election2021

img

தமிழகத்தில் வெல்வோம்.... தேசத்தைக் காப்போம்... சேலத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் பொதுக்கூட்டம்....

சேலம்:
மத்திய அரசு நம்மீது இரசாயன தாக்குதலையும், கலாச்சார தாக்குதலையும் நடத்திக்கொண்டிருக் கிறது. அந்த இராசாயனத் தாக்குதலையும், கலாச்சாரதாக்குதலையும் எதிர்க்கும் ஆற்றல் நமக்கு உண்டு என சேலத்தில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மார்ச்28 ஞாயிறன்று மாலை சேலத்தில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த பத்தாண்டு காலமாகத் தமிழ்நாடு பாதாளத்திற்கு போயிருக்கிறது. அதிமுக ஆட்சியில் ஐம்பதாண்டுகாலம் இந்தத் தமிழகம் பின்னோக்கிச் சென்றிருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா அவர்களது மறைவிற்குப் பிறகு பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி, மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சிக்கு - மோடிக்கு – அமித் ஷாவிற்கு அடிபணிந்து கிடக்கும் ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நீட்டைக் கொண்டு வந்து உள்ளே நுழைத்து விட்டார்கள். புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து கல்வியைப் பாழாக்கி இருக்கிறார்கள். தாய்மொழியாம் நம்முடைய தமிழ்மொழிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய மாநில உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன.பழனிசாமியாக இருந்தாலும், பன்னீர்செல்வமாக இருந்தாலும் அவர்களுக்கு மக்களைப் பற்றிக் கவலை இல்லை. அவர்கள் நோக்கம் எல்லாம் பணம் தான் - ஊழல் தான் - கரப்ஷன் தான் - கமிஷன் தான் - கலெக்சன்தான்.

காவிரி உரிமையைத் தர முடியாத மத்திய அரசு, அந்த உரிமையைத் தட்டிக் கேட்க முடியாத தமிழ்நாட்டில் இருக்கும் மாநில அரசு. அதனால் தமிழகம் பாழ்பட்டு போயிருக்கிறது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினா, கூடங்குளம் போன்ற அணு உலைகள். சேலம் எட்டு வழிச் சாலை. இவையெல்லாம் மத்திய அரசு தமிழகத்தின் மீதுநடத்தும் இரசாயன தாக்குதலாக அமைந்து இருக்கிறது.இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, நீட் தேர்வைக் கொண்டுவந்தது, மத்திய அரசு பணிகளில் தமிழில் பேசக்கூடாது, தமிழகப் பணிகளில் வட மாநிலத்தவரை கொண்டுவந்து நுழைப்பது இவையெல்லாம் கலாச்சார தாக்குதல்கள். இவற்றை எதிர்க்கும் ஆற்றல் நமக்கு உண்டு.

ராகுலுக்கு வேண்டுகோள்
இங்கே இளம் தலைவர் ராகுல் வந்திருக்கிறார். அவரிடத்தில் ஒரு அன்பான வேண்டுகோள். அன்பான வேண்டுகோள் அல்ல; உரிமையான வேண்டுகோள். இன்றைக்கு இந்தியா ஒரு மதவாத பாசிச கும்பலிடம் மாட்டி மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த இந்தியாவைக் காக்க வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் அல்லது இப்போது நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலாக இருந்தாலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒன்று சேர்ந்து இருக்கிறது. அவ்வாறு சேர்ந்த காரணத்தினால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தமிழ்நாட்டில் பா.ஜ.க.வெற்றி பெற முடியவில்லை என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அதேபோல சட்டமன்றத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்கருத்துக் கணிப்புகளில் எல்லாம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பா.ஜ.க. வாஷ் அவுட் என்ற நிலைதான்.

ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் இருக்கலாம். அதே நேரத்தில் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் 37 சதவிகிதம்தான். 37 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று பா.ஜ.க. இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது என்றால் 63 சதவிகிதமக்கள் அந்த பா.ஜ.க.வை எதிர்த்து, பிரித்து வாக்களித்துள்ளார்கள். பல்வேறு கட்சிகளுக்குப் பிரித்துப் போட்டு விட்டார்கள்.தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி போன்று இந்திய அளவில் கூட்டணி அமையவில்லை. அதனால் சகோதரர் ராகுல் அவர்களே, உங்களை அன்போடு கேட்கிறேன். நீங்கள்பொறுப்பு ஏற்றுக் கொள்ளுங்கள். உடனடியாக மத்தியில், இந்தியஅளவில் இதுபோன்ற கூட்டணி அமைவதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு, அந்தப் பணிகளில் நீங்கள் இறங்கிட வேண்டும்.
                           ************* 

பச்சைத் துரோகம் செய்தவர்தான் பழனிச்சாமி... கே.பாலகிருஷ்ணன் சாடல்

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

பச்சைத் துண்டு  போட்டவர் எல்லாம் விவசாயி ஆக முடியாது. விவசாயிகளின் நலனுக்கு எதிராக திட்டங்களை வகுத்த தமிழக முதல்வர் தான் ஒரு விவசாயி என குறிப்பிடுவது வேடிக்கையானது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் ஊழல் அதிகரித்துள்ளது. தன்மானத்தை அடமானம் வைத்து விட்டு மாநில சுயாட்சியையும் மனித உரிமைகளையும் காலில் போட்டு மிதித்து கொண்டிருக்கிறது மோடி அரசு.உயர்மின் கோபுர திட்டம், கெயில் திட்டம், எட்டு வழி சாலை திட்டம் போன்ற திட்டங்களை ஆதரிப்பதோடு,  உச்சநீதிமன்றம் வரை சென்று எட்டு வழி சாலைக்கு அனுமதி பெற்று ரோட்டை போட்டே தீருவேன் என்று கூறும் நீங்கள் எப்படி விவசாயிகளின் நண்பனாக இருக்க முடியும்?. சிறுபான்மையினர், தொழிலாளர்கள், விவசாயிகள் என தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளீர்கள்.  சிறு குறு நிறுவனங்களை  அழித்து நாசமாக்கி விட்டு, தற்போது  வெற்றி நடைபோடுகிறது தமிழகம் என்று விளம்பரம் செய்து வருகின்றனர். உண்மையிலேயே அரசின் கஜானாவை கொள்ளையடிப்பதில்தான் வெற்றிநடை போடுகிறார்கள். உலகத்திலேயே உங்களோடு ஊழலில் போட்டிபோட யாராலும் முடியாது. மோடியை ஊருக்கு அழைத்து வாருங்கள். நாங்கள் வாக்கு கேட்க அவசியம் இருக்காது. மோடியை பார்த்தாலே தமிழக மக்கள் உங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள். தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டிப்பாக வெற்றிபெறும்.இவ்வாறு அவர் பேசினார்.

இப்பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சியின் பேரா.ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். 

இந்த செய்தி தொகுப்பு 1 மற்றும் 4-ஆம் பக்கம் என 2 பகுதிகளாக  உள்ளது. தொடர்ச்சியாக படிக்கும் வசதிக்காக இதே தொகுப்பில் ஒரே தொகுப்பாக உள்ளது...   

;