election2021

img

அரூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஏ.குமாருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு...

தருமபுரி:
அரூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் ஏற்கனவே 4 முறை வெற்றிப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் ஏ.குமாருக்குஅப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரே தனித் தொகுதி அரூர். 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தொகுதியில், 2011 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது, அரூர் தொகுதியில் இடம்பெற்றிருந்த ஊத்தங்கரை தனியாக பிரிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி) தொகுதியாக உருவாக்கப் பட்டது. மேலும், மொரப்பூர் மற்றும் பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் இடம்பெற்றிருந்த மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர் உள்ளிட்ட சில பகுதிகள் பிரிக்கப்பட்டு அரூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. இந்த தொகுதியில் உயரமான காடுகள் மற்றும் சமதளநில பரப்புகளுடன் கூடிய காடுகள் உள்ளன. அரூர் தொகுதியில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் மிதமான மழைப் பொழிவுகள் உண்டு. இத்தொகுதியில் வேளாண்மையே பிரதான தொழிலாகும். நெல், மஞ்சள், கரும்பு, மரவள்ளி கிழங்கு, தென்னை, வாழை, கேழ்வரகு, சோளம், தினை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. ஒருபகுதியில்மானாவரி பயிர்கள் பயிரிடப்படுகின் றன. பால் உற்பத்தியும் பிரதான தொழிலாக உள்ளது. இந்தப் பகுதியில் தொழிற்சாலை இல்லை. இதனால் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் நிலைமை தொடர்ந்து வருகிறது.

10 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்
அரூர் தனித்  தொகுதியில் ஆதிதிராவிடர்கள், அருந்ததியர்கள், மலைவாழ்பழங்குடியின மக்கள் கூடுதலாகஉள்ளனர். அத்துடன் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். அரூர் தொகுதியில் 362 வாக்குப் பதிவு யங்களும், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 62 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர். 1977, 1989 -ல் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்கள் எம். 
அண்ணாமலையும், 2006, 2011-ல் பி.டில்லிபாபுவும் வெற்றி பெற்றனர். அந்த  10 ஆண்டு காலத்தில் தொகுதியில் ஏராளமான வளர்ச்சி பணிகள், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரூர் கோட்டாட்சியர் அலுவலகம், அரசு கல்லூரி, அனுமன்தீர்த்தம் -  அம்மாபேட்டை  உயர்மட்ட பாலம் ,சிறு பாலம், தடுப்பணைகள், அரூரில் உள்விளையாட்டு அரங்கம், அரசு பள்ளிகளை  தரம் உயர்த்துதல், மலைக் கிராமங்களுக்கு சாலை மற்றும் பேருந்து வசதி, அரூர்அரசு மருத்துவமனை தரம் மேம்படுத்துதல் போன்ற அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

சிபிஎம் வேட்பாளர் ஏ.குமார்
தற்போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரூர் தொகுதி ஒதுக்கப்பட்டு, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் அரூரை அடுத்த சங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். மக்களின் கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்று அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். தற்போது வேட்பாராக அறிவிக்கப்பட்ட பிறகு தோழமைக் கட்சியினர், தொகுதி மக்கள்,  இளைஞர்கள்,பெண்கள் என அனைத்து தரப்பினரும் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். அரூர் தொகுதியில் சுற்று பயணம் மேற்கொண்டுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வேட்பாளர் ஏ.குமார், தொகுதி மக்களிடையே பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். 

அவர் பேசுகையில், அரூர் தொகுதி பழமையான தொகுதி.  இந்த தொகுதியில் தொழிற்சாலைகள எதுவும் இல்லாததால், வேலை வாய்ப்பைத் தேடி வெளிமாவட்ட, மாநிலங்களுக்கு குடிபெயரும் நிலை தொடர்கிறது. இங்கு நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. குடிநீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, காவிரி உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பிவிவசாயத்தை மேம்படுத்த முயற்சிமேற்கொள்ளப்படும். மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கைஎடுக்கப்படும். அதிமுக ஆட்சியில்முதல்வர் அளித்த செனாக்கல் நீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவேற்றவில்லை. இதை நிறைவேற்ற திமுக ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். மிகவும் பிரசித்திபெற்ற புண்ணியஸ்தலம் தீர்த்தமலை பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.இப்பகுதியில் மரவள்ளி கிழங்கு மானாவாரிபயிர் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. எனவே, அரசு சேகோ ஜவ்வரிசி தொழிற்சாலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். இது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

;