election2021

img

ரிமோட் கண்ட்ரோல் அரசு நமக்கு தேவையில்லை... சென்னையில் பிரகாஷ் காரத் பேச்சு....

சென்னை:
தமிழகத்தில் நடைபெறும் அடிமை அரசை அகற்றுவோம் என்றும் ரிமோட் கண்ட்ரோல் அரசு நமக்கு தேவையில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகன், பெரம்பூர் தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோரை ஆதரித்து திங்களன்று (மார்ச் 29) எம்எம்டிஏ காலனி மற்றும் வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரகாஷ்காரத் பேசியதன் சுருக்கம் வருமாறு:

மக்களை பாதிக்கும் வகையில் மத்தியஅரசு கொண்டு வந்து திணிக்கும் திட்டங் களை தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு மறுபேச்சின்றி ஆதரிக்கிறது. அதனை எதிர்த்துமதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் போராடி வருகின்றன. தமிழகத்தில் அடுத்து அமைய உள்ள அரசு, மோடி, அமித்ஷாவால் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப் படும் அரசாக இருக்காது. ரிமோட் கண்ட்ரோல்மூலம் இயக்கப்படும் அதிமுக அரசு நமக்கு தேவையில்லை.கொரோனா தொற்றால் 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனா பேரிடர்காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு மாறாக, தொழிலாளர், மக்கள் விரோத சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தது. அதை அதிமுகஅரசு ஆதரித்தது.விமான நிலையங்களை அதானிக்கும்,இரும்பு தொழிற்சாலை உள்ளிட்ட பொதுத் துறைகளை கார்ப்பரேட்டுகளுக்கும் மத்திய அரசு விற்று வருகிறது. விசாகப்பட்டினம் இரும்பு தொழிற்சாலையை தனியாருக்கு விற்பதை எதிர்த்து தொழிலாளர்களோடு மக்களும் சேர்ந்து போராடுகிறார்கள். நிலக்கரி சுரங்கங்கள், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், சேலம் இரும்பு தொழிற்சாலைகளை தனியாரிடம் விற்க முயற்சிக்கிறார்கள். இவற்றை அதிமுக கண்டிக்காமல் உள்ளது.

வாழ்வாதாரம் கேட்டோம் புதுப்புது வரிகள் போட்டார்கள்
பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் இழந்தமக்களுக்கு, வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு 7500 ரூபாய் வழங்க எதிர்க்கட்சிகள் கோரினோம். மாறாக, மத்திய அரசு ஏழை,எளிய மக்கள் மீது புதிய புதிய வரிகளை விதித்தது. பெட்ரோல் விலையில் 62 சதவீதம் வரியாக வசூலிக்கிறது. சமையல் எரிவாயு விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. அதேசமயம் பெருமுதலாளிகளுக்கு வரியை குறைத்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தால், அதனைசார்ந்த பல்வேறு விலைகளும் உயரும். மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதகொள்கைகளை அதிமுக எதிர்ப்பதே இல்லை.

ஆர்எஸ்எஸ் என்கிற பாசிச அமைப்பால்பாஜக இயக்கப்படுகிறது. இந்தியாவை இந்துநாடாக்கும் கொள்கையை பாஜக செயல் படுத்துகிறது. இதனால் சிறுபான்மையினர் இரண்டாந்தர குடிமக்களாக மாற்றப்படுவார்கள். வருண அடிப்படையில் சனாதனமுறையில் ஏழை, எளிய மக்கள் நடத்தப்படுவார்கள். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில்,சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் நடத்துகின்றனர்.காதல் திருமணங்களை லவ் ஜிகாத் என்ற பெயரிலும், மாட்டுக்கறி உண்பதை பசுவதைத் தடை சட்டம் என்ற பெயரிலும் தடுக்கின்றனர். இவற்றை எதிர்த்ததற்காக உபா சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு அதிமுக கூட்டு சேர்ந்துள்ளது. அதிமுகபோர்வையில் தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிப்பதை அனுமதிக்கமாட்டோம். அதிமுகவிற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் ஆர்எஸ்எஸ்-பாஜகவிற்கு போடும் ஓட்டுதான்.

கடந்த 4 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டதை எதிர்த்த போராட்டங்கள், வங்கி தனியார்மயத்தை எதிர்த்து ஊழியர்கள் வேலைநிறுத்தம், இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தொழிலாளி வர்க்கம் போராடி வருகிறது. தமிழகத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், உழைப்பாளர்களுக்கு பாதுகாப்பான அரசு அமைய வேண்டும். எனவே,பாஜக-அதிமுக அணியை தோற்கடித்து திமுக தலைமையில் மக்கள் நல ஆட்சிஅமைத்து புதிய அத்தியாயத்தை எழுதுவோம். அண்ணா நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.கே.மோகனை வெற்றி பெறச் செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.அண்ணா நகர் பகுதி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்கள் என்.சிற்றரசு (திமுக), ப.சுப்பிரமணி (மதிமுக), பா.கருணாநிதி (சிபிஐ),பகுதிச் செயலாளர்கள் ந.ராமலிங்கம் (திமுக), பெ.சீனிவாசன் (சிபிஎம்), சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் மகேந்திரவர்மன் உள்ளிட்டோர் பேசினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் பகுதி செயலாளர் ஏ.விஜயகுமார் தலைமையில் மகாகவி பாரதி நகரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மதிமுக மாவட்டச்செயலாளர் சு.ஜீவன், கா.ஜெயராமன் (திமுக),நா.பாஸ்கர் (மதிமுக), ஜெ.டில்லிபாபு(காங்கிரஸ்), கமுதி வி.சம்சுதீன், ஏ.கமருதீன் (ஐயூஎம்எல்), கல்தூண்ரவி (விசிக), அ.சுப்பிரமணி (சிபிஐ), எம்.ராஜகுமார், டி.சரவணன்(சிபிஎம்), நசுருதீன், எம்.சிராஜூதீன் (மமக) ஆகியோர் பங்கேற்று பேசினர்.

;