election2021

img

நீர்நிலைகளைப் பாதுகாக்க 75ஆயிரம் இளைஞர்களை பணியமர்த்துவோம்... தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் உறுதி...

தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் நிறைவேற்றப்படும். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். மாநிலத் திறன்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க அமைப்பு தொடங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பயிற்சி மையங்களாக செயல்படும்.

கட்டாயத் திறன் வளர்ச்சி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்களில், தமிழக இளைஞர்களே நியமிக்கப்படுவார்கள்.நீர் நிலைகளைப் பாதுகாக்க 75 ஆயிரம் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதில் 30 ஆயிரம் பேர் பெண்களாக இருப்பார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை. பெண்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி நிலையமாக ‘‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’’ மாவட்டந்தோறும் தொடங்கப்படும். நீட் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி, அரியலூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா. அதைத்தொடர்ந்து பல மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரை மாய்த்து இருக்கிறார்கள். அதை இந்த நாடு மறந்துவிடாது.

என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதியில், “அனிதா அச்சீவர்ஸ் அகாடமி” என்ற பெயரில் ஒரு மையத்தை உருவாக்கி இந்த 2 வருடத்தில் ஏறக்குறைய 1,000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோம்.2 மாதங்களுக்கு முன்பு அந்த அமைப்பின் சார்பில்நடைபெற்ற நிகழ்ச்சியில், இது கொளத்தூருக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத்திலும் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இதுபோன்ற மையங்களைத் தொடங்குவோம் என்று அறிவித்தேன். அதைத்தான் இந்தத் தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருக்கிறோம்.

சாலைப்பணியாளர்களாக 75 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள். இதில் 30 ஆயிரம் பேர் பெண்கள். கோவில்கள் மற்றும் அறநிலையங்கள் பாதுகாப்புப் பணிக்கு 25 ஆயிரம் திருக்கோவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். மக்கள் நலப் பணியாளர்களாக 25 ஆயிரம் மகளிர் நியமிக்கப்படுவார்கள். முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய தொழில் தொடங்க கடன் வழங்கப்படும். பட்டதாரி இளைஞர்கள் குறுந்தொழில் தொடங்கினால் ஆண்டுக்கு 25 ஆயிரம் பேருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். இளைஞர் சுய முன்னேற்றக் குழுக்கள் தொடங்கப்பட்டு அவர்கள் சிறு, குறு தொழில் தொடங்க கடன் வசதி ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் 1 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் வேலையில்லாத் திண்டாட்டமே இல்லை என்ற நிலையை திமுக அரசு உருவாக்கும்.

இன்றைக்கு காலியாக இருக்கும் அரசுப் பணிகளை நிரப்ப முடியாத லாயக்கற்ற ஒரு ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மத்தியஅரசு நிறுவனங்களில் தமிழக இளைஞர்கள் மறுக்கப்படும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக நம்முடைய இளைஞர்கள் சமீபத்தில் நெய்வேலியில் நடத்திய போராட்டம்.மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து இன்றைக்கு ஒரு சர்வாதிகாரத்தைநடத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அதனால் தான் இன்றைக்கு பல மாநிலங்கள் அதை ஏற்க மறுக்கிறது. ஆனால் இங்கிருக்கும் அரசு அதைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று அதை அமல்படுத்தி கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இதைத் தமிழக இளைஞர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். 

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகளிலிருந்து...

;