. ஆனால், அவைதான் மின்னணு வாக்கு எந்திரத்தின் கட்டுப்பாட்டு யூனிட்டில் பதிவாகிறதா என்பது தெரியவில்லை.

தொழில்நுட்பரீதியாகக் கூறுவதென்றால், வாக்குச்சீட்டு யூனிட்டில்  வாக்காளர் தேர்ந்தெடுக்கும் தெரிவு, நேரடியாக வாக்காளர் சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு தணிக்கை இயந்திரத்திற்கு செல்லாமல், கட்டுப்பாட்டு யூனிட் மூலமாக செல்கிறது. அதைத்தான் வாக்காளர் பார்க்க முடியும். வாக்குச்சீட்டு யூனிட், கட்டுப்பாட்டு யூனிட், ஒப்புகை இயந்திரம் என்ற இந்த வரிசைதான் முரணாக இருக்கிறது. எனவே, இதுதொடர்பாக பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இது மிகவும் ஆழமான பிரச்சனையாகும். துரதிர்ஷ்டவசமாக, இது தொடர்பாக எழுப்பப்பட்ட ஐயங்களுக்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து பதிலேதும் கூறப்படவில்லை. எனவேதான் இப்போது வாக்காளர் சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு தணிக்கை சோதனை முறைக்கும், மின்னணு வாக்கு எந்திரத்திற்கும் இடையே பதிவு செய்யப்படும் வாக்குகள் நூற்றுக்கு நூறு ஒத்துப்போக வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது. மின்னணு வாக்குஎந்திரமும், வாக்காளர் சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு தணிக்கை சோதனை முறையும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மேற்கொள்ளப்படாமல் பெயரளவில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் மட்டும் மேற்கொள்ளப்பட தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

தேர்தல் ஆணையம்  மவுனம்
இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் மின்னணுவாக்கு எந்திரத்தில் சந்தேகங்கள் எழுந்ததன் காரணமாகவே வாக்காளர் சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு தணிக்கைசோதனை முறை கொண்டுவரப்பட்டது. இவ்வாறான வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முறைக்கான கருவிகள் தனியார் தயாரிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இவற்றில் தில்லுமுல்லுகள் செய்யப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. இதுதொடர்பாக நாம் எழுப்பிய ஐயங்கள் எதற்கும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான முறையில் இதுவரையிலும் பதில் அளித்திடவில்லை.

வெள்ளமெனப் பாயும் கார்ப்பரேட் பணம்
அடுத்ததாக, பிரச்சாரத்திற்கான நிதி சம்பந்தப்பட்டதாகும். இதுவும் மிக முக்கியமான ஒன்றாகும். தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்திட்ட உறுதிவாக்குமூலத்தை, தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் நினைவுபடுத்திட விரும்புகிறோம். இவ்வாறு தேர்தல் பத்திரங்கள் மூலமாக தேர்தல் களத்தில் கொண்டுவந்து கொட்டப்படும் பணத்தின் காரணமாக தேர்தலை முறையாக நடத்தமுடியவில்லை என்று தேர்தல் ஆணையமே உச்சநீதிமன்றத்தின் முன்பு ஒரு தடவை அல்ல, இரு தடவைகள் கூறியிருக்கிறது.  

மாண்பமை உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக இன்னமும் தீர்வு வழங்காதது வேறு விஷயம். எனினும், இப்பிரச்சனை இப்போதும் நம்முன் உள்ளது. இதன்மீது இப்போது தேர்தல் ஆணையம் எப்படி செயல்பட இருக்கிறதுஎன்பது கேள்விக்குறியாக உள்ளது.  2021 ஏப்ரலிலிருந்து புதிதாக தேர்தல் நிதிக்கான (Electoral Bonds) பத்திரங்கள் விநியோகிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே வெளியாகி இருக்கிற தரவுகள் மூலம், மொத்தம் உள்ள தேர்தல் பத்திரங்களில் 52 சதவீதம் பாஜகவிற்கு சென்றிருக்கிறது.  ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR-The Association for Democratic Reforms) 2019 மக்களவைத் தேர்தலின்போது பாஜக மட்டும் 95 சதவீத அளவிற்கு தேர்தல் பத்திரங்களைப் பெற்றிருந்தது என்று கூறியிருக்கிறது. இது இயல்பாகவே கடும் விளைவுகளை ஏற்படுத்திடும்.

தற்போது தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜக பணத்தை வாரி இறைப்பதையும் அனைவரும் நன்குபார்க்கிறார்கள். தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கப்படுவதையும் அதன்மூலம் பணம் தேர்தலில் வாரியிறைக்கப்படுவதையும் கட்டுப்படுத்திட தெளிவான நடவடிக்கை எதையும் தேர்தல் ஆணையம் எடுத்திடவில்லை.இத்தகைய சூழ்நிலையின்கீழ்தான் நாங்கள் தேர்தல் ஆணையம் கீழ்க்கண்டவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

மின்னணு வாக்கு எந்திரமும், வாக்காளர் சரிபார்க்கும் ஒப்புகைச்சீட்டு தணிக்கை சோதனை இயந்திரத்திற்கும் இடையே ஏற்படுத்தியுள்ள மூன்று பிரிவுகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். வாக்காளரின் வாக்கு, வாக்குச்சீட்டுப் பிரிவிற்கு (ballot unit) சென்று, பின்னர் அது கட்டுப்பாட்டுப் பிரிவுக்குச் சென்று, அங்கிருந்து வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முறைக்கு வர வேண்டும்.ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வைக்கப்படும் மின்னணு வாக்கு எந்திரத்திற்கும், வாக்காளர் சரிபார்க்கும் ஒப்புகைச்சீட்டு தணிக்கை சோதனை இயந்திரத்திற்கும் இடையே நூற்றுக்கு நூறு பொருந்த வேண்டும்.பண பலத்தின் மோசமான விளைவுகளை ஒழித்துக்கட்ட, தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அளித்திட்ட உறுதிவாக்குமூலத்தின்படி, இப்போது மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைத் திட்டத்தையும், அவற்றின் அமலாக்கம் தொடர்பான அறிக்கையையும் அளித்திட வேண்டும்.ஐந்து சட்டமன்றங்களுக்கு ஏற்கனவே தேதிகள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் நடந்துகொண்டிருப்பதால், மக்கள்மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்கிட தேர்தல்ஆணையம் அவசரகதியில் செயல்பட முன்வர வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத் தன்மையுடனான நடவடிக்கைகளைப் பொறுத்தே,அதன்மீதான நம்பகத்தன்மையும், நம்பிக்கையும் ஏற்படும்.      இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  (ந.நி.)

;