election2021

img

அமைச்சர் வீடுகளில் தமிழகத்தின் கஜானா.... திண்டுக்கல் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு.....

திண்டுக்கல்:
தமிழகத்தின் மொத்த கஜானாவும் அதிமுக முதலமைச்சர், அமைச்சர் வீடுகளில் உள்ளது. தமிழகம் எதில்வெற்றி நடைபோடுகிறதோ இல்லையோ ஊழலில் வெற்றி நடைபோடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச்செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார். 

சனியன்று மாலை திண்டுக்கல் பேகம்பூரில் என்.பாண்டிக்கு வாக்கு சேகரித்து நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு பேசினார். அவர் மேலும் பேசியதாவது:- 

தமிழகத்தில் திண்டுக்கல் உள்ளிட்ட  11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்ததாக எடப்பாடி கூறுகிறார். எங்காவது ஒரு மெடிக்கல் கல்லூரியிலாவது அட்மிசன் நடந்ததுண்டா? கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு அட்மிசன் போட அனுமதிக்கவில்லை. பாண்டிச்சேரியில் மருத்துவக் கல்லூரி துவங்குவதாக ஜிப்மர் அறிவித்து 3 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு அடிக்கல் நாட்டு விழா கூட நடக்கவில்லை. இப்போது தான் நிலம் ஆர்ஜிதம் நடக்கிறது. ஆனால் 3 ஆண்டுகளாக காரைக்காலில் தனியார் கல்லூரி நடந்து கொண்டிருக் கிறது. எனவே வேறு பல மாநிலங்களில் கட்டடப் பணிகள் துவங்காதபோதே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான 80 சதவீதமான பணிகள் நிறைவடைந்தபோதும்ஏன் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. கட்டடத்தை  கட்டிக்கொள்ளத்தான் மத்திய அரசு உங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது.மருத்துவர்களுக்கு நீட் தேர்வு கூடாது என்று நாம் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். இப்போது நர்சிங் கோர்சில் சேர்ந்தால்கூட நீட் தேர்வு என்று சொல்கிறார்கள். சாதாரண ஏழை, எளிய குடும்பத்தில் இருந்து நர்சு வேலைக்கு சென்று வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றால் அந்த வேலைக்கும் நீட் தேர்வு என்றாகி விட்டது. 

மத்திய அரசிடம் எடப்பாடி அரசாங்கம் எதையும் கேட்கப் போவதில்லை. மருத்துவர்களுக்கு நீட் கொண்டு வந்தால் கேட்க மாட்டீங்க. இப்ப நர்சுக்கு நீட் தேர்வு என்கிறது. அதையும் கேட்கவில்லை. இந்தியை திணித்தால் கேட்பதில்லை. இங்குள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட இந்தியர்களை பணிஅமர்த்தினால் கேட்க மாட்டீங்க. தமிழ்நாட்டுக்கு ஜி.எஸ்.டி.பங்குகேட்க மாட்டீங்க. போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் நிறுத்தியதை கேட்பதில்லை. தொடர்ந்து வெள்ளம்,புயல், வறட்சி மக்களை வாட்டிய போது அதற்கான நிவாரணத்தை கேட்டும் மத்திய அரசு தரவில்லை. ஆனால் நாங்கள் மத்திய அரசாங்கத்தோடு நெருக்கமாக இருக்கிறோம் என்கிறீர்கள். எதற்கு அந்த நெருக்கம்?நீங்கள் மத்திய அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்து தமிழகத்திற்கு என்ன கொண்டுவந்தீர்கள். நீங்கள் மத்திய அரசுக்கு நெருக்கமாக இல்லை. மாறாக அவர்களுக்கு நீங்கள் அடிமைகளாக இருக்கிறீர்கள்.

ஏன் நீங்கள் இப்படி அடிமை யாக இருக்கிறீர்கள் என்றால் உங் களுக்கு சிபிஐ ரெய்டு வரக்கூடாது. வருமான வரி சோதனை வரக் கூடாது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமே உங்கள் வீடுகளில் தான் உள்ளது. தமிழகத்தின் மொத்த கஜானாவையும் சுரண்டிக்கொண்டு போய் உங்கள் வீடுகளில் வைத்திருக்கிறீர்கள். எதில் நீங்கள் கொள்ளை யடிக்கவில்லை? எதில் நீங்கள் ஊழல்செய்யவில்லை? மணல், கனிம வளம், கிரானைட் என அனைத்திலும் கொள்ளையடிக்கிறீர்கள். 
அரசு தான் மணல் குவாரி நடத்துகிறது. ஒரு யூனிட் மணலுக்கு ரூ.540 டி.டி . கொடுத்தால் போதும். அதே மணல் வெளியில் ஒரு யூனிட் 25 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. யார் காரணம், இந்த பணம் எங்கே போகிறது? இந்த பணத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? இந்த 10 ஆண்டுகளில் இந்த மணல் கொள்ளையில் எத்தனை லட்சம் கோடியை நீங்கள் கொள்ளை யடித்திருப்பீர்கள்? கேட்டால் தமிழகம் வெற்றி நடை போடுகிறதாம். ஊழலில் தான் தமிழகம் வெற்றி நடைபோடுகிறது.  இவ்வாறு அவர் பேசினார். இதில் தமுஎகசவின் சாரல் கலைக்குழுவின் இசைநிகழ்சசி நடைபெற்றது. (ந.நி.)

;