election2021

img

பத்தாண்டு காலமாக என்ன செய்தீர்கள்? பழனிசாமி பதில் சொல்லத் தயாரா? மு.க.ஸ்டாலின் கேள்வி...

பத்தாண்டுகாலமாக பாழ்பட்டிருக்கும் ஒரு நிலையைத் தமிழ்நாட்டு மக்களுக்குக் கொண்டுவந்து பல கொடுமைகளை - அக்கிரமங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு ஆட்சிதான் அ.தி.மு.க.வின் ஆட்சி. அப்படிப்பட்ட ஆட்சி நடத்துகிற பழனிசாமி, ஏதோ பத்தாண்டுகளாக நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள் என்று திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறார்.

 நீங்கள் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்களே, என்ன செய்தீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள். இந்த கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?அவருடைய துறை நெடுஞ்சாலைத் துறை. அந்த துறையில் கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர் அவருடைய சம்பந்திக்கு - சம்பந்தியின் சம்பந்திக்கு விடப்பட்டிருக்கிறது. இப்படி டெண்டர் பெற்றவர்கள் பழனிசாமிக்கு என்ன உறவு என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பி இருக்கிறது. இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகிறார்?

உலக வங்கி நிதியில் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கக் கூடாது என்ற விதியே இருக்கிறது. அந்த விதியை மீறி அவர் கொடுத்திருக்கிறார். அப்படி கொடுத்த நேரத்தில் ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை இதை விசாரிக்க வில்லை என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கேட்டிருக்கிறார்கள். இதற்கு முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகிறார்?

முதலமைச்சருடைய பினாமிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது நகைகள், பணம் எல்லாம் கிடைத்திருக்கிறது. இந்தக் கேள்வியை நீதிபதிகள் நீதிமன்றத்தில் எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்?4000 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு நடந்திருக்கிறது. இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதா இல்லையா? இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்?இராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி, எஸ்.பி.கே அண்ட் கம்பெனி, பாலாஜி டோல்வேய்ஸ் மதுரை பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆகிய நிறுவனங்களுக்கும் - பழனிசாமிக்கும் - அவரது மகன் மிதுனுக்கும் என்ன தொடர்பு? இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு ஒரு உத்தரவு போட்டது. அவ்வாறுஉத்தரவு போட்ட சில நாட்களில் ஈரோட்டில் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி உரிமை யாளர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அவர் பெயர் அன்புநாதன்.தமிழக அரசின் பல்வேறு டெண்டர்களை எடுப்பவர் பெருந்துறை சுப்பிரமணியம். அவருக்கும் பழனிச்சாமிக்கும் என்ன உறவு? அதை பழனிச்சாமி சொல்வதற்கு தயாராக இருக்கிறாரா?நான் சொல்கிறேன். சுப்பிரமணியத்தின் ஒரு மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறார். சுப்பிரமணியத்தின் இன்னொரு மகளுக்கு ராமலிங்கம் மகனோடு திருமணம் செய்து வைத்திருக்கிறார். அவர் சம்பந்தியின் சம்பந்தி. இவர்கள் தான் பல்லாயிரம் கோடி ரூபாய் டெண்டர் எடுப்பவர். பணம் சப்ளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய பின்பு தான் பா.ஜ.க.வின் பாதம் தாங்கிய பழனிசாமியாக இன்று அவர் ஆகியிருக்கிறார். பிறகு சசிகலாவிற்கு துரோகம் செய்தார். அதற்குப் பிறகு பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொண்டார். இப்போது அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் பா.ஜ.க.வின் கிளைக் கழகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை. இதை பழனிசாமி மறுக்கமுடியுமா?

                                         ********************

தமிழகத்தை ரூ.6 லட்சம் கோடி கடனாளி ஆக்கியது யார்?

தமிழகத்தின் கடன் சுமை 2011 வரை 70 ஆண்டு காலமாக ஒரு லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 10 வருடங்களில் 6 லட்சத்தை நெருங்கி இருக்கிறது. இதைத்தான் ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தொழில் வளர்ச்சி - கழக ஆட்சி இருந்தபோது 10.9 சதவிகிதமாக இருந்தது. இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் 4.6 சதவிகிதமாக இருக்கிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் - அமைச்சர்கள் அனைவரும் கோட் போட்டுக்கொண்டு வெளிநாடு சென்று வந்தார்கள். ஆனால் முதலீடும் வரவில்லை. வேலை வாய்ப்பும் வரவில்லை.தமிழ்நாட்டை இப்போது 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றிருக்கிறார்கள். இது வெற்றிநடை அல்ல, வெற்று நடைபோடும் தமிழகம். தேர்தல் வருகிறது என்பதால் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக, 40,000 கோடி ரூபாய் வரை விதிகளைத் தளர்த்தி டெண்டர் விட்டு கடைசி நேரத்தில் காரியம் எதுவும் ஆகாத கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்தப் பணியும் முடியவில்லை.

                                         ********************

அடிமையாக நிற்கிறீர்கள்!

என்ன திட்டத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?மதுரையில் எய்ம்ஸ் திட்டத்தை அறிவித்தீர்கள். அதை அறிவித்தது 2014ஆம் ஆண்டு. அதற்கு அடிக்கல் நாட்டியது 2019ஆம் ஆண்டு. இப்போது 2021. ஒரு செங்கல் கூட இதுவரையில் வைக்கவில்லை. முதலமைச்சர் பழனிசாமி அவர்களே இதற்கு பதில் சொல்லுங்கள்.11 மருத்துவக் கல்லூரிகளை அறிவித்திருக் கிறார்கள். ஆனால் இதுவரையில் ஒன்று கூட தொடங்கப்படவில்லை. நான் இப்போது சொல்கிறேன். அந்த பணிகள் முடிவதற்கு இன்னும் 3 வருடங்கள் ஆகும். கஜா புயல் - ஒக்கி புயல் இவ்வாறு பல பேரிடர்களை நாம் சந்தித்தோம். அப்போதெல்லாம் மத்திய அரசு தர வேண்டிய நிதியைத் தரும் வாய்ப்பை இங்கிருக்கும் மாநில அரசு உருவாக்கவில்லை. அதை கேட்கும் அளவிற்கு உங்களுக்கு தெம்பில்லை. கையைக் கட்டிக்கொண்டு - வாயைப் மூடிக்கொண்டு அடிமையாக நிற்கிறீர்கள். அதைக் கேட்டுப் பெறுவதற்கு உங்களுக்கு வக்கில்லை, வகையில்லை.

                                         ********************

கரப்ஷன்-கமிசன்-கலெக்சன்

இன்றைக்கு விலைவாசி விண்ணை முட்டும் வகையில் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கும் முயற்சியில் மாநில அரசும் ஈடுபடவில்லை; மத்திய அரசும் ஈடுபடவில்லை. பெட்ரோல்விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக் கிறது. டீசல் விலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக உயர்ந்து கொண்டிருக் கிறது. இவ்வாறு ஏறும் நேரத்தில் மோடி வரியைக் குறைத்தாரா அல்லது பழனிசாமி வரியைக் குறைத்தாரா? இல்லை.
காய்கறி விலை - மளிகைப் பொருட்கள் விலை உயர்கிறது. மக்களுடைய அன்றாடத்தேவைகள் விலை உயர்வதால் மக்களுக்குசேமிப்பு இல்லாத சூழ்நிலைஉருவாகியிருக்கிறது.விஷம் போல ஏறியிருக்கும் இந்த விலை
வாசியால் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் இந்த ஆட்சி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் கொள்ளை அடிப்பது தான். கரப்ஷன் - கமிஷன் - கலெக்சன் இதுதான். இதற்கெல்லாம் முடிவு கட்டும் தேதிதான் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி. மறந்து விடாதீர்கள்.

                                         ********************

அம்மையார் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த இபிஎஸ்-ஓபிஎஸ்

அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு துரோகம் செய்திருப்பவர்கள் தான் இந்த பழனிசாமியும் - பன்னீர்செல்வமும். அந்த அம்மையார் மறைவதற்கு முன்னால் அவர் முதலமைச்சர் பொறுப்பில் இருந்த நேரத்தில், 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி பிரதமராக இருக்கும் மோடி அவர்களிடம் ஒரு மனு கொடுத்தார்.அந்த மனுவில் ஜி.எ.ஸ்டி. சட்டத்தை எங்கள் ஆட்சி ஆதரிக்க முடியாது, உதய் திட்டத்தை ஆதரிக்க முடியாது, நீட் தேர்வை ஆதரிக்க முடியாது, உணவு பாதுகாப்பு சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்.அதற்குப்பிறகு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் செப்டம்பர் மாதம் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். அவர் இருந்த வரையில் இந்த திட்டத்தை ஆதரிக்க முடியாது என்று தெளிவாகச் சொன்னார்.

ஆனால் அவர் மறைந்ததற்குப் பிறகு, இப்போது பொறுப்பிலிருக்கும் பன்னீர்செல்வம் – பழனிசாமி பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள். அவர்கள் முடியாது என்று சொன்ன திட்டங்களை எல்லாம் இவர்கள் ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டில் அனுமதித்திருக்கிறார்கள் என்றால் இதைவிட ஜெயலலிதாவிற்கு அவர்கள் செய்திருக்கும் பச்சை துரோகம் எதுவுமே இருக்க முடியாது.இந்த நிமிடம் வரையில் பா.ஜ.க.வுக்கு அடிமையாக இருப்பவர்கள் தான் இந்த ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்.  இப்போது தேர்தல் வரும் காரணத்தால் சிறுபான்மையினரை ஆதரிப்பது போல ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீருக்கான சிறப்புரிமையை ரத்து செய்யும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள். முத்தலாக் தடை சட்டத்திற்கு வாக்களித்தவர்கள் இவர்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள்.ஆனால் இப்போது தேர்தல் அறிக்கையில் அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் - அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் – அதை திரும்பப் பெற முயற்சி எடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகளை வாங்குவதற்காக அவர்கள் இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள்.அதேபோல, மூன்று வேளாண் சட்டங்களால் இன்றைக்கு விவசாயப் பெருங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். அந்தச் சட்டத்தை ஆதரித்து ஓட்டுப் போட்டுவிட்டு இப்போது விவசாயிகளுக்கான அரசு என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

                                         ********************

படக்குறிப்பு : 

1.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 19 வெள்ளியன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஒரத்தநாடு எம்.ராமச்சந்திரன், திருவிடைமருதூர் கோவி.செழியன், கும்பகோணம் அன்பழகன், திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை, பேராவூரணி என்.அசோக்குமார், பாபநாசம் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆகியோருக்கும்;

2.வெள்ளியன்று மாலை திருப்பூர் மாநகரத்தில் திருப்பூர் தெற்குதொகுதி திமுக வேட்பாளர் க.செல்வராஜ், அவினாசி தொகுதி ஆதி தமிழர் பேரவை வேட்பாளர் அதியமான், திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவி என்ற சுப்பிரமணி, பல்லடம் தொகுதி மதிமுக வேட்பாளர் முத்து ரத்தினம் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தும்;

3.வெள்ளியன்று இரவு கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரத்தில் கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கே.வரதராஜன், சூலூர் தொகுதி கொங்குநாடு மக்கள் கட்சி வேட்பாளர் பிரிமியர் செல்வம் என்ற காளிச்சாமி ஆகியோருக்கும்;

4.மார்ச் 20 சனிக்கிழமை காலை குமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்த் விஜயகுமார் ஆகியோருக்கும் வாக்கு சேகரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகளிலிருந்து...

;