election2021

img

ஆட்சி மாற்றம் நிகழும்... தமிழகம் நிமிரும்.... கோவில்பட்டியில் உ.வாசுகி பேட்டி....

கோவில்பட்டி:
கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுகவின் கனவு இந்த தேர்தலில் தவிடுபொடியாகும். தமிழக மக்களின்எதிர்பார்ப்புகளை திமுகவின் தேர்தல் அறிக்கைபிரதிபலிப்பதால் ஆட்சி மாற்றம் நிகழும். தமிழகம் தலைநிமிரும் என்று உ.வாசுகி கூறினார்.           

கோவில்பட்டி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசனுடன் இணைந்து சனியன்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு வேட்பாளர்கள் பண பலத்தையும் அதிகார பலத்தையும்நம்பி இருக்கும் சூழலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்கள் பலத்தை மக்கள் சேவையை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறது. அரசியல் பலமும்அணி சேர்க்கையின் பலமும் நிச்சயமாக இந்தஅணிக்கு சாதகமாக இருக்கும். மக்களை காசுகொடுத்து விலைக்கு வாங்கி விடலாம் என்று கருதும் இதர சில கூட்டணிகளின் கனவு தவிடுபொடியாகும். திமுக தலைமையிலான ஒரு மாற்று ஆட்சி கண்டிப்பாக இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அமையும்.  திமுகவின் தேர்தல் வாக்குறுதி நீண்ட நாளைய தமிழக மக்களின் கனவுகளை பிரதிபலிப்பதாக உள்ளது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்  கொள்கிறோம். அந்த அணியின் சார்பாக கே.சீனிவாசன் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கூட்டணி கட்சிகளின் முழுமையான ஆதரவோடு களத்தில் நிற்கிறார். நிச்சயமாக ஆட்சி மாற்றம் நிகழும் தமிழகம் தலைநிமிரும்.

பத்தாண்டு காலமாக அதிமுகவின் ஆட்சி, 15 ஆண்டுகளாக கோவில்பட்டியில் அதிமுகசட்டமன்ற உறுப்பினர்கள். ஆனால் இன்றைக்கும் தேவையான சாலைகள் இல்லை. குடிநீர்  முழுமையாக கிடைக்கவில்லை.  அரசுமருத்துவமனை அவலமான நிலையில் உள்ளது.போதிய வசதிகள் இல்லை. இதையெல்லாம் மாற்றுவதற்கான வாய்ப்பை இந்த அணிக்கு வழங்க வேண்டும். கடுமையான பொருளாதார நெருக்கடியும், வேலையின்மையும் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 250 சதவிகிதம் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு மணி நேரமும் ஏராளமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிறார்கள்.

பொள்ளாச்சி வழக்கில்  அதிமுகவினர் கைது 
சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன.  தமிழக காவல்துறை அதிகாரிராஜேஷ்தாஸ் பெண் காவல் அதிகாரியிடம் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியது அதிர்ச்சி அளிக்கிறது. கடுமையான நிர்ப்பந்தத்துக்குபிறகுதான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த ஆட்சியில்தான் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு என பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள். இவை இந்த ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தெள்ளத்தெளிவாக வெளியில் வருகிறது. பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளாக அதிமுகவைச் சேர்ந்த ஊழியர்களும் தலைவர்களும்தான் அதிகமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் நீண்டகாலமாக கேட்டுக்கொண்டிருக்கும் பல கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. விவசாயிகள் தொடர்ந்து போராடுகிறார்கள். நான் விவசாயிஎன்று போகிற இடமெல்லாம் விளம்பரம்செய்கிறார் தமிழக முதல்வர். விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களுக்கு அந்த கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் ஆதரவளித்தார்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். நூறு நாள் வேலையை நூற்றைம்பது நாளாகபேரிடர் காலத்தில் உயர்த்த வேண்டும் என்கிற சட்டவிதிகூட இந்த ஆட்சியில் மீறப்படுகிறது.  

அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை நிரந்தர அரசுப்பணி என்பதை அவுட்சோர்சிங் செய்வதற்கான  அனைத்து ஏற்பாடுகளும் இந்த ஆட்சியில் உள்ளது. வேலை கிடைக்கும் என்று இளைஞர்களும் இளம்பெண்களும் நம்பி இருக்கும்போது மூன்றரை லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் பத்தாண்டுகளாக தமிழக அரசுஇழுத்தடித்து வருகிறது.  இதுபோல இங்குஇருக்கிற அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஆள் எடுக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களில் அங்குள்ள இளைஞர்கள் இளம்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திமுக தேர்தல் வாக்குறுதியில் இது உள்ளது. இந்த அரசு பத்தாண்டுகளில் எதையும் செய்யவில்லை. ஆனால் இன்று பல வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆறு சிலிண்டர்  இலவசம் என்பதெல்லாம் நகைச்சுவையாக இருக்கிறது.

மக்களுக்கு சிக்கல்களை உருவாக்கும்- தமிழக நலனை  தொடர்ந்து வஞ்சிக்கிற மோடி அரசோடு அவரது கட்சியான பாஜகவோடு அரசியல் ரீதியாக கூட்டணி வைத்துள்ள அதிமுகவால் எப்படி ஒரு சுயகவுரவத்தோடு கூடிய தமிழகத்தை உருவாக்க முடியும் என்று மக்கள் கேட்கிறார்கள். மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கும்- வேலையில்லா இளைஞர்களின் கனவை சிதைக்கும் பாஜகவுக்கும் அதற்கு காரணமான மோடி அரசுக்கும் அவர்களுக்கு துணைபோகும் தமிழக அரசுக்கு தலைமை வகிக்கும் அதிமுகவுக்கும் நிச்சயமாக இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்  என்றார். 

தீப்பெட்டித் தொழிலை பாதுகாக்க... 
கே.சீனிவாசன் கூறுகையில், 1979 முதல் இந்த பகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக நான் அவர்களுடன் இணைந்து போராடி வருகிறேன்.மக்கள் ஊழியன் என்கிற பலத்துடன் கூட்டணிக் கட்சிகளின் ஒன்றுபட்ட ஆதரவுடன் மக்களை சந்திக்கிறேன். அந்த எழுச்சியைத்தான் வேட்புமனு தாக்கலின்போது பார்க்கமுடிந்தது. இங்குள்ள முக்கியமான தொழில் தீப்பெட்டி உற்பத்தி. அதில் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் அனைத்து கட்சிகளையும் இணைத்து போராட்டம் நடத்தியுள்ளேன். தீப்பெட்டி தொழில் பாதுகாப்புக்குழு அமைத்து போராடி வெற்றி பெற்ற அனுபவம் உள்ளது.பாகிஸ்தான், சீன நாட்டு தீப்பெட்டி இறக்குமதியை தடைசெய்ய அப்போது மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலைஞர் முதல்வராக இருந்தபோது அதற்கான முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு இந்ததொழிலுக்கு தேவையான 40 வகையான மூலப்பொருட்கள் விலை ஏற்றம் ஏற்பட்டிருப்பது மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிராக 23 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடக்கவிருக்கிறது.

குடிநீர்ப் பிரச்சனையில் தவறான பிரச்சாரம்நடக்கிறது. திமுக  ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது சீவலப்பேரி குடிநீர் 2 ஆவதுதிட்டம். இன்று வரை அதை நிறைவேற்றாமல் கமிஷன் பெறும் நோக்கத்துடன் இழுத்தடிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவை மூடி கொரோனா வார்டாக மாற்றும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்றார்.பேட்டியின் போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ஜூணன், காங்கிரஸ் கட்சி தென் மண்டல பொறுப்பாளர் திருப்பதி ராஜா, திமுக நகரச் செயலாளர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் காமராஜ், சிபிஎம் நகரச் செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;