election2021

img

வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் அமைச்சருக்கு எதிராக போராட்டம்....

அண்மையில் கட்சியில் சேர்ந்தவருக்கு அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கரை கண்டித்தும் வேட்பாளரை மாற்றக்கோரியும் புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில்  போட்டியிட கடந்த முறை போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த ஞான.கலைச்செல்வன், முன்னாள் அமைச்சர் அ.வெங்கடாசலத்தின் மகன் ராஜபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திருமாறன் மகன் பாண்டியன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்து வாய்ப்புக்காக காத்திருந்தனர். இந்நிலையில், புதன்கிழமை மாலை அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் இணைந்த தர்ம.தங்கவேல்(43) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

  இதனால் அதிருப்தியடைந்த அதிமுகவினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சனிக்கிழமையும், ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் முன்னாள் சட்டப்பரவை உறுப்பினர் திருமாறன் மகன் பாண்டியன், ஞான.கலைச்சல்வன் தலைமையில் திரண்ட ஏராளமான அதிமுகவினர் அக்கட்சி கொடியை ஏந்தியவாறு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான சி.விஜயபாஸ்கரைக் கண்டித்தும், வேட்பாளரை மாற்றக்கோரியும் முழக்கங்கள் எழுப்பியவாறு ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலங்குடியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

;