election2021

img

வஞ்சகர்களையும் துரோகிகளையும் பற்றி வார்த்தையாடாத சீமான்.....

‘‘நான் ஆட்சிக்கு வந்தால் மிக்ஸி, கிரைண்டர்,  வாஷிங் மெஷின்லாம் கிடையாது.  அவைகள நீங்களே   வாங்கிக்கிடறதற்கு நா வேல வாய்ப்பையும் வருமானத்தையுந் தந்துர்றேன். (ஜோக் நம்பர் 1 ) ஆமா….கையேந்தறது தன்மான இழப்பு. மானத்துக்காக உயிர விட்ட இனம் கையேந்தக்கூடாது.  கல்வியில உலகத்துல தலைசிறந்த நாடுகள் இருக்கு. அதுல முத இடத்துல தென்கொரியா  இருக்கு (ஜோக்  நம்பர் 2). எங்கள்ட்ட அதிகாரம் வந்தா உலகத்தில தலைசிறந்த நாடா தமிழ்நாடும் இருக்கும் (ஜோக் நம்பர் 3). பள்ளிக்கல்லூரிகள் தரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்திவிட்ருவோம் (ஜோக் நம்பர் 4).

இங்க எந்த மாதிரி அமைப்பு இருக்குதுங்கறத அறிவார்ந்த தமிழ் சமூகம் சிந்திக்கணும். அறிவையும் உயிரையும் விக்கக்கூடாது ஆகச்சிறந்த மருத்துவத்தை கொடுக்கணும். பிறகு குடிநீரை விக்கக்கூடாது.நாம் தமிழர் ஆட்சிக்கு வந்த பின்னே தண்ணிய குடுவையில அடச்சி விக்கிற முற தடை செய்யப்படுது. நானே  என் மக்களுக்கு தூய குடிநீர்  இலவசமா விநியோகம் பண்ணிர்றேன். கொடுத்துர்றேன் (ஜோக் நம்பர் 5). தடையற்ற மின்சாரம் தயாரிப்பேன். மாற்று உற்பத்திக்கு போயிடுறேன். காற்றாலை, சூரியஒளி, கடல் அலை. வேளாண் மக்களுக்கு இலவச மின்சாரம். அரசுக்கு இருக்கும் 6 லட்சம் கோடி  கடன யார் தள்ளுபடி  பண்றது? நான்தான் வந்து தள்ளுபடி செய்யணும். அதனால்தான் உங்க ரெண்டு பேத்தை யும் ( திமுக-அதிமுக ) சேர்த்து நான்தள்ளுபடி பண்றேன் (ஜோக் நம்பர் 6).’’

27.3.2021 அன்று மன்னார்குடியில்  நடைபெற்ற நாம் தமிழர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்சீமான் ஆற்றிய உரையின் ஒரு பகுதிதான் இது. மொத்தத்தில் எந்த ஒரு இடத்திலும்  ரயில்வே, வங்கிகள், என்எல்சி உள்ளிட்ட மத்திய வேலை வாய்ப்புகளில் தமிழ் மாநில முன்னுரிமையை புறக்கணித்து தமிழ் இளைஞர்களுக்கு  நரேந்திர மோடி அரசு செய்து வரும் வஞ்சகத்தைப் பற்றி  தேர்தலின் இச்சமயத்தில் கூட சீமான் பேசவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வையும் அதனால் ஏழை-எளிய நடுத்தர மக்களின் இழப்பையும் பேசவில்லை. அம்பானி, அதானிக்காக இந்திய விவசாயத்தை சீரழிக்கும் மோடியின் விவசாயச் சட்டங்களையோ தேர்தல் சமயத்தில் சீமான் பேசவில்லை. 

எல்ஐசி, வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்களை துவம்சம் செய்து  அதானி, அம்பானிக்காகவே இந்திய பொருளாதார-தொழிற்துறையை வடிவமைக்கும் பாஜகவின் துரோகத்தைப் பற்றியோ, இந்த துரோகங்களுக்கு முட்டுக் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமியைப் பற்றியோ  ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. மீனவர்கள், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கச் செய்யும் அதானியின்   காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம், கன்னியாகுமரி கிராமங்களைச் சேர்ந்த  பல்லாயிரக்கணக்கான மக்கள்  பன்னாட்டுசரக்குப் பெட்டக மாற்று முனைய துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் இச்சமயத்தில் சந்தர்ப்பவாத நிலையெடுக்கும்  எடப்பாடியார் பற்றி ஒரு வார்த்தைக்கூட தேர்தல் சமயத்தில் பேசவில்லை. 

மாபெரும் ஜனநாயக தேர்தல் இயக்கம் 
இதுவரை நடைபெற்ற 15 சட்டமன்றத் தேர்தல்களின்  அரசியல் பொருளாதாரச் சூழல்கள் வேறு. ஆனால் இன்றைய 16 ஆவது சட்டமன்றத் தேர்தல் அடிப்படையில் வேறானது. அதிமுக முதுகில் சவாரி செய்தவாறே பாசிசம் தமிழ்நாட்டில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்து நாட்டின் ஒற்றுமை மதநல்லிணக்கத்தையும்  தமிழ் இனத்தின் பண்பாடு கலாச்சாரத்தை  சிதைத்து தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜகவை டெபாசிட் இழக்க வைத்து  சரியாக பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஆவேசத்திலும் மதச்சார்பற்ற நாட்டுப்பற்று இயக்கங்கள் எல்லாம் இன்று ஓரணியாய் திரண்டு நிற்கின்றன. 

வரலாற்றுச் சிறப்புள்ள இந்த  ஜனநாயகப் போராட்டத்தை இன்று திமுகதலைமையேற்று நடத்தி வருகிறது. இந்த பலமான கட்டமைப்பைக்கொண்ட திமுக-வைதொடர்ந்து தாக்குவதன் மூலம்  இப்போராட்டங் களை பலவீனப்படுத்த  பாஜகவின் குருபீடம்  திட்டமிட்டு பல கருவிகளை உருவாக்கியுள்ளது. அந்த  கருவிகளில் ஒன்றுதான்  சீமான். இவர் முன்னிறுத்தும் திமுக-அதிமுக இரண்டும் ஒன்றுதான். இவ்விரண்டும்தான் தமிழ் இனத்தின் சீரழிவிற்கு காரணம் என்று பொதுமைப்படுத்தி செய்யும் பிரச்சாரமும் விரக்தியடைந்திருக்கும் தமிழக வாக்காளர்களை  இப்போதையஅவசர அவசிய தேர்தல் கடமையிலிருந்து  ஒதுக்கி வைக்கும் தந்திரம் கொண்டதாகும். 

இது அடிப்படையில் இந்துத்துவாவுக்கும் அதன் பாசிச கோட்பாடுகளுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எதிராக திரள வேண்டிய மக்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களது  வாக்குகளை துண்டாடும் தமிழினத் துரோகமாகும். அவரது உரையினூடே அவர் அடிக்கடி திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் நான், நான் என்ற அரசியல் மேலாதிக்க சிந்தனை பாசிசத்தின் துவக்கம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் துயரத்திலிருக்கும் தமிழ் மக்களின் நெருக்கடிகள், இழப்புகள், எதார்த்தங்களையும் உண்மைகளையும் வரும் நாட்களில் நிச்சயம் உணர்த்தும். 

தொகுப்பு :  நீடா சுப்பையா

;