election2021

img

எளிய மக்களின் சிரமத்தை உணர்ந்தவர் எம்.சின்னத்துரை.... திரைக்கலைஞர் ரோகிணி பேச்சு....

புதுக்கோட்டை:
எளிய மக்களின் சிரமத்தை உணர்ந்த எம்.சின்னத்துரை அவர்களுக்காக உழைப்பார் என்றார் திரைக்கலைஞர் ரோகிணி.

கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு வாக்குக்கேட்டு தட்டாமனைப்பட்டி, ரெகுநாதபுரம், மணமேடை, மருதன்கோன்விடுதி நால்ரோடு, கறம்பக்குடி, கிள்ளுக்கோட்டை, அண்டக்குளம், கந்தர்வகோட்டை ஆகிய இடங்களில் திரைக்கலைஞர் ரோகிணி, தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, திரைப்பட இயக்குநர் லெனின்பாரதி ஆகியோர் ஞாயிறன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிரச்சாரத்தில் நடிகை ரோகிணி பேசியது:

தேசிய கல்விக்கொள்கை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது மட்டுமல்ல. மாணவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கும் நடவடிக்கையுமாகும். மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயதுகுழந்தைக்கு பொதுத் தேர்வு என்றால் அக்குழந்தையின் மனநிலை என்னாகும்? இப்படி நமது கல்வி உரிமைகள் மீது மத்திய அரசு தொடுக்கும் தாக்குதலுக்கு பாடம் புகட்டியாக வேண்டும்.

நல்ல சந்தர்ப்பம்
இங்கே நடப்பது சட்டமன்றத் தேர்தல்தானே. மத்திய அரசுக்கும் இதற்கும் சம்மந்தம் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் அதிமுக கூட்டணியை ஆதரிக்காமல் இருந்தாலே அதுபாஜகவை எதிர்ப்பதாக இருக்கும். தவறுகளை தட்டிக்கேட்காமல் இருப்பது மட்டுமல்ல. மவுனமாக இருப்பதும் குற்றம்தான். அந்த வகையில் அதிமுக கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே இங்கு பிரச்சாரத்துக்கு வந்திருக்கிறேன். இதன் மூலம் பாஜகவுக்கு பாடம்புகட்ட நல்லசந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது. இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

இங்கே வேட்பாளராகப் போட்டியிடும் எம்.சின்னத்துரை எளிமையானவர். அவரது மனைவிஇன்னும் நூறுநாள் வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார். மக்களின் சிரமத்தை உணர்ந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் வெற்றிபெற்ற சு.வெங்கடேசன் எவ்வளவு சிறப்பாக பணியாற்றுகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரை போல சின்னத்துரையும் உங்களுக்காக உழைப்பார். இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நாம் பெரிய பாதிப்பை சந்திக்க நேரும் என்றார்.

தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசியது: கொரோனா தொற்று வராமல்இருந்திருந்தால் குடியுரிமை சட்டத்தைக் கொண்டுவந்து பலரை நாடற்றவர்களாக பாஜகவினர் அறிவித்திருப்பர். அசாம், மேற்குவங்கம் போன்றமாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊரடங்குவிலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு குடியுரிமை சட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்திருக்கிறார். பாஜக கொண்டுவந்த குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்களை ஆதரித்துவிட்டு இப்பொழுது எதிர்க்கிறோம் என்கிறார் எடப்பாடி. நாட்டில் மத ரீதியாக, சாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜகவையும், அதோடு கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவையும் இந்தத் தேர்தலில் துடைத்தெறிய வேண்டும் என்றார்.இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது, நீங்கள் இரட்டை இலையில் போடும் ஒவ்வொரு ஓட்டும் தாமரைக்கே சொந்தமாகும் என்றார்.

;