election2021

img

உள்நோக்கத்துடன் சோதனை நடத்துவதா? மத்திய அரசுக்கு சிபிஎம் கண்டனம்....

சென்னை:
உள்நோக்கத்துடன் நடத்தும் அதிரடி சோதனைகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று (25-3-2021) திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை திமுக வேட்பாளருமான எ.வ.வேலு அவர்களின் அலுவலகம், வீடு,கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் உட்பட 18 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ‘ரெய்டு’நடத்தி உள்ளனர். திருவண்ணா மலை சட்டமன்ற தொகுதியில் பாஜக போட்டியிடும் நிலையில்திமுக வேட்பாளராக எ.வ.வேலு அவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தியுள்ளது உள்நோக்கம் கொண்டது. அவருடைய பெயருக்கு களங்கம் உருவாக்குவதற்காக பாஜக இச்செயலை செய்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தோல்வி பயத்தினால்...
தேர்தல் நெருக்கத்தில் எதிர்க்கட்சியினரை மிரட்ட, அவர்களது செயல்பாடுகளை முடக்க வருமானவரித்துறை மத்திய அரசாங்கத்தின் ஏவல் கருவிகளாக செயல்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது. அதிலும் குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, குறி வைத்து சோதனை நடத்தப்படுபவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியின் பிரபல நபர்களாக உள்ளனர். அதேநேரத்தில் பாஜக, அஇஅதிமுக, பாமக உட்பட ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களை வருமான வரித்துறை கண்டுகொள்ளா தது வியப்பாக உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தோல்வி பயத்தின் காரணமாகவே இத்தகைய செயல்கள் நடத்தப்படுகின்றன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டிலும், வரி ஏய்ப்பு செய்பவர்களையும் - சட்டத்துக்குப் புறம்பாக பணம் சேர்ப்பவர்களையும்-அதை அரசியல் செயல்பாட்டுக்கு நாணயமற்றமுறையில்  பயன்படுத்துபவர்களை யும்  - சட்டத்தின்படி சோதனையிட்டு வழக்கு தொடர வேண்டும்  என வலியுறுத்தி வந்துள்ளது.

அரசியல் தாக்குதல்
ஆனால் தேர்தல் நேரத்தில்  இதைச் செய்து, பாஜக தனது அரசியல் எதிரிகளை முடக்க இந்த ‘சோதனை ஆயுதத்தைப் பயன்படுத்துவது ஆபத்தான அணுகு முறை’ எனக் கருதுகிறது. பாஜக அரசின் இந்த அணுகுமுறை ஜனநாயக செயல்பாட்டை முடக்குகிற உள்நோக்கம் கொண்ட அரசியல் தாக்குதல் ஆகும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியை தடுத்து விடுவதற்கு பாஜக முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.எனவே, வெளிப்படையான, சமமான விளையாடுகிற தளம் அனைவருக்கும் அளிக்கப்படும் வகையில் மேற்கண்ட உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  கேட்டுக் கொள்கிறது.

;