election2021

img

தேர்தலுக்காக வன்னியர் உள் ஒதுக்கீடு நாடகம்.... அதிமுக, பாமக மீது அ.சவுந்தரராசன் குற்றச்சாட்டு.....

கோவில்பட்டி:
தேர்தலுக்காக வன்னியர் உள் ஒதுக்கீடு நாடகத்தை அதிமுகவும் பாமகவும் நடத்தி வருவதாக சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் குற்றம் சாட்டினார். 

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசனுக்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் சார்பில் வாக்குச் சேகரித்து மேலும் அவர் பேசியதாவது: 

அதிமுக - பாஜக கூட்டணியை நம்ப மாட்டார்கள் என்பதை தெரிந்துகொண்டுதான் எதையாவது சொல்லி மக்களை பிரிக்க வேண்டும், மோதவிட வேண்டும் என்று பார்க்கிறார்கள். அதற்குதான் வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு. மிகவும்பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ஏற்கனவே அவர்களுக்கு இருக்கிறது. அதன்படி 10.5 சதவிகிதத்தைவிட கூடுதலாக ஒதுக்கீடு கிடைத்து வருகிறது. ஆனால், இப்போதுதான் இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு  வழங்கப்படுவதுபோல் ராமதாசும், எடப்பாடி பழனிசாமியும் வன்னியர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இப்போது மற்ற ஓபிசி பிரிவினர் தங்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை கெடுத்துவிட்டதாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கே ஓட்டு வராது என்று கருதி, இந்த சட்டம் தற்காலிகமானது என்கிறார். வேலையத்தமாமியார் புடவையை கிழிச்சி கிழிச்சி தைத்த கதையாக, சட்டத்தை மாற்றிக் கொண்டே இருப்பீர்களா?. தேர்தலுக்காக எதையும் செய்யலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

அருகதையற்ற மோடி 
முன்பெல்லாம் பெட்ரோலை ஆடம்பரப் பொருளாக குறிப்பிட்டு பட்ஜெட்டில் வரி விதிப்பார்கள். இப்போது காரும், இருசக்கர வாகனங்களின் பயன்பாடும் சாதாரண மக்களிடம் அதிகரித்துள்ளது. இன்று பெட்ரோல் ஆடம்பரப் பொருள் அல்ல; அத்தியாவசியப் பொருள். பல்வேறு பொருட்களை வாகனங்களில் வைத்து வியாபாரம் செய்கிறார்கள். மிக அத்தியாவசியப் பொருட்களாக மாறியுள்ள பெட்ரோல், டீசல் மீது விலையை ஏற்றினால் அதன் விளைவாக எல்லாப் பொருட்களின் விலைகளும் ஏறும். பாம்பு கடித்து உடம்பில் விஷம் ஏறுவது போல இந்த விலையேற்றம் உள்ளது. சர்வதேச சந்தையில் விலை குறைந்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் அவசியமே இல்லாமல் விலை ஏற்றப்படுகிறது. பெட்ரோல்,டீசல் விலை நூறு ரூபாயை நெருங்கியிருக்கிறது.  இந்த விலையேற்றம் உலகத்தின் எந்த நாட்டிலும்இல்லை. ஒரு சொட்டுக்கூட பெட்ரோல் உற்பத்தி இல்லாத இலங்கை இந்தியாவிடமிருந்து வாங்குகிறது.  ஆனால், இலங்கையைவிட கூடுதல் விலைக்கு இந்தியாவில் பெட்ரோல் விற்கப்படுகிறது. இதன் மீது விதிக்கப்படும் வரியே அதற்கு காரணம். 

2014 இல் மோடி ஆட்சிக்கு வந்த போது பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ரூ.3.36 ஆக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்த வரி 12 மடங்கு  அதிகரித்து ரூ.36 ஆகியுள்ளது. கொடுங்கோலன் ஆட்சியில் தான் இப்படி நடக்கும். சர்வாதிகாரி இடி அமீன் ஆட்சியில்கூட 12 மடங்கு வரி 6 ஆண்டுகளில் அதிகரித்ததாக நாம் கேள்விப்படவில்லை. இதை செய்தமோடி எந்த இந்தியனையும் சந்திக்க அருகதையற்றவர். 

அட்டைப் பெட்டி சிலிண்டர் கூட தரமுடியாது
கேஸ் விலை உயர்வால் ஒவ்வொரு தாய்மாரும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். பழையபடி விறகு வைத்து எரிக்கலாமா என யோசிக்கிறார்கள். ஒரு மாதத்தில் மட்டும் ரூ.125 உயர்த்தி இப்போது ரூ.900-த்தை தாண்டியுள்ளது. ஏன் இப்படி கேஸ் விலையை ஏற்றுகிறீர்கள் என்று மோடியிடம் கேட்கும் அரசியல் துணிவு இல்லாத எடப்பாடி, ஆறு சிலிண்டர்களை இலவசமாக தருவதாக கூறுகிறார். அட்டைப் பெட்டியில் செய்த சிலிண்டரைக்கூட அவரால் கொடுக்க முடியாது. ரூ.5 லட்சம் கோடியை பாக்கி வைத்திருக்கிறது இந்த அரசு. சட்டமன்றத்தில்  விதி எண் 110இல் அறிவித்த எந்த திட்டமும் அமலுக்கு வரவில்லை. இதை மக்களிடம் மறைத்து, ஏமாற்றுவதற்காக பல பொய்களை கூறி வருகிறார்கள். அதில் ஒரு பொய்தான் இந்த ஆறு சிலிண்டர்கள். 

மத்திய அரசு அடுக்கடுக்காக மக்களுக்கு விரோதமாக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட எடப்பாடி பேசியதில்லை. சிறு தொழில் நடத்தியவர்கள் நசிந்துவிட்டார்கள். 35 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். கோவில்பட்டி நகரம் தீப்பெட்டி தொழிலை நம்பி இருக்கிறது. வீடுகளில் இருந்து கொண்டு இந்ததொழிலை செய்து வருகிறார்கள். இருக்கிற தொழிலை காப்பாற்றாத யாராவது புதிய தொழிலைகொண்டுவர முடியுமா? இருக்கிற வேலையைபாதுகாக்காத உங்களால் புதிய வேலைவாய்ப்புகளை தர முடியாது. தீப்பெட்டித் தொழிலுக்கு ஏற்கனவே வரி இருந்தது. இப்போது ஜிஎஸ்டி வரிவிதித்து தொழிலை முடக்கி விட்டார்கள். வியாபாரிகளுக்கும் ஜிஎஸ்டிதான் பிரச்சனை. எந்தவிதமுன்யோசனையும் இல்லாமல் ஜிஎஸ்டி அமல்படுத்துகிறபோது தொழில்கள் அழிகின்றன.

மாநில உரிமைகள் பறிப்பு
மத்திய அரசு மாநிலங்களுக்கான அதிகாரங்களை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருக்கிறது. கல்வி  பொதுப்பட்டியலில் இருந்ததால் நமக்கானபாடத்திட்டங்களை உருவாக்கி வந்தோம். அதைக்கெடுக்கிறார்கள். இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள். ஜிஎஸ்டியில் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய 42 ஆயிரம் கோடி ரூபாய் இன்னும் வரவில்லை. புயல், வெள்ளம் போன்ற இயற்கைபேரிடர்களில் நமக்கு மத்திய அரசு நியாயம் வழங்கவில்லை. அதை கேட்கும் துணிச்சலற்றதாக இந்தஅரசு உள்ளது. ஆனாலும் பாஜகவை ஏன் முதுகில் சுமந்து வருகிறார்கள் என்றால் மடியில் கனம். இவர்கள் திருட்டுக் கும்பல் என்பதை தெரிந்துகொண்டு மோடி மிரட்டுகிறார். நேற்றுக்கூட ஒரு எம்எல்ஏவின் கோடிக்கணக்கான பணத்தை ஒரு வைக்கோல் போரிலிருந்து எடுத்திருக்கிறார்கள். நாங்கள் சொன்னதை செய்கிறாயா? இல்லை ஐ.டி, இ.டி, சிபிஐ ரெய்டை சந்தித்து சிறைக்கு போகிறாயா? என்று மிரட்டுகிறார்கள். பணத்தை காப்பாற்றினால் போதும் என காலில் விழுகிறார்கள். 

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று மோடியும், திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழகம் என்றுஎச்.ராஜாவும் கூறுகிறார்கள். பெரியார், அண்ணா சிலைகளை உடைக்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டு கேட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. மக்களுக்கு எதிரான இந்த ஆட்சி பெரும் ஊழல்களை செய்துள்ளது. அதனால்தான் இவர்களுக்குபாஜகவைப் பார்த்து பயம். இவர்களை நாம் தோற்கடித்தே தீர வேண்டும். அதற்கு கோவில்பட்டியில் கே.சீனிவாசனுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களியுங்கள்.இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசினார்.

;