election2021

img

பொய்களை வீசிய மோடி... ஸ்டாலின் தந்த பதிலடி....

மதுரைக்கு வந்து பிரதமர் மோடி  பேசிவிட்டு சென்றிருக்கிறார்.  என்ன பேசுகிறார் தெரியுமா? எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வருவது மட்டுமல்ல, சிறப்பாக இருக்கும் என்று பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா?

15 மாநிலங்களில் எய்ம்ஸ் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். மற்ற எல்லா மாநிலங்களிலும் வேலையைத் தொடங்கி விட்டீர்கள். அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிவிட்டீர்கள். ஆனால் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கவில்லை. ஆனால் சிறப்பாகச் செய்வோம் என்று சொல்கிறீர்களே எப்படி?ஒரு சினிமாவில் வடிவேலு சொல்வார், ‘வரும் ஆனா வராது’ என்று, அதுபோலத்தான் இருக்கிறது.

அது மட்டும் சொல்லவில்லை. தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார். அது என்ன எண்ணற்ற திட்டம். எய்ம்ஸ் திட்டமே சிரிப்பாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு யோக்கியதை இல்லை.ஆனால் இப்போது பொய்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார் மோடிஅவர்கள். அவர் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார். மத்திய அரசு அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது என்று சொல்லி இருக்கிறார். இது அபாண்டமான ஒரு பொய்.

இதைத்தான் ஏற்கனவே பன்னீர்செல்வம் அவர்கள் சொன்னார். அப்போதே நான் சொன்னேன். இது உங்களாலும் வரவில்லை, பன்னீர்செல்வம் அவர்களாலும் வரவில்லை, பிரதமராலும் வரவில்லை. ஜல்லிக்கட்டு நாயகர்கள் என்றுதமிழ்நாட்டு இளைஞர்களைத்தான் சொல்லவேண்டும். அவர்கள் போராடிய போராட்டத்தினால்தான் அது வந்தது. அதை மறந்து விடாதீர்கள்.மெரினா கடற்கரையில் போராட்டத்தை அந்த இளைஞர்கள் நடத்தினார்கள். அவர்கள்அந்தப் போராட்டத்தை நடத்தவில்லை என்றால் இந்த அனுமதியை கொடுத்திருப்பார்களா? 

2016-இல் மத்திய அமைச்சரவையில் ஒருமுக்கியமான அமைச்சராக இருக்கும் பிரகாஷ்ஜவடேகர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தார்கள். அப்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுப்போம் என்று சொல்லி விட்டுச் சென்றார். ஆனால் மறுபடியும் இந்த பிரச்சனை வந்தபோது பிரதமர் என்ன சொன்னார் என்றால், இந்தப் பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இப்போதைக்கு முடியாது என்று திட்டவட்டமாகச் சொன்னார்.அதற்குப் பிறகு மெரினா போராட்டம்மிகப்பெரிய அளவில் நடக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டின் சார்பில் நாங்கள் சட்டமன்றத்தில் பேசி அதற்குப் பிறகு, இந்த சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டத்தைப் போட்டு நிறைவேற்றி அனுப்பினோம். பிறகு வேறு வழியில்லாமல் மத்திய அரசு அதை ஒத்துக் கொண்டது. அதைப் புரிந்து கொள்ளுங்கள்.அந்தப் போராட்டம் நடந்தபோது அதில் கலந்து கொண்ட இளைஞர்களைக் கலைப்பதற்காக போலீஸ் தடியடி நடத்தியது. ஒரு கலவரத்தை ஏற்படுத்தினார்கள்.   ஒரு ஆட்டோவிற்கு போலீசே தீ வைத்து, அந்தத்தீயை வைத்தது போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்தான் என்று ஒரு பொய் வழக்குப் போட்டு, பெரிய கலவரத்தை நடத்தியதை இந்தநாடு மறந்துவிடாது.

அதுமட்டுமல்ல, தாராபுரத்தில் என்ன பேசினாரோ, அதையே மறுபடியும் மதுரையில் மோடி பேசியிருக்கிறார். தி.மு.க.வால் - காங்கிரசால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றுபேசியிருக்கிறார்.நான் கேட்கிறேன், கடந்த பத்து வருடங்களாக யாருடைய ஆட்சி? தி.மு.க. ஆட்சியா?காங்கிரஸ் ஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சி கடந்தபத்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. நான் அப்போதே சொன்னேன். பிரதமர் அவர்களே… தாராபுரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தான் பொள்ளாச்சி. அந்தப் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் பிரதமருக்குத் தெரியாதா? 

அதுமட்டுமல்ல, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது காவல் துறை. அந்தக் காவல்துறையில் ஒரு பெண் எஸ்.பி.க்கு ஏற்பட்ட நிலை என்ன? அந்தப் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார்? அந்த எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவல்துறையின் தலைவராக இருக்கும் டி.ஜி.பி.அதுவும் ஸ்பெஷல் டி.ஜி.பி. அவர் முதலமைச்சர் பழனிசாமிக்கு, எல்லா வகையிலும் பக்கபலமாக இருப்பவர். அதுவும் விசாரணையில் இருக்கிறது. அது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?
இதே அ.தி.மு.க. ஆட்சியில், ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்காக, அ.தி.மு.கவினர் ஆத்திரமடைந்து, ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்து சென்ற கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் மூன்று பேரை, பேருந்துடன் சேர்த்து, உயிரோடு தீவைத்துக் கொளுத்திக் கொன்றார்களே!நான் கேட்கிறேன், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க.வைப் பார்த்து குறை சொல்கிறீர்களே… நீங்கள் ஆளுகின்ற மாநிலத்தில் இருக்கும் நிலை என்ன? உங்களுடைய ஆட்சி நடக்கும் மாநிலம்தான் உத்தரப்பிரதேச மாநிலம். இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாலியல் தொல்லைகள் நடக்கும்மாநிலம் உத்தர பிரதேச மாநிலம் என்று மத்திய அரசின் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. அதைப் பற்றிப் பேசுவதற்கு பிரதமராக இருக்கும் மோடிக்கு மனது வரவில்லை.

மோடி அவர்கள் எங்கு போனாலும் அந்தமாநிலத்தில் இருக்கும் சிறப்புகளைப் பேசுவதுஅவருக்கு வழக்கம். இன்றைக்கு மதுரைக்கு வந்தபோது உலகில் தொன்மை வாய்ந்த தமிழைச் சங்கம் வைத்து வளர்த்தது மதுரை என்று பேசியிருக்கிறார்.மதுரை குறித்து அப்படிப் பெருமையாக நீங்கள் பேசியதை நான் வரவேற்கிறேன். அதுமகிழ்ச்சிதான். ஆனால் நான் கேட்பது, மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் கீழடியின் தொன்மையை ஆராய்ச்சி செய்ய ஏன் இதுவரை பிரதமர் அனுமதி தரவில்லை? இந்தியைத் திணித்து, சமஸ்கிருதத்தை வளர்க்க நினைக்கும் உங்களைத் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்பது உறுதி. உங்களுக்கான தண்டனை தான் வருகின்ற ஆறாம் தேதி. அந்த தண்டனையை வழங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

குமரி துறைமுகம்...?
பிரதமர் மோடி கன்னியாகுமரியிலும் பேசிவிட்டு சென்றிருக்கிறார்.  கன்னியாகுமரியில், மீனவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த - பெயரைச் சொல்லாமல் - துறைமுகம் கொண்டு வருவோம் என்று பேசியிருக்கிறார். அந்த இனயம் துறைமுகத்தை வேண்டாம் என்று அந்தப் பகுதியில் இருக்கும்மீனவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.நான் பலமுறை குமரிக்குச் சென்றிருக்கிறேன். அங்கிருக்கும் பேராயர்கள் என்னைச் சந்தித்து, அது தேவையில்லாதது, அதற்கு நீங்கள் அனுமதி கொடுக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு நான், நிச்சயம் தி.மு.க. ஆட்சியில் அது வராது என்றுசொல்லிவிட்டு வந்தேன்.

அதற்குப் பிறகு முதலமைச்சர் பழனிசாமி அந்த மாவட்டத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போது அவர், “ஸ்டாலின் பொய் சொல்கிறார். அந்தத் திட்டத்தை நாங்கள் கொண்டு வருவதாக இல்லை. ஆனால் கொண்டு வருவதாகச் சொல்லி அந்தத் திட்டத்தைத் தடுத்து விடுவேன் என்று ஒரு பொய் சொல்லிட்டுச் சென்றிருக்கிறார்” என்று பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார்.நான் அங்கு பேசியபோது, ஆதாரத்தைக் கையில் வைத்துக்கொண்டுதான் சொன்னேன்.மத்திய அரசு, ஆணை பிறப்பித்திருக்கிறது. இது முதலமைச்சருக்கு எவ்வாறு தெரியாமல் போனது? தெரியும். இருந்தாலும் தேர்தல் வரும் காரணத்தினால் அதை மூடிமறைத்து, நான் பொய் சொல்கிறேன் என்று பேசியிருக்கிறார். வெள்ளியன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள், நாங்கள்அதைக் கொண்டு வருவோம் என்று பேசியிருக்கிறார்.ஆனால் இங்கிருக்கும் முதலமைச்சர், நான் ஏதோ பொய் சொல்லி விட்டதாக, அதை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இது மக்களிடம் வாக்கு வாங்குவதற்காகப் போடப்படும் நாடகம். 

மீனவர்களின் வேதனை
பிரதமர் அவர்கள், மீனவர்களைப் பாதுகாப்பதுதான் என்னுடைய அரசின் முன்னுரிமை என்று ஒருஅபாண்டமான பொய்யைச் சொல்லி இருக்கிறார். பிரதமர் அவர்கள் தில்லியில் இருந்து வருகிறார் என்றால் பண மூட்டையுடன் வரு
கிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பண மூட்டை மட்டுமல்ல, பொய் மூட்டையும் கொண்டு வந்திருக்கிறார்.பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ஏழு வருடங்களில் என்னென்ன நடந்திருக்கிறது? 2015-இல் தாக்குதல் நடந்திருக்கிறது. 2016-இல் தாக்குதல் நடந்திருக்கிறது. 2017-இல் தங்கச்சிமடத்தில் தாக்குதல் நடந்திருக்கிறது. அதில் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டிருக்கிறார். 2018-இல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடந்து, அதில் படகுகள் சேதம் ஆகியிருக்கின்றன. 2020-இல் இலங்கை கடற்படை தாக்கி இருக்கிறது. அவ்வாறு தாக்கியது மட்டுமல்ல, 28 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். அது வீடியோவாகப் பதிவாகி வெளியாகியிருக்கிறது.

2021 ஜனவரியில் மேவியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் ஆகிய 4 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.இவ்வாறு நம்முடைய மீனவர்களை மிரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளைப் பறிப்பது போன்ற பல்வேறு அராஜகங்களை அளவில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. அரசு இதைக் கண்டுகொள்வதே இல்லை. மோடியும் இதைப்பற்றிக்கண்டு கொள்வதே இல்லை. இங்கு பழனிசாமிதலைமையில் இருக்கும் அடிமை அரசும் அதைத் தட்டிக் கேட்பதில்லை.

பழனிசாமி ஆட்சியைப் பொறுத்தவரையில் மீனவர்களை எவ்வாறு ஏமாற்றுவது என்பதில்தான் அவருடைய செயல்பாடு இருந்து கொண்டிருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 2012-ஆம் ஆண்டு மீனவர்களுக்கான ஒரு திட்டத்தை அறிவித்தார். அந்தத் திட்டத்திற்கு ‘நாகை பசுமை சூழ் துறைமுகம்’ என்று பெயர் வைத்தார்கள்.அவ்வாறு அறிவித்தார்களே தவிர, இப்போது 2021. அது என்ன ஆனது? இப்போதுஇருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அந்தத் திட்டத்தின் பெயரையே மறந்திருப்பார்.

இன்றைக்குக் காலையில் தினமலர் பத்திரிகையில் ஒரு செய்தி படித்தேன். சுவரேறி குதித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியின் அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். என்னுடைய கையில் அந்தப் பத்திரிகை இருக்கிறது.‘நீங்கள் இலங்கைக் கடலில் மீன் பிடிக்கலாம் - என்று மீனவர்களிடம் அள்ளி விட்ட அமைச்சர்’ என்று, அவர்களே கேலி செய்து தலைப்புப் போட்டிருக்கிறார்கள்.‘ஜூன் மாதம் முதல் நீங்கள் இலங்கையின் எல்லையில் மீன் பிடிக்கலாம்’ என்று மீனவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார். உண்மை நிலை என்ன? இந்திய எல்லையில், சர்வதேச எல்லையில் மீன்பிடித்தாலே இலங்கைக் கடற்படை வந்து சுடுகிறது. அங்கு வந்து கொடுமைசெய்கிறது. இதில் இலங்கை போகலாம் என்றுசொல்கிறார் ஓ.எஸ்.மணியன். மீனவர்களை ஏமாற்றும் வேலையைச் செய்யாதீர்கள். நீங்கள்தான் ஏமாறுவீர்கள்.

;