election2021

img

அதிகார போதையின் உச்சம்.... அம்பலமானது எஸ்.பி.வேலுமணியின் நாடகம்....

கோயம்புத்தூர்:
பெண்ணின் காதில் இருந்து காதணியை திருடிவிட்டார்கள் என திமுகவினர் மீது எஸ்.பி.வேலுமணி பழிபோட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பெண் காதணியை கழற்றி பத்திரமாக வைத்த வீடியோ வெளியானது. அதிகார போதையில் எஸ்.பி.வேலுமணிநடத்திய நாடகம் அம்பலமானதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் கார்த்திகேயசிவசேனாபதி திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆரம்பத்தில், அவர் வெளியூர்க்காரர் என அமைச்சர் பிரச்சாரம் செய்துவந்தார். ஆனால், திமுக வேட்பாளரின்எளிமையான அணுகுமுறை, வாக்காளர்களை கவரவே வெளியூர்க்காரர் என்ற பிரச்சாரம் எடுபடாமல் போனது. மேலும் திமுகவிற்கான வெற்றி வாய்ப்புதொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கதிகலங்கிப்போன எஸ்.பி.வேலுமணி தனது தொகுதிக்குள்ளேயே முடங்கிப்போனார். 20 தொகுதிகளுக்கு பொறுப்பை ஏற்ற எஸ்.பி.வேலுமணி தான் மட்டுமாவது வெற்றிபெற வேண்டுமே என வேறு எந்த தொகுதிக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. இதனால் இதர தொகுதி அதிமுக வேட்பாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, தனது வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வது என்கிற அதிகார போதை அவரை ஆட்கொண்டது என்பதை ஒவ்வொரு நாளும் இவரின் நடவடிக்கை வெளிப்படுத்தியது.

கோவை மாவட்டத்தில் அதிகமான பணப்பட்டுவாடா நடைபெற்ற தொகுதிதொண்டாமுத்தூர் என்பதும், தேர்தல்பறக்கும்படை அதிகாரிகள் இதுவரையில் பறிமுதல் செய்ததில் தொண்டாமுத்தூர் தொகுதியிலேயே அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பதையும் காவல்துறை மற்றும் தேர்தல்அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பே காட்டிடும். அதனால் தோல்வி பயம் தொற்றிக்கொள்ள திமுகவினர் மீது பழிபோடும் திட்டங்களை அதிமுகவினர் தீட்டியதாகத் தெரிய வருகிறது. இதன் உச்சமாய் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் கரும்புக்கடை பகுதியில் திமுகவினர் உரிய அனுமதி பெற்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தபோது, எந்தவித அறிவிப்புமின்றி திமுகவினர் கூட்டம் நடத்திய இடத்திற்கு எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பிற்காக வந்துள்ளார். ஏதோ ஒரு திட்டத்தோடுதான் இவர்கள் வந்திருக்கிறார்கள் என்று திமுகவினர் முன்னெச்சரிக்கையோடு இருந்தனர். ஆனாலும் அதிமுகவினர் மோதல் திட்டம் வெற்றி பெற்றது.

இதனையடுத்து இருதரப்பை சேர்ந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிலர்காயமடைந்ததாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை எஸ்.பி.வேலுமணி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இச்சம்பவங்கள் அனைத்தும் அதிமுகவினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதுதற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திமுக மற்றும் அதிமுகவினரிடையே மோதல் நடைபெற்ற சம்பவ இடத்தில் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், திமுகவினர் பெண் ஒருவரின் காதில் இருந்த கம்மலை பறித்துச் சென்றனர் என்றும், பெண்களின் தாவணியை பிடித்து இழுத்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார்.  இது அப்பட்டமான பொய் என்பதை வீடியோ ஒன்று வெளியாகி எஸ்.பி.வேலுமணியின் நாடகத்தை  அம்பலப்படுத்தியுள்ளது.வைரலாகி வரும் அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட பெண் ஒருவர்தனது காதில் இருந்த கம்மலை கழற்றி பாதுகாப்பாக வைத்துக்கொண்டதும், இதன் பிறகே தள்ளுமுள்ளு நடைபெற்றதும் அந்த வீடியோவில் பதிவாகிஉள்ளது. தள்ளுமுள்ளுக்கு பிறகுசம்பந்தப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும், அவருக்கு எஸ்.பி.வேலுமணி ஆறுதல் சொல்லும் படங்களும் தற்போது வைரலாகி வருகிறது. அதிகார போதையில் எதையும் செய்யலாம் என்கிற எஸ்.பி.வேலுமணியின் திட்டம் மேலும் ஒருமுறை அம்பலப்பட்டு உள்ளது.

ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டாமுத்தூர் தொகுதியில் மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றபோது, பெண் ஒருவரை பங்கேற்கச் செய்து சலசலப்பு ஏற்படுத்தியதும், பின்னர் விசாரணையில் அவர் அதிமுக இளம்பெண்கள் பாசறை அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், திட்டமிட்டே கூட்டத்திற்குள் வந்ததும், பின்னர் எஸ்.பி.வேலுமணியுடன் செல்போனில் பேசியதும் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.பத்தாண்டு காலம் என்ன செய்தோம் என்று சொல்லி வாக்குகளை கேட்க வக்கற்று, அனுதாபத்தின் மூலம் வாக்குகளை பெறுகிற செயல் பொதுமக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

;