election2021

img

பாரதி புத்தகாலயத்தின் தேர்தல் பிரச்சார கையேடுகள் வெளியீடு....

சென்னை:
‘அறைகூவல் - சுயசார்பு, மதநல்லிணக்கம், சமூகநீதி’, எஸ்.விஜயன், மா.சிவக்குமார் தொகுப்பில் “எதிர்காலத்தை - உரிமைகளைப் பாதுகாப்போம்’ எனும் இரு பிரச்சார கையேட்டை பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ளது. இந்நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று (மார்ச் 20) பாரதி புத்தகாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நூல்களை வெளியிட, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாதர் சங்கத் தலைவர் கவிதா கஜேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், “இந்திய சமூகம் சந்திக்கும் அடிப்படையான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய, தொலைநோக்கு பார்வையோடு உருவாக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தை அடிப்படையாக கொண்டு அறைகூவல் எனும் சிறு நூல் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.

“மதச்சார்பின்மை -  மதச்சார்பு, ஜனநாயகம் - எதேச்சதிகாரம், சுயசார்பு - கார்ப்பரேட்மயமாக்கல் என வகையில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் பிரச்சனைகளை தீர்க்காத அதிமுக-பாஜகவை நிராகரிப்பதன் மூலமே மதச்சார்பின்மை, ஜனநாயகம் சுயசார்பை பாதுகாக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.“மத்திய ஆட்சியாளர்கள் சுயசார்பு என்று பேசிக்கொண்டே வங்கி உள்ளிட்ட பொதுத்துறைகளை விற்கின்றனர். எல்ஐசியை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த 18 ஆம் தேதி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர். 

அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் எல்ஐசியில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றுகிறார்கள். பாஜகவின் வகுப்புவாத, தாராள மயமாக்கல், எதேச்சதிகாரம் ஆகியவற்றை முறியடிக்க பாஜக-அதிமுக அணியை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை ‘எதிர்காலத்தை - உரிமைகளைப் பாதுகாப்போம்’ எனும் நூல் விளக்குகிறது என்றார்.இந்நிகழ்வில் இயக்குநர் ராஜூமுருகன், பாரதி புத்தகாலயம் நிர்வாகிகள் க.நாகராஜன், பி.கே.ராஜன், சிராஜூதின், எழுத்தாளர்கள் எஸ்.விஜயன், பசுகவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;