election2021

img

நிதி மறுப்பு... துரோகம் செய்த மோடி.... தலையாட்டிய எடப்பாடி.....

14ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் வரி பகிர்வில் இருந்து வந்த 4.96 சதவிகிதத்தை 4.023 சதவிகிதமாக பாஜக அரசு குறைத்து விட்டது.

2016-17ஆம் நிதியாண்டில் மத்திய வரிப் பகிர்விலிருந்து தர வேண்டிய நிதியினை ரூ.23,018.12 கோடியாக குறைத்துவிட்டது. மத்திய பட்ஜெட்டின்போது எதிர்பார்க்கப்பட்ட தொகை ரூ.24,538 கோடியாக இருந்தது.2015-16ஆம் ஆண்டு மத்திய வரியிலிருந்து கிடைக்க பெற்றது ரூ.20354.00 கோடியாகும். இது முந்தைய 204-15ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2.98 சதவிகிதம் மட்டுமே நிகர உயர்வாகும்.2019-20 ஆம் ஆண்டிற்காக மத்திய அரசின் வரவு - செலவு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு தொகை ரூ.33,978.47 கோடியாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த தொகை ரூ.26,392.40 கோடியாக திருத்தியமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் திருத்த மதிப்பீடுகளின் படி ரூ.14,195.26 கோடி  என கணிக்கப்பட்டுளள்து.மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் வரவு-செலவு திட்டத்தில் ஒரு தொகையையும் அதனை பின்னர் தன்னுடைய விருப்பம் போல வெட்டி சுருக்கி மாநிலங்களுக்கு தருவதையும் எதிர்த்து அதிமுக அரசு எந்த கண்டனத்தையும் முன்வைக்கவில்லை.

உள்ளாட்சி அமைப்புக்களின் நிதியிலும் வெட்டு 
தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தொகை 2020—21ம் ஆண்டு ரூ.5344 கோடியாக இருந்ததை, 2021-22ம் ஆண்டு ரூ.3,979 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்த மானியத்தொகையினை 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் கணிசமாக குறைத்துவிட்டது. 2016 முதல் 2020 வரையிலான காலத்திற்கு 8,232,31 கோடியாக இருந்தது. இது 2021 முதல் 2026 வரையிலான காலத்திற்கு 7.187 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியப் பங்கினை 90 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாகவும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 80 சதவிகிதமாகவும் வெட்டி சுருக்கிவிட்டது. 

வரிவிதிப்பிலும் சூழ்ச்சி
கடந்த மே 2020ல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது மேல்வரி மற்றும் கூடுதல் வரியினை விதித்தது. அதேபோல  2021-22ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் பெட்ரோல், டீசல் மீது விவசாய உட்கட்டமைப்பு மேம்பாட்டு மேல் வரி விதிக்கப்பட்டது.இவ்வாறு மேல்வரி, கூடுதல் வரி மற்றும் மேம்பாட்டு நிதி என்ற பெயரால் மத்திய அரசு வரியை உயர்த்தி அடிப்படை ஆயத் தீர்வை குறைத்துவிட்டது. இது மாநில வரி பகிர்வின் மீது  வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.
அதேபோல வருமான வரியிலும் கூடுதல் வரியினை விதித்துள்ளது. இதுவும் மாநில வரி பகிர்வுடன் இணைக்கப் படுவதில்லை. கூடுதல் வரி மற்றும் மேல் வரிகள் மூலம் வசூலிக்கப்படும் வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு பகிர்வு அளிக்கப்படுவதில்லை. எனவே இதன் மூலமாக மறைமுகமாக பாஜக அரசு, நிதியினை எடுத்துக்கொள்கிறது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுகளின் நிதி
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பகிர்வை 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக உயர்த்தியதைக் காரணம் காட்டி மாநில அரசின்  நிதியிலிருந்தே மத்திய அரசின் திட்டங்களுக்கும் செலவு செய்ய நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 2010-11 முதல் 2014-15 வரையிலான 14வது நிதிக்குழு ரூ.72,070 கோடியினை ஒதுக்கியது. 2015-16 முதல் 2019—20 வரையிலான காலத்திற்கு ரூ.1.59லட்சம் கோடி கிடைக்கும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் 121 சதவிகிதம் உயர்வு தான் கிடைத்துள்ளது. அதேசமயம் அகில இந்திய அளவில் சராசரியாக 173 சதவிகிதம் மாநிலங்கள் பெற்றுள்ளன. குறிப்பாக கர்நாடகா - 198 சதவிகிதம், மகாராஷ்டிரா - 191 சதவிகிதம், ஒடிசா - 166 என்ற விகிதத்தில் பெற்றுள்ளன. ஒரு பக்கம் நிதியினை வெட்டுவதும் மறுபுறம் மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசை நிர்ப்பந்திப்பதும் என இரட்டை தாக்குதலை பாஜக அரசு மாநிலங்களின் மீது சுமத்துகிறது.

எஸ் ஏ மாணிக்கம் 

;