election2021

img

மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அல்ல.... சமஸ்கிருத வளர்ச்சித் துறை அமைச்சர்..... மு.க.ஸ்டாலின் விமர்சனம்....

திருநின்றவூர்:
கீழடி தமிழர் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்று சொல்லி மழுங்கடித்த மாஃபாபாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அல்ல, சமஸ்கிருத வளர்ச்சித் துறை அமைச்சர். அவரைத் தோற்கடிப்பது முதல் கடமை என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

திருநின்றவூரில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பாழ்பட்டுப் போயிருக்கிறது. ஐம்பதாண்டு காலம் பின்னோக்கிச் சென்றிருக்கிறது. ஆனால், தமிழக முதல்வர் பழனிசாமி, ஊர் ஊராகச் சென்று நான் சிறப்பாக ஆட்சி நடத்துகிறேன். சிறப்பாக மக்களுக்காகத் தொண்டு செய்கிறேன்- எனக்குப் பல விருதுகள் வந்து சேர்ந்துள்ளன என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.மொத்தம் 20 மாநிலங்களில் கணக்கெடுத்ததில் விவசாயத்தில் தமிழ்நாடு 19 ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த லட்சணத்தில் நான் வாங்கிய விருதுகளை திமுக வாங்கி இருக்கிறதா என்று ஒரு கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக் கிறார். திமுக வாங்கிய விருதுகளை நான் சொன்னால் ஒரு நாள் போதாது. 

ஆவடி தொகுதி மக்களுக்கு ஒரு முக்கியக் கடமை இருக்கிறது. மாஃபா பாண்டிய ராஜனை தோற்கடிக்க வேண்டும். அதிமுகவில் இருந்து கொண்டு பாஜக கட்சியை நடத்துகிறவர். அதனால்தான் அவரைக் குறிப்பிட்டுச்சொன்னேன்.கீழடி தமிழர் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்று சொல்லி மழுங்கடித்த அவர் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அல்ல; சமஸ்கிருத வளர்ச்சித் துறை அமைச்சர். அவர் அதிமுகவில் இருப்பதற்கு முன்பு, அவரை ஒரு கட்சியில் இருந்து அந்தக் கட்சியின் தலைவர் நீக்கினார் என்பது உங்களுக்குத் தெரியும். ஏன் நீக்கினார்?

அவர் மாஃபா பாண்டியராஜனாக அல்லாமல், மாஃபியா பாண்டியராஜனாக இருந்தார்.அதனால் கட்சியை விட்டு நீக்கினார். அதற்குப்பிறகு அதிமுகவில் சேர்ந்தார். இப்போது பாஜகவின் ஊதுகுழலாக அதிமுகவில் இருந்து கொண்டிருக்கிறார். அந்த மாஃபியா பாண்டியராஜனை இந்தத் தொகுதியில் இருக்கும் மக்கள் துரத்தி அடிக்க வேண்டும். அதுதான் உங்கள் கடமை.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று இரவு அம்பத்தூரில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில், அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் வெற்றி அழகன், அண்ணாநகர் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன், மதுரவாயல் திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி ஆகியோரை ஆதரித்தும்; 
திருநின்றவூரில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் சா.மு.நாசர், திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், பூவிருந்தவல்லி தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் சந்திரன் ஆகியோரை ஆதரித்தும்; திங்களன்று காலை தூத்துக்குடியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன், திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா, விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்கண்டேயன், கோவில்பட்டி தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சீனிவாசன், திருவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தராஜ் ஆகியோரை ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

;