election2021

img

சிறுதொழில்களை பாதுகாக்க ஆட்சி மாற்றம் தேவை: கனிமொழி.எம்.பி...

கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் கே.சீனிவாசனை ஆதரித்து கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் வியாழனன்று செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் தலைமை வகித்தார்.  இதில் பங்கேற்று திமுகமகளிரணித் தலைவர் கனிமொழி எம்.பி., பேசியதாவது: 

இந்த ஆட்சியில் சிறுதொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்போது கொரோனா என்றால் அதற்கு முன்பு ஜிஎஸ்டி பாதிப்பு. இதற்கு எந்த உதவியையும் அரசு செய்யவில்லை.10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் இப்போது பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது அவற்றை செய்யாமல் தேர்தல் அறிக்கையில் அவற்றை செய்வதாக கூறுகிறார்கள். சென்றமுறை அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். செல்போன்கள் வழங்குவதாக கூறினார்கள். ஆனால் அவற்றை செய்யவில்லை. செல்போன் கொடுத்திருந்தால் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்விக்கு அது பயன்பட்டிருக்கும். தற்போது ரேசன் கடைக்கும் குடிதண்ணீருக்கும் பெண்கள் அலையும் நிலைதான் உள்ளது. குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றன.

மத்தியில் ஆள்கிறவர்கள் மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சியில் தொடரலாம் என நினைக்கிறார்கள். பிரிவினை, மக்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும். மக்களின் எதிர்காலபாதுகாப்புக்கு ஒற்றுமை தேவை. இந்த கூட்டணி மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் கூட்டணி. சமூக நீதியை பாதுகாக்கும் கூட்டணி, இந்த கூட்டணி வெற்றி பெற்றால்தான் நமது சுய அடையாளத்துடன் வாழ முடியும். இந்த தொகுதியில் கூட்டணி வேட்பாளரின் வெற்றி திமுகவின் வெற்றி, திமுகவின் வெற்றி தமிழகத்தின் வெற்றி. இவ்வாறு பேசினார்.

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, காங்கிரஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் சண்முகம், சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ்.அழகுமுத்து பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் இரா.மல்லிகா, காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் சு.காமராஜ், விசிக வடக்கு மாவட்ட செயலாளர் இ.கதிரேசன், ஐயுஎம்எல் மாவட்ட செயலாளர் மீராசா மரைக்காயர், தவாக மாவட்ட செயலாளர் என்.ஏ.கிதர் பிஸ்மி, ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பிரபாகரன், மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மதிமுக இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், தி.கவின் முனியசாமி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி முஸ்ஸம்மில், ஏஐஎப்பி மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசபாண்டி, ஆதிதமிழர் கட்சி மாவட்ட செயலாளர் செண்பகராஜ் மற்றும் கூட்டணி கட்சிகளின் கோவில்பட்டி நகரம், கோவில்பட்டி, கயத்தார் ஒன்றியம், பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

படக்குறிப்பு : கோவில்பட்டியில் சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசனை ஆதரித்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி எம்.பி., உரையாற்றினார். மேடையில் கீதாஜீவன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.

;