election2021

img

தேர்தல் பணி சுமையானதேன்?

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முக்கிய அம்சங்களுள் தேர்தல் நடைமுறைகளும் ஒன்றாகும்.  இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையங்களும் சிறப்பான திட்டமிடுதலுடன் நடத்தி வருகிறது.  உலகின் பல்வேறு தேர்தல் நடத்தும் அமைப்புகளும் இதை உற்று கவனிக்கும் விதம் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.  

இந்தியாவின் இத்தகைய தேர்தல் பணிகளில் இலட்சக்கணக்கான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.  பல்வேறு நிலைகளில்இத்தகைய பணிகளை அவர்கள் செய்து வருகின்றனர்.  குறிப்பாக தேர்தல் நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கு தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் - 1, 2, 3 ஆகிய பொறுப்புக்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  இவர்கள் தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாளே வாக்குச்சாவடிக்கு சென்று தேர்தல் அன்று தேர்தலை நடத்தி முடித்து மண்டல அலுவலர்களிடம் வாக்குப்பதிவு இயந்திரங்களையும், பொருட்களையும் ஒப்படைக்கும் நேரம் வரை தங்களின் பணியை தொடர்ந்து செய்து வருவர்.  இதற்கான பலகட்ட பயிற்சிகளையும் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு வழங்கி வருகிறது.  

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் கர்ப்பிணிகள், உடலளவில் இயலா மாற்றுத்திறனாளிகள், இதய நோயாளிகள் என சில பிரிவினருக்கு இத்தகைய பணியிலிருந்து விலக்களித்துள்ளது.  எனினும் ஓய்வு பெறும் நிலையில் உள்ள பெண் ஆசிரியர்கள், கைக் குழந்தைகளை, வயதானவர்களை  உடன் இருந்து கவனிக்க வேண்டியவர்கள், பல்வேறு உடல் உபாதைகளால் அவாதிக்குள்ளாகும் பெண் ஆசிரியர்களுக்கும் இத்தகைய தேர்தல் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
2021 ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கும் 16-வது தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணிநியமனங்களில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்து வருகிறார்கள்.  தமிழகத்தில் சமீப காலமாக இத்தகைய தேர்தல் பணியில்ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.  குறிப்பாக பல பெண் ஆசிரியர்கள்இத்தகைய பணியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளில் மாற்றம்செய்திடவும், தேர்தல் அலுவலரிடமும் தான் சார்ந்த ஆசிரியர் சங்கங்களிடம் முறையிட்டு வருகின்றனர்.  

முரண்பாடான பணி உத்தரவுகள் 
இத்தகைய தேர்தல் பணி உத்தரவுகள் வழங்குவதற்கு முன்பே துறை ரீதியாக ஆசிரியர்களின் விவரங்கள் பணி நிலை, பணி அனுபவம், தேர்தல் பணி அனுபவம் ஊதிய விபரங்கள் என புகைப்படத்துடன் கூடிய தகவல்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் முன்கூட்டியே சேகரிக்கப்படுகிறது.  குறிப்பாக வாக்குச்சாவடி தலைமை அலுவலரே அந்த வாக்குச்சாவடியின் தேர்தல் நடத்தும் முழுப் பொறுப்பாளர் ஆவார்.  பொதுவாக இத்தகைய பொறுப்பிற்கு பணி அனுபவமும், தேர்தல் அனுபவமும் கொண்ட மூத்த ஆசிரியர்களே நியமிக்கப்படுவர்.  வாக்குச்சாவடி அலுவலர் 1, 2, 3 அதற்கான நிலையை  கருத்தில் கொண்டுபணி அமர்த்தப்படுவர்.  இருப்பினும் இம்முறை பணி அனுபவமோ, தேர்தல் அனுபவமோ, பணி நிலையோ கருத்தில்கொள்ளாமல் இளைய ஆசிரியர்கள் பலருக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணியும், பணியில் மூத்தபணி அனுபவம் கொண்ட ஆசிரியர்களுக்கு, வாக்குச்சாவடிஅலுவலர் 1, 2 பணியும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இது போதிய தேர்தல் பணி அனுபவம் இல்லாத இளைய ஆசிரியர்களின் மத்தியில் ஒருவித அச்சத்தையும், மூத்த ஆசிரியர்களின் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.  மேலும் மூத்த ஆசிரியர்களும், இளைய ஆசிரியர்களும் மனமொத்து தங்களது பணிகளை மாற்றி ஒருவருக்கொருவர் செய்திட சம்மதித்து உரிய  உத்தரவுகளை வழங்கக் கோரி தேர்தல் நடந்தும் அலுவலர்களை அணுகியபோதும் இத்தகைய பணி உத்தரவுகளில் நாங்கள் ஒன்றும்செய்ய இயலாது.  இவை ‘ரேண்டம்’ முறையில் கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுவது, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து சில தேர்தல் பணிகளில் கணினியில் ‘ரேண்டம்’ முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்  இத்தகைய தேர்தல் பணி உத்தரவுகள்; முரண்பாடானதாக இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீண்டும் இதே முறையை ஏன் பின்பற்றுகிறார்கள்? எனவும் தகுதியானவர்களுக்கு தகுந்த பணி உத்தரவுகளை வழங்கிட மேனுவல் முறையையோ, அல்லது வேறு புதுவித முறையையோ ஏன் கையாளுவது இல்லை? எனவும்,தேர்தல் பணியில் ஈடுபடும் வருவாய் துறை பணியாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பணி நியமன உத்தரவுகளில் இத்தகைய ரேண்டம் முறைதான் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தொலைதூர  தேர்தல் பணி 
தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளை தாங்கள் பணியாற்றும் ஒன்றியத்திலே ஏற்பாடு செய்து பயிற்சி வழங்க பல்வேறு ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்களும் கோரிய போதும் முதல் பயிற்சி வகுப்பை தவிர மற்ற பயிற்சி வகுப்புகள் மிக நீண்ட தொலைவில், குறிப்பாக 80, 90 கிலோ மீட்டர்க்கு அப்பால் சென்று கலந்து கொள்ளும் விதம் உத்தரவுகள் வழங்கப்படுகின்றன.  இதனால் இத்தகைய பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வர 160, 180 கிலோ மீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளது.  மட்டுமல்லாது இத்தகைய பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்ற ஒன்றியத்திலே தான் தேர்தல் பணி செய்யும் வாக்குச் சாவடிகளும் அமைய உள்ளதால், தேர்தல் நாளுக்கு முந்தைய நாளும் மிக நீண்ட பயணம் செய்தே தேர்தல் பணி உத்தரவு பெற்று வாக்குச்சாவடி அமைவிடங்களை கண்டறிந்து சென்று சேர வேண்டியுள்ளது.  

நம்பகத் தன்மை இல்லையா? 
இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளில் எத்தகைய முறைகேடுகளும் செய்திட வழியில்லை எனவும், வாக்குச்சாவடிகளிலும் எவரும் முறைகேடு எதுவும் செய்திடமுடியாது எனவும், வாக்கு இயந்திரங்களில் முறைகேடு எதுவும் செய்திட இயலாது எனவும், இந்திய தேர்தல் ஆணையமே பலமுறை தெளிவுப்படுத்தி கூறியுள்ளது.  மட்டுமல்லாது வெளிப்படையான சவாலும் விடுத்துள்ளது.  அப்படி இருக்க தமிழக தேர்தல் ஆணையம் குறைந்த பட்சம் பெண் ஆசிரியர்களையாவது அந்தந்த ஒன்றியத்தில், அல்லது அருகாமை ஒன்றியத்திலோ பணியாற்றிடஆணைகள் வழங்கிட தயங்குவது ஏன்?என ஆசிரியர்கள் கேள்விகள் எழுப்புகின்றனர்.  

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் 
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளே வாக்குச் சாவடிக்கு சென்று விடும் பணியாளர்களுக்கு போதிய வசதிகள் செய்திட தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.  நடைமுறையில் போதிய கழிப்பிட வசதிகளோ, குடிநீர் வசதிகளோ, குளிப்பதற்கான வசதிகளோ சரியான முறையில் இருப்பதுஇல்லை.  தேர்தல் பணியாளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்றபின்பு, வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால் குடிநீர்,உணவு உட்பட தங்களுக்கு தேவையானவற்றை பெறுவதற்கு எவரையேனும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது.  இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சில உள்ளூர் உள்ளாட்சி பணியாளர்களுக்கு அறிவுறுத்தி இருப்பினும் சம்மந்தப்பட்டவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து உதவி செய்வது இல்லை.  முந்தைய நாள் மாலைவந்து பார்த்து விட்டு சென்று விடும் அவர்கள், மறுநாள்காலையிலிருந்து மதியம் வரை மட்டுமே வாக்குச்சாவடிகளில் இருக்கின்றனர். நகர, மாநகர பகுதிகளில் ஒருமையத்தில் 5 முதல் 10 வாக்குச்சாவடிகள் வரை அமையும் சூழ்நிலையில், ஒரு வாக்குச்சாவடிக்கு 6 நபர்கள் என கொண்டால் கூட சுமார் 60 பணியாளர்கள் அந்த மையத்தில் பணியாற்ற வேண்டிய சூழலில், அதில் பெரும்பகுதி பெண் ஆசிரியராகவே இருக்கின்றனர்.

இதனால்கழிப்பிடம்,குடிநீர், குளிப்பதற்கான வசதிகள், கடைகளிலிருந்து உணவு கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து தருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். தேர்தல் முடிந்து,  மண்டல அலுவலர்கள் வாக்கு இயந்திரங்கள், தேர்தல்பொருட்கள் பெற்று செல்லுவதற்கு பல இடங்களில் நள்ளிரவுக்கு மேலும், சில இடங்களில் மறுநாள் அதிகாலையும் ஆகிவிடுகிறது.  தேர்தல் முடிந்து  வாக்குப்பதிவு இயந்திரங்களை மண்டல அலுவலர்கள் பெற்று செல்லும் இடைப்பட்ட நேரங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வெளியே செல்ல முடியாததால் உணவிற்கும், குடிநீர்க்கும் பெரும்சிரமங்களை சந்திப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். இத்தகைய நிலை அவர்களுக்கு மனஉளைச்சலையும்,தேர்தல் பணியில் விரும்பம் இன்மையும் ஏற்படுத்துகிறது.  

தொடர் பணி 
2021 ஏப்ரல் 5-ஆம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு உத்தரவு பெற்று மதியத்திற்குள் வாக்குச்சாவடிகளை அடையாளம் கண்டு தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்றடைய வேண்டும். மேலும் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு துவங்கி  இரவு 7 மணி வரை தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து, கணக்குகளை சரிபார்த்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க நள்ளிரவுக்கு மேல் ஆகிவிடுகிறது.  சிலருக்கு மறுநாள் அதிகாலையும் ஆகிவிடுகிறது.  இவ்வாறு இரண்டுபகலும், இரண்டு இரவும் (48 மணி நேரம்) தொடர்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது எண்ணி பெண் ஆசிரியர்கள்  மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.  

கோவிட் 19 அச்சம்
தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரம் கோவிட் 19 பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது. அதற்கான பாதுகாப்பு உபகரணங்களும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாக்குச் சாவடி அலுவலர்கள் மத்தியில் இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் 19 பாதிக்கப்பட்டுள்ள வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு அளிப்பதற்கு மாற்றாக 80 வயதிற்கு மேல் உள்ள வயதான வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குக்களை பெறும் முறைபோன்று,கோவிட் 19 தடுப்பு பணிகளை தொடர்ந்து சிறப்பாக  செய்து வரும் சுகாதாரப் பணியாளர்களை கொண்டுகோவிட் 19 பாதிக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகளைபெற்றிடஅதற்கான நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் செய்திட ஆசிரியர்கள் கேட்கின்றனர். 

அஞ்சல் வாக்குகள் 
பயிற்சி வகுப்புகளிலே அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்கான ஏற்பாட்டை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பல இடங்களில் செய்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில்வரவேற்பை பெற்றிருப்பினும், இன்னும் பல்லாயிரக்கணக்கான அஞ்சல் வாக்குகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சென்று சேரவில்லை என்பதும் அதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

பணியாளர் பற்றாக்குறை 
‘தமிழகத்தில் 1200 முதல் 1500 வரை அதிக வாக்காளர்களை கொண்ட வாக்குச் சாவடிகள் இம்முறை தேர்தல் ஆணையம்,  அதிகப்படியாக 1050 வாக்காளர் என்றஅளவில் பிரித்து,புதிதாக  25000 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணியாளர்கள் கூடுதலாக தேவைப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுவதும் நியாயமானதே. தமிழகத்தில் காலியாக உள்ள இலட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் இருப்பவர்களை கொண்டே இத்தகைய பணிகளை செய்ய வேண்டிய கட்டாயம் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.  எனினும் ஆள் பற்றாக்குறை என்பதின் பேரில் தேர்தல் பணியாற்ற தகுந்தோர்க்கு அல்லாமல் இருப்பவருக்கு பணி வழங்குவது சிறப்புக்குரியதா?என்ற இயல்பான கேள்வியும் எழதான் செய்கிறது.

‘சொல்வதை செய்’ மனப்பான்மை 

தேர்தல் பணி எனும் மகத்தான பணியை ஆசிரியர்கள்மறுக்காமல் செய்வது அவசியமாகிறது.  இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களும், தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்குமிடையே புரிதல் முக்கியமாகிறது.  தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்துப் பேசி கருத்துக்களை கேட்கும் தேர்தல் ஆணையம் களப்பணி செய்யும் ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகளை ஒரு முறையேனும் அழைத்து தேவைகளை கேட்பதில்லை.  “சொல்வதை செய்” மனப்பாங்குடன் செயல்படுவது பணியை செழுமைப்படுத்த உதவாது என்பதே உண்மை.  எனவே தேர்தல் ஆணையம் தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுடைய குறைகளை கேட்டறிந்து,குறிப்பாக பணி நியமன முரண்பாடுகள், தொலைதூர பணிநியமனங்கள்,  வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் ஆகியவை சரி செய்து தேர்தலை நடத்துவதால் ஆசிரியர்கள் மனமகிழ்வுடன் தேர்தல் பணியை செய்திட தயாராகவே உள்ளனர்.   

கட்டுரையாளர் : தோ.ஜான் கிறிஸ்துராஜ், மாநிலத் துணைத் தலைவர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

;