election2021

img

கே.பாலகிருஷ்ணன் அறைகூவல்...1 ஆம் பக்கத் தொடர்ச்சி...

1 ஆம் பக்கத் தொடர்ச்சி... 

வீடே இல்லை; குடிப்பதற்கு கஞ்சி இல்லை; செய்வதற்கு வேலை இல்லை; இருக்கிற வீடுகளில் பலவற்றில் கழிப்பறைவசதியே இல்லை; ஏராளமான கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் குடிநீர் வசதி இல்லை; பல்லாண்டு காலமாக புறம் போக்கில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுக்க துப்பில்லை; இன்னும் கூட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் கையால் மலம் அள்ளி தூய்மை செய்யும் அந்தக் கொடுமை என்பது நீடிக்கிறது. ஆட்சியில் இருந்த காலத்தில் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், இப்போது வாஷிங் மெஷின் தரப் போகிறார்களாம்.

கடந்த தேர்தலில் இப்படித்தான் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டது அதிமுக. எல்லோருக்கும் இலவச செல்போன் தரப்போகிறோம் என்றார்கள். 10 லட்சம் வீடுகள்கட்டித் தருவோம் என்று சொன்னார்கள். அப்படி வாக்குறுதிகளை அள்ளி விட்டோம், அவை என்னாயிற்று என்பதைப் பற்றி இந்தத் தேர்தல் அறிக்கையில் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

ஈவிரக்கம் இல்லை அலட்சியத்தின் உச்சம்
ஆனால் இவர்கள் கடந்த 4 ஆண்டு காலத்தில் எத்தனைஎத்தனை கொடுமைகளை தமிழக மக்களுக்கு இழைத்திருக்கிறார்கள். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 உயிர் களைப் பறித்தார்கள்; ஊடகங்களில் பார்த்துத்தான் நானேதெரிந்து கொண்டேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாக்கூசாமல், கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் கூறினார்.கொரோனா என்ற பெரும் ஆபத்து வரப் போகிறது என்று தெரிந்தும்கூட, அதைப் பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் போது, மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஏதும் இன்றி, அது ஒரு பிரச்சனை இல்லை. இரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்று அலட்சியத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியவர் முதலமைச்சர் தான். அதனுடைய விளைவுஎன்ன? பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். தமிழகமே துயரத்தின் பிடியில் சிக்கியது. ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. முற்றிலும் கையாளாகாத அரசாக அம்பலப்பட்டு நின்றது அதிமுக அரசு.

நிராதரவாக விடப்பட்ட இளைஞர்கள்
இவர்களது ஆட்சியில் தமிழகத்தின் நிதி நிலைமை அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. கடன் வலை விரிந்து பரந்து தமிழகத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்களின் நிலைமையும், அதை நம்பியிருக்கும் லட்சோப லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் நிலைமையும் துயரத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது. லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள போதிலும், அவற்றை நிரப்பாததன் விளைவாக, தமிழகத்து இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி நிராதரவாக விடப்பட்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கதி இப்படி இருக்க, அமைச்சர்களின் பைகள் மட்டும் நிரம்பிக் கொண்டேயிருக்கின்றன. இவர்கள் அடித்த கொள்ளையை, ஊழலை பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே செல்லலாம். முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பெண்களுக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்பு இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளையும் கொடுமைகளையும் தடுத்து நிறுத்த அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்யப்படவில்லை. பொள்ளாச்சியே அதற்கு சாட்சி. உச்சகட்டமாக, தமிழக காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற அதிகாரியே, தனக்கு கீழே வேலைசெய்யும் பெண் உயரதிகாரியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்குகிற இழிவை அதிமுக ஆட்சியில் தமிழகம் சந்திக்கிறது.இவர்களது ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை வானத்தில் பறக்கிறது. சமையல் எரிவாயு விலையை கேட்டாலே தாய்மார் களின் வயிறு எரிகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் தீயிட்ட புழுக்களாக துடித்துக் கொண்டுள்ளனர். இத்தனைக்கும் பிறகும், இந்த ஆட்சி நீடிப்பது தமிழக மக்களை காவு கொடுப்பதற்கே இட்டுச் செல்லும்.

வெற்றி முரசு கொட்டுவோம்!
அதனால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை வீழ்த்துவோம்; அதிமுகவின் மீது ஏறி தமிழகத்தை மதவெறி மண்ணாக மாற்ற முயற்சிக்கும் பாஜகவை முற்றாக முறியடிப்போம் என்ற முழக்கத்தோடு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஓர் அங்கமாக களம் காண்கிறது.பாஜக அதிமுக அணியை முறியடிப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதே இந்த தேர்தலில் தாரக மந்திரம்.தமிழகத்தில் எட்டு திசையிலும் இந்த கோஷம் எதிரொலிக்க வேண்டும். 234 தொகுதிகளில் வேட்பாளர்கள் நாம் என்ற முறையில் களம் காண வேண்டும். கூட்டணி கட்சி நிர்வாகிகள், நடுநிலையாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து களம் காண்போம், கண்துஞ்சாமல் கடமையாற்றுவோம். வெற்றி முரசு எட்டுதிசைக்கும் கொட்டட்டும்.
 

;