election2021

img

தீக்கதிர் தேர்தல் துளிகள்...

உளறிவிடாதீர்கள்!

“குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்” என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதி, சமூக ஊடக விமர்சகர்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பொங்கலுக்கு கொடுத்த 2500 பற்றி பேசும்போது அதிமுக அமைச்சர் ஒருவர் இந்த பணம் எப்படியேனும் டாஸ்மாக் கடைகள் வழியாக எங்களுக்கே வந்துவிடும் என்று சொன்னதை நினைவுபடுத்தும்விதமாக, குடும்பத்  தலைவிகளுக்கு வழங்கப்படும் 1500 ரூபாய் ஒவ்வொரு மாதமும் குடும்பத் தலைவர்களால் மதுக்கடைகளின் மூலம் வசூல்செய்யப்பட்டுவிடும்; அதனால் அரசு கஜானாவிற்கு ஆபத்து இல்லை என்று ஏதாவது ஒரு அமைச்சர் உளறி வைக்காமல் இருந்தால் சரிதான் என்று பதிவிட்டு வருகின்றனர்.

                         ***************

மய்யத்தின் ‘ஓரம்’ எது?

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்திருக்கிறது. திமுகவை வீழ்த்துவதுதான் முதன்மை நோக்கம் என்று கடந்த சில நாட்களாக மய்யத்தின்  தலைவர் கமல் பேசி வருகிறார். எடப்பாடி தொகுதி உட்பட எல்லா தொகுதிகளிலும் அதிமுகவை மண்ணைக் கவ்வச் செய்வோம் என்று விஜயகாந்த் மகன் சவால் விட்டிருக்கிறார். இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து திமுகவை வீழ்த்துவார்களா அல்லது அதிமுகவை வீழ்த்துவார்களா? 

                         ***************

‘நாங்க பேசினா தாங்கமாட்டீங்க!’

தேமுதிக, தங்களது கூட்டணியிலிருந்து வெளியேறியதைப் பற்றி அதிமுக பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் விஜயகாந்தோ, பிரேமலதாவோ பேசாமல் மகனை விட்டு வசைபாட வைப்பதை அதிமுகவின் அமைச்சர் ஜெயக்குமாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “நன்றி மறந்து தேமுதிக பேசக்கூடாது; பிடிக்கவில்லையென்றால் நண்பர்களைப் போல கைகுலுக்கி பிரிந்துவிட வேண்டும்; வாய்க்கு வந்தபடி பேசினால் நாங்களும் பேசுவோம்” என்று குமுறியிருக்கிறார்.

;