election2021

img

ஆயிரம் கோடியில் வெற்றி நடை விளம்பரம் கடம்பூர் ராஜுவின் ஒரே சாதனை.... சு.வெங்கடேசன் எம்.பி....

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் வெற்றிபெற்று செய்தித்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு செய்த ஒரே சாதனை ரூ.1000 கோடிக்கு ‘தமிழகம் வெற்றிநடை போடுகிறது’ என விளம்பரம் கொடுத்ததுதான் என சு.வெங்கடேசன் எம்.பி கூறினார்.

கோவில்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசனை ஆதரித்து பல்வேறு இடங்களில் சு.வெங்கடேசன் வெள்ளியன்று (மார்ச் 26) வாக்கு சேகரித்தார். இடைச்செவல் கிராமத்தில் அவர் பேசுகையில், கடந்த பத்தாண்டு காலம் ஆட்சி நடத்தி தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் தங்கள் சொந்த நலன்களுக்காக அதிமுகவினர் விற்றுவிட்டார்கள். அடிமைகளுக்கும் சுதந்திரமானவர்களுக்கும் இடையில் நடக்கும் தேர்தல்.
இடைச்செவல் என்கிற இந்த கிராமம் தமிழின் மகத்தான 2 எழுத்தாளர்களை தந்த கிராமம். கு.அழகிரி சாமியும், கி.ராஜநாராயணனும் தங்கள் எழுத்துகளில் வடித்த விவசாயத்தை குழிதோண்டி புதைக்கிற 3 சட்டங்களைபாஜக கொண்டு வந்துள்ளது.

அந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு இன்று தேர்தல் வந்ததும் அந்தசட்டங்களை நிறுத்தி வைக்க ஆலோசனை செய்கிறோம் என்று எடப்பாடி கூறுகிறார். விவசாயம் உட்பட நமது உரிமைகளை காவு கொடுத்தவர்களின் அரசு இது. அதற்கு இந்த தேர்தல் மூலம் ஒரு பாடம் புகட்ட வேண்டும்.இந்த தொகுதியில் வெற்றி பெற்றுஅமைச்சரான கடம்பூர் ராஜு அவர்பொறுப்பு வகிக்கும் செய்தி விளம்பரத்துறை மூலம் வெற்றிநடைபோடும் தமிழகம் என கடந்த 6 மாதங்களில் ரூ.1000 கோடிக்கு விளம்பரம் கொடுத்துள்ளார். ஆனால் கொரோனா பாதிப்புக் கான நிவாரணமாக இந்த அரசு வழங்கியது ரூ.2400 கோடி மட்டும்தான். ஆயிரம் கோடி விளம்பரத்தில் கமிஷன் எவ்வளவு? இது குறித்து தேர்தல்ஆணையத்திடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது. இன்னொருவர் இங்கே போட்டியிடுகிறார். சென்னையில் இருக்கும் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று 3 ஆண்டுகளாக அந்த தொகுதிபக்கம் போகாதவர் கோவில்பட்டிக்கு வருவாரா? என்பதை சிந்தித்து பாருங்கள். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.

தொகுதிக்கு உட்பட்ட வில்லிசேரி, சத்திரப்பட்டி, கோவில்பட்டி 3வது செக்கடி தெரு, காமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் கே.சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ராமு பாண்டியன், மதிமுக ஒன்றிய  செயலாளர் அழகர்சாமி, மாணவரணி செயலாளர் ராஜகுரு, காங்கிரஸ் வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி,  சேவகர், சிபிஐ மாவட்ட செயற்குழு சேதுராமலிங்கம், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு, தமுஎகச மாநில கவுரவ தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;