election2021

img

தமிழகப் பெண்களும் ஏப்ரல் 6 ஆம் தேதியும்....

ஏப்ரல் 6 அன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.  தேர்தல் கால வாக்குறுதிகள் தமிழகம் முழுவதும் அள்ளி அள்ளி வீசப்படுகின்றன.  இதுவரையில், பெண்களா? யார் அவர்கள்? என்று கேட்டவர்களெல்லாம் “பெண்களே, உங்களுக்காக நாங்கள்” என்று கட்டியம் கூறிக் கொண்டு,

பணக்கட்டுகளுடன், தட்டாமல் செய்வோம் என பல கட்டானவாக்குறுதிகளுடன், இதுவரையில் கால் படாத கடை கோடி முடுக்கெல்லாம் பறை சாற்றி வருகின்றனர்.  இதற்கெல்லாம் ஏமாறுபவர்களா எமது பெண்கள்?  “நாங்கள் என்ன கிள்ளுக் கீரைகள் என்றா நினைத்தீர்கள்?” என்ற வினா எழுப்பி சிலிர்த்து நிற்கிறார்கள் நமது பெண்கள்.

பொருளாதாரத்தில் இந்தியப் பெண்கள்
உலக அளவில் பாலின இடைவெளி தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.  பொதுவாக, பாலின இடைவெளியில் 2006ஆம் ஆண்டில் 153 நாடுகளில் 110வது இடத்தில் இருந்த இந்தியா 2018ஆம் ஆண்டில் 112வது இடத்திற்கு வந்துள்ளது. அதே நேரம், பொருளாதார பாலின இடைவெளியில்  ஒரு 14 வருட காலக்கட்டத்திற்குள், உலக அளவில் இந்தியா 39 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து பின்தங்கியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.  அதாவது 2006ஆம் ஆண்டில் 110வது இடத்தில் இருந்தது.  தற்போது 2020ல் 149வது இடத்திற்கு  வந்துள்ளது.  பெண்களின் பொருளாதார சுய சார்பு இந்தியாவில் வீழ்ந்து கொண்டிருக்கிறது.  பொருளாதார வாய்ப்புகள் கீழ் மட்டத்திற்கு போய்க் கொண்டிருக்கின்றன.  உலக வங்கி ஜுன் 2020ல் வெளியிட்ட தகவலின் படி, பாகிஸ்தானை விட, ஆப்கானிஸ்தானை விட இந்திய பெண் தொழிலாளர்களின் நிலை தரம்தாழ்ந்து போயுள்ளது.   தறி கெட்டு ஏறி வரும் விலைவாசியின் காரணமாக பெண்கள் நிலையற்ற, நிச்சயமற்ற, ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.  ஊதிய சமநிலையில் 117வது இடத்தில் இந்தியா உள்ளது.  இந்தியாவில் ஊதிய இடைவெளி என்பதில் ஒரே வேலையை பார்க்கும் ஆணுக்குக் கொடுக்கப்படும் கூலியைவிட மூன்றில் ஒரு பங்கு குறைவான கூலியே பெண்ணுக்குக் கொடுக்கப்படுகிறது. 

வேலையின்மையின் பெருக்கம்
கடந்த 8 மாதங்களில் மட்டும் 17 மில்லியன் பெண்கள்  வேலை இழந்துள்ளனர்.  ஆண்களின் வேலையின்மை விகிதம் 6%, பெண்களின் வேலையின்மை விகிதம் 17%.கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் மத்திய மாநில அரசுகளால் சீர்குலைக்கப்பட்டுள்ளது.  100 நாட்கள் வேலை என்பது கனவாகிப் போயுள்ளது.  வருடத்தில் 30 நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகிப் போயுள்ளதாக பெண்கள் தெரிவிக்கின்றனர்.  கொடுக்கப்பட்ட நாட்களுக்கான கூலியிலும் உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகை வழங்கப்படவில்லை.  பல நேரங்களில் வெறும் 150 ரூபாயும், 120 முதல் 130 ரூபாய் வரையிலும் தான் வழங்கப்பட்டுள்ளது.  நாம் நகர்ப்புறங்களுக்கும் இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம்.  வருடத்தில் 200 நாட்கள் வேலை அளிக்க வேண்டும், நாளொன்றுக்கு ரூ.600 உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் இதில் அடங்கும்.  ஆனால், ஏற்கனவே பார்த்த வேலைகளுக்கே இந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம்வழங்கப்படாமல் உள்ளது.  இவர்கள் செய்யும் வேலைகளுக்கு இவர்களே வேலைக்கான கருவிகளை கொண்டு செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. 

லாக்டவுன் காலக்கட்டத்தில் புலம் பெயர் தொழிலாளர்களும், வீட்டு வேலை செய்யும் பெண்களும் பட்டதுன்பங்களை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.  80 சதமான இந்திய பெண்கள் வேலை செய்யத்தகுதியானவர்கள் என்ற வயது வரம்பிற்குள் இருக்கின்றனர்.  ஆனால், வேலையில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 71%.   பெண்களுக்கு 11 சதவீதத்திற்கும் குறைவுஎன்கிறது.  உடனே இந்தியப் பெண்கள் வேலை செய்யத் தயராக இல்லை என்று ஒரு சாரார் கூக்குரலிட்டு வருகின்றனர்.  உண்மையில் இவர்களின் “சம்பளம் கொடுபடா”அன்றாட வீட்டு வேலைகள் காரணமாகவும், அவற்றை “வேலை” என்று அங்கீகரிக்க மறுத்ததாலும் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.   பெண்களின் வேலையை மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில் இணைக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கை கேட்பாரின்றி கிடக்கிறது.  பட்ஜெட்டில் 2021-22ல் வெறும் 1,53,326 கோடிகள் மட்டுமே பாலின பட்ஜெட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  அதாவது மொத்த செலவினத்தில் 4.4%.  கடந்த ஆண்டு 4.7% ஒதுக்கப்பட்டது.  வேலையின்மையும், பசியும் பட்டினியும் நிறைந்துள்ள இந்த மகா தொற்று காலத்தில் தான் அரசு தனது நிதி ஒதுக்கீட்டில் இந்த சுருக்கத்தினை செய்துள்ளது. 

உலகிலேயே பெண்கள் வாழத் தகுதியற்ற நாடு இந்தியா
வேக வேகமாக அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையின் காரணமாகவும், பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாகவும், முடக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ள பொது விநியோகத்திட்டத்தின் காரணமாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.  பணித் தளங்களில் நீதிபதி வர்மா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாலியல் புகார் குழுக்கள் முறையாகஅமைக்கப்பட்டு, செயல்படச் செய்யப்பட வேண்டும் என்றகோரிக்கையும் கவனிப்பில்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ள நம் நாட்டில் தான் இன்று பெண்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை, தனது தோழமையை தேர்ந்தெடுக்கும் உரிமையை, தனக்கான ஆடையை தேர்ந்தெடுக்கும் உரிமையை, தங்கள் விருப்பப்படி தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளும் உரிமையை இழந்து நிற்கின்றனர்.  பிஜேபி உள்ளிட்ட வலதுசாரி சக்திகள் இந்த அத்தனை உரிமைகளின் மீதும் கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளன.  இவை இன்று  பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளாக வெடித்துக் கொண்டிருக்கின்றன.

தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் உலகிலேயே பெண்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நாடு என்ற பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று 2018-ல் தெரிவித்துள்ளது.  பத்தாண்டுகளுக்கு முன்னர் முதல் 5 நாடுகளில்4வது இடத்தில் இந்தியா இருந்தது.  இந்தியாவில் ஒருநாளைக்கு 87 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி வருகின்றன.  கடந்த பத்தாண்டுகளில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் 500% அதிகரித்துள்ளது.  தேசிய குற்றவியல் பீரோ 2019-ல் பெண்களுக்கெதிரான வன்முறைகள் 67% அதிகரித்துள்ளது என்று கூறுகிறது.  குற்றம் சாட்டப்பட்டவர்களில் வெறும் 27%பேர் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்.   தமிழகத்தில் சமீபத்தில்பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு உயரதிகாரியால் பாலியல்தொந்தரவு ஏற்பட்டபோது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவே அவர்கள் பட்ட பாட்டினை அறிவோம்.  குழந்தைகள் செக்ஸ் டூரிசம் இன்று தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மிகப் பெரும் வணிகமாக மாறிப் போயுள்ளது. 

முடிவெடுக்கும் அமைப்புகளில் இந்தியப் பெண்கள்
இதனிடையே வெகு காலமாக முடிவெடுக்கும் அமைப்புகளில் பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுவெறும் வெற்றுக் கோரிக்கையாக மாறிப் போயுள்ளது.  இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சட்ட மன்றங்கள் மற்றும் நாடாளுமன்றங்களையும் சேர்த்து வெறும் 10 சதத்திற்கும் குறைவான இடத்தில் தான் பெண்கள்அரசியல் தளத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள்.  பெண்கள் இன்று இந்தியாவில் தலை தூக்கிக் கொண்டிருக்கும் பிற்போக்கு, ஆணாதிக்க சக்திகளை எதிர்த்து களம் காண வேண்டியவர்களாக இருக்கின்றனர்.  பாஜக அரசாங்கத்தின் நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிராகவும், வகுப்புவாதக் கொள்கைகளுக்கு எதிராகவும் துணிச்சலான போராட்டங்களை நடத்த வேண்டியவர்களாக உள்ளனர்.  அப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தும்போது, எதிர்க்குரல் எழுப்பும்போது, வன்முறைகளாலும் அரசியல் அதிகாரத்தாலும் அவர்களின் குரல்வளைகள் நெறிக்கப்படுகின்றன.  அதன் உதாரணம் தான் தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கனடா ஆய்வு மாணவி லூயிஸ் சோபியா.  ஆனாலும் பெண்கள், “எங்கள் குரல்வளைகள் நெரிக்கப்படலாம்.   ஆனாலும், ஒரு நாள் எங்களின் மவுனம் உடைந்து தெறிக்கும் ஒலி, ஓங்காரமாய் ஓங்கி ஒலிக்கும்.  அப்போது வானம் எங்கள் கைகளுக்குள் சிறைபடும்” என்று சிலிர்த்து நிற்கிறார்கள். 

நெரிபடும் குரல்வளைகளும், உடைத்தெறியும் உளிகளும்
தங்களின் மேம்பாட்டிற்காக, தங்களை அடக்கி வைக்கும் அடக்குமுறை தளைகளை உடைத்தெறிய, பல்வேறு தளங்களில் வீரம் செறிந்த பல போராட்டங்களை பெண்கள் தொடர்ந்து நடத்திய வண்ணம்  இருக்கின்றனர்.  இந்தியாவில் தமிழகத்தில் பெண்களால் எதிர்த்துக் கேட்கப்பட்ட போராட்டங்கள் பல உள்ளன.  மக்களுக்கான போராட்டங்களில் முன்னணியில் பெண்களே அதிகம் நிற்கின்றனர். இதில் தொழிலாளர்களாக பெண்கள் பங்கேற்கும் பல துறைவாரியான போராட்டங்களும் அடங்கும்.  சுற்றுச் சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில்,   பெண்களின் பங்கேற்பு அதிகம்.  இன்று அந்த ஸ்டெர்லைட் ஆலையின் கதவுகளில்போடப்பட்டுள்ள பூட்டுகளின் முத்திரையில் 17 வயது ஸ்னோலினின் இரத்தம் உறைந்துள்ளது.   சேலம் எட்டு வழிச்சாலை போடும்போது, எங்கள் நிலத்தின் ஒரு பிடி மண்ணை கூட விட மாட்டோம் என்று போராடிய பெருங்கூட்டத்தில், அரசு எந்திரத்தின் மிருகத்தனமான நடவடிக்கைக்கு எதிராக பெண்களின் குரலே ஓங்கி ஒலித்தது.  மீத்தேன் போராட்டத்தின் போது, டெல்டா மாவட்டங்களில் நிலத்தைமலடாக்கும் திட்டத்திற்கு எதிராகக் கிராமம் கிராமமாக திரண்டமக்களில் பெண்களே முன்னணியில் நின்றார்கள்.  மது பானக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் காவல் துறையின் அடக்குமுறைக்கு பணியாமல் பெண்கள் வெகுண்டெழுந்து போராடிய சரித்திரப் பதிவுகளும் இங்குண்டு. 

தில்லியில் 100 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தில் மார்ச் 8 அன்று 40,000 பெண் விவசாயிகள் நடத்திய அணி வகுப்பு அகிலத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.   அங்கே “விவசாயிகள்” என்ற அந்தஸ்துடன் பெண் விவசாயிகள் பல்லாயிரம் இருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் இந்தியப் பெண்கள்.   பெண்கள் ஒரு புறம் தங்களை “தொழிலாளர்கள்” என்று அங்கீகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர், இன்னொரு புறம் தங்களை “விவசாயிகள்” என்று அங்கீகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தினையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.  பொது மேடைகளும், பிரச்சாரக் களங்களும் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் சொந்தமானதே என்று வயது வித்தியாசமின்றி எங்கெங்கும் வியாபித்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தியப் பெண்கள்.   

என்ன செய்ய வேண்டும் பெண்கள்?
பொதுத்துறைகளின் விற்பனையாகட்டும், மாநில அரசின் உரிமை பறிப்புகளாகட்டும், நீட் மற்றும் ஹிந்தி திணிப்பு போன்ற மத்திய அரசின் கொள்கைகளாகட்டும், அனைத்தையும் தமிழக அரசு ஆதரித்தே வந்துள்ளது.  மத்திய மாநில அரசுகளின் கொள்கைகள் தனி மனிதனின் கண்ணியமான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த முடியாததாய் உள்ளது.  இதற்கு எதிரான போராட்ட நாள் தான் ஏப்ரல் 6.  அந்தப் போராட்டத்தில் வாக்குச் சீட்டுகளே ஆயுதம்.அந்த ஆயுதத்தை மக்கள் விரோத கொள்கைகளை முறியடிக்க பயன்படுத்துவோம்.  தமிழகத்தை பாதுகாப்போம்.  

கட்டுரையாளர் : ஆர்.எஸ்.செண்பகம், சிஐடியு திருநெல்வேலி  மாவட்டத் தலைவர்

;