election2021

img

தமிழகத்தின் ‘ஆன்மா’ எது?

அண்மையில் தமிழகத்துக்கு தேர்தல் பரப்புரை செய்ய வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசுகையில், தமிழகத்தின் ஆன்மாவைப் (SOUL) பாதுகாக்க அதிமுக, பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பொதுவாக கம்யூனிஸ்டுகள் ஆன்மா என்ற வார்த்தையை முக்கியத்துவப்படுத்திப் பேசுவதில்லை. எனினும் பிரகாஷ் காரத் அந்த வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து தமிழக தேர்தல் பரப்புரையில் பேசியது குறிப்பிடத்தக்கது.தமிழகம் நூற்றாண்டு கால சமூக சீர்திருத்த முற்போக்குப் பாரம்பரியம் கொண்டது. பிராமணீய எதிர்ப்பு, சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு, மாநில உரிமை, தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றுக்காக நெடிய போராட்டங்கள் நடத்திய செழுமையான வரலாறு கொண்டது. இதில் திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் கைகோர்த்து செயல்பட்டு முக்கிய பங்களிப்பு செய்துள்ளன. 

இந்த முற்போக்கு பாரம்பரியத்தின் பின்புலத்தில்தான், ஜனநாயக அரசியல் இங்கு வேர் கொண்டிருக்கிறது. அதனால்தான், இன்றைக்கும் இந்தியாவின் வேறு பல மாநிலங்களில் தனது சாகச குயுக்தி அரசியலை அரங்கேற்றி வரும் ஆர்எஸ்எஸ்-பாரதிய ஜனதா கும்பலின் சித்து விளையாட்டு இங்கே எடுபடுவதில்லை. பாஜக தனித்து நின்றால் நோட்டாவுக்கும் கீழே ஓட்டு வாங்கக்கூடிய கட்சியாகத்தான் இங்கு இருக்கிறது.இந்திய சமூகத்தின் அடித்தளத்தை ஆட்டிப்படைக்கும் பிற்போக்கு சனாதன கருத்தியலுக்கு எதிராக, வேறெந்த மாநிலத்தையும் விட நேரடியாகவும், வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் கருத்தியல் போராட்டம் நடைபெற்ற இடமாக தமிழகம் இருக்கிறது. இதைத்தான் தமிழகத்தின் “ஆன்மா” என்று பிரகாஷ் காரத் குறிப்பிடுகிறார்.

இத்தகைய போராட்டம் கடந்த காலத்தில் பிற மாநிலங்களில் நடத்தப்பட்டிருந்தால் இன்றைக்கு ஆர்எஸ்எஸ்-பாரதிய ஜனதா கும்பலின் பிளவுவாத, பிரிவினைவாத, மதவாத, நாசகர அரசியல் நாட்டில் இந்தளவுக்குத் தலையெடுத்திருக்க முடியாது. வேறு பல பகுதிகளில் தான் ஆடிய கோர ஆட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்ற ஆர்எஸ்எஸ்-பாரதிய ஜனதா கும்பல் வெறித்தனமாக முயற்சிக்கிறது. அதற்கு திராவிட இயக்கப் பாரம்பரியத்தின் வழி வந்ததாக சொல்லிக் கொள்ளும் அதிமுகவை பயன்படுத்திக் கொள்கிறது. 

வரலாறு காணாத அளவு ஊழலில் சிக்கியிருக்கும் அடிமை அதிமுக தலைமையை எளிதில் மிரட்டிப் பணிய வைக்க பாஜகவால் முடிந்திருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் எப்படியும் காலூன்றி விட முடியும் என கனவு காண்கிறது பாஜக. தப்பித்தவறி பாஜக-அதிமுக வெற்றி பெறுமானால் அது தமிழகத்துக்கு பின்னடைவு என்பது மட்டுமல்ல, நவீன இந்தியா என்ற கருத்தியலுக்கும் பெரும் பின்னடைவாக மாறிவிடும்.எனவேதான் இன்று நாடு முழுவதுமுள்ள நவீன இந்தியாவின் முற்போக்கு, மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் தமிழகத் தேர்தலை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இந்த தேர்தலில் பாஜக-அதிமுக கும்பலைத் தோற்கடிப்பதும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதும் அவர்களுக்கு ஒரு நற்செய்தியாக இருக்கும். தமிழகத்துக்கு மட்டுமல்ல, இங்கு பாயும் ஒளி, இந்தியாவை கவ்விப் பிடித்திருக்கும் பழமைவாத ஆர்எஸ்எஸ்-பாஜக என்ற இருளை நீக்கவும் வழிகாட்டுவதாக இருக்கும். எனவே ஒவ்வொரு வாக்காளரும் தமிழகத்தின் ஆன்மாவைப் பாதுகாக்க வாக்களிப்பது தேசபக்த கடமை! அதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டுவோம்!!

வே.தூயவன்

;